உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்த - சுமார் 400 ஆண்டு கால பழமை வாய்ந்த பாபரி மஸ்ஜித், 1992ஆம் ஆண்டு டிசம்பர் 06ஆம் தேதியன்று இந்துத்துவ அமைப்பினரால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, ஆண்டுதோறும் டிசம்பர் 06ஆம் நாளில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பல்வகைப் போராட்டங்களும், கருத்தரங்கங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. துவக்கத்தில் பல அமைப்புகள் கடையடைப்புக்கு அழைப்பு விடுக்க, அதன்படி காயல்பட்டினத்தில் கடைகள் அடைக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக எந்த அமைப்பும் கடையடைப்புக்கு அழைப்பு விடுக்காத நிலையிலும் – காயல்பட்டினத்திலுள்ள பெரும்பாலும் அனைத்துக் கடைகளும் ஆண்டுதோறும் டிசம்பர் 06ஆம் நாளன்று அடைக்கப்படும் நிலையுள்ளது.
அந்த வகையில், நிகழாண்டு டிசம்பர் 06ஆம் நாளான நேற்றும் காயல்பட்டினத்தில் கடையடைப்பு செய்யப்பட்டது. முதன்மைச் சாலை, கூலக்கடை பஜார், ஸீ-கஸ்டம்ஸ் சாலை உள்ளிட்ட – வணிக நிறுவனங்கள் நிறைந்துள்ள பகுதிகளில் பெரும்பாலும் அனைத்துக் கடைகளும் நேற்று அதிகாலை முதல் 18.00 மணி வரை அடைக்கப்பட்டிருந்ததால், அப்பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
நிகழாண்டு டிசம்பர் 06ஆம் நாளில் – தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக), மனிதநேய ஜனநாயகக் கட்சி (மஜக) ஆகிய அமைப்புகளின் சார்பில் போராட்ட அறிவிப்புகள் அடங்கிய விளம்பரச் சுவரொட்டிகள் நகரின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தன.
சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) கட்சியின் சார்பில், நேற்று 17.00 மணியளவில் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் அக்கட்சியினர் உட்பட காயல்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு, கண்டன முழக்கமிட்டனர்.
படங்களுள் உதவி:
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல்
|