பாகம் 01 | பாகம் 02 | பாகம் 03 | பாகம் 04 | பாகம் 05 | பாகம் 06 | பாகம் 07 | பாகம் 08 | பாகம் 09 | பாகம் 10 | }
காயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் எவ்வளவு பணத்தை விட்டுச் சென்றுள்ளார் என்பது குறித்த தகவல்களை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-
ராஜினாமா கடிதம் சமர்ப்பிக்கப்பட்டபிறகு அதனை வாபஸ் வாங்கும் வழிமுறை சட்டத்தில் இல்லையென்றாலும், அப்போதைய ஆளும் கட்சியின் தலையீட்டினை தொடர்ந்து - நகரமன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் - தன் பதவியில் தொடர்ந்தார். இருப்பினும் - இந்த சம்பவத்திற்கு பிறகு, காயல்பட்டினம் நகராட்சியின் அதிகார மையம், துணைத்தலைவர் பக்கம் மாறியது.
காயல்பட்டினம் நகராட்சியில் லஞ்சம் / ஊழல் / முறைக்கேடு / நிர்வாக சீர்கேடு - தலைவிரித்தாடியது.
2006 - 2011 காலகட்டத்தில் அரங்கேறிய பல்வேறு முறைக்கேடுகளை, ஓரளவு - தமிழக அரசின் உள்ளாட்சி மன்றங்களின் தணிக்கைத்துறை (LF AUDIT) ஆவணப்படுத்தியுள்ளது. அந்த அவலங்களை இங்கு முழுமையாக வரிசைப்படுத்த அவசியமில்லை என்றாலும், இத்தொடருக்கு தொடர்பான - நான்கு விஷயங்களை மட்டும் தற்போது விவரிப்பது பொருத்தமாக இருக்கும்.
====================
(1) கற்புடையார்பள்ளி வட்டம் (சிங்கித்துறை) - 169 குடியிருப்புகள்
====================
தீர்மானம் எண் 198 (27-9-2007) மூலமாக - கற்புடையார் பள்ளி வட்டம் (சிங்கித்துறை) சுனாமி குடியிருப்பு பயனாளிகளுக்கு, முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் தலைமையிலான காயல்பட்டினம் நகராட்சி ஒப்புதல் வழங்கியது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்படப் போகிறது என்ற தகவல் பொது மக்கள் யாருக்கும் தெரியாது. வெளிப்படைத்தன்மையில்லாத நிர்வாகமாகவே, 2006 - 2011 காயல்பட்டினம் நகராட்சி நிர்வாகம் இருந்தது.
வேடிக்கை என்னவெனில், தான் நிறைவேற்றிய தீர்மானத்தையே எதிர்த்து, சில மாதங்கள் கழித்து - கூட்டம், ஆர்ப்பாட்டம் ஆகியவற்றை, ஐக்கிய பேரவை தலைமையில், ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் தலைமையிலான காயல்பட்டினம் நகராட்சி அங்கத்தினர், ஜனவரி 2011 இல், அரங்கேற்றியதாகும்!
படம்: கோப்பு
[2011 - 2016 காலகட்டத்தில், நகர்மன்றத்தலைவர் திருமதி ஆபிதா சேக் - ஒவ்வொரு நகர்மன்ற கூட்டத்திற்கு முன்பும், கூட்டுப்பொருளை - முற்கூட்டியே பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது]
====================
(2) தற்காலிக பணியாளர்கள்
====================
தீர்மானம் எண் 187 (9-8-2007) மூலமாக - காயல்பட்டினம் நகராட்சியில், தற்காலிக பணியாளர்கள், ஆண்கள் சுயஉதவி குழு பெயரில், 10 பேர் நியமனம் செய்யப்பட்டார்கள். இந்த நியமனத்திலும் - வழமையான முறைக்கேடுகள் அரங்கேறின. அவற்றை தணிக்கைத்துறையும் விரிவாக பதிவு செய்துள்ளது. பணியில் சேர ஒவ்வொருவரும் 30,000 ரூபாய் லஞ்சம் கொடுத்ததாகவும் செய்திகள் வெளியாகின.
துப்புரவு பணி என்ற பெயரில் நியமனம் செய்யப்பட்ட இவர்கள், நகராட்சியில் - துப்புரவு பணியினை தவிர பிற பணிகளையே செய்து வந்தார்கள். பல்வேறு முறைக்கேடுகளுக்கு காரணமாக இருப்பதாக இவர்கள் மீது பல்வேறு புகார்களும் எழுந்தன.
[2014 ஆம் ஆண்டு, இவர்கள் அனைவரையும், நகர்மன்றத்தலைவர் திருமதி ஐ.ஆபிதா சேக், நீக்கம் செய்தார். இவர்களுக்கு ஆதரவாக - உறுப்பினர்கள் பலர் திரண்டனர்; சில கட்சிகள் - ஆர்ப்பாட்டமும் நடத்தியது. அதனை திருமதி ஆபிதா சேக், சட்டை செய்யவில்லை. தன் முடிவில் உறுதியாக இருந்தார்.]
படங்கள்: கோப்பு
====================
(3) துணைத்தலைவர் செய்த செக் மோசடி
====================
நாம் ஏற்கனவே கண்டது போல், 2007 ராஜினாமா சம்பவத்திற்கு பிறகு, காயல்பட்டினம் நகராட்சியின் அதிகார மையம், துணைத்தலைவர் பக்கம் மாறியிருந்தது.
2006 - 2011 காலகட்ட நிர்வாக சீர்கேடுகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக, அப்போதைய துணைத்தலைவர் கஸ்ஸாலி மரைக்காயர் மீது எழுந்த - 14 லட்சம் ரூபாய் செக் மோசடி குற்றச்சாட்டு அமைந்தது. இச்சமபவத்தை தொடர்ந்து கஸ்ஸாலி மரைக்காயர், தன் துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்; காவல்துறையிடம் சரணடைந்தார்.
இந்த சம்பவம், தமிழக அளவில், காயல்பட்டினம் நகராட்சிக்கு தலைகுனிவை ஏற்படுத்தியது.
நூறு ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் மிக்க காயல்பட்டினம் உள்ளாட்சி அமைப்பின், மிகவும் மோசமான காலகட்டம் - 2006 - 2011 ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் தலைமையிலான நகராட்சி நிர்வாக காலகட்டம் என்பதனையும் இந்த சம்பவம் உறுதிப்படுத்தியது.
படம்: கோப்பு
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இறுதியாக விவரிக்க வேண்டிய விஷயம், இந்த காலகட்டத்தில் எவ்வாறு ஒப்பந்தப்புள்ளிகள் முடிவு செய்யப்பட்டு, பணிகள் நடந்தன என்பது குறித்ததாகும். ஒரு பானை சோற்றுக்கு, ஒரு சோறு பதம் என்பது போல் - 2010 ஆம் ஆண்டுஇறுதியில், (2011 சட்டசபை தேர்தலுக்கு முன்பு) வழங்கப்பட்ட - நகரின் 14 சாலைகளை CONCRETE சாலைகளாக புனரமைக்க விடப்பட்ட, 2 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தப்புள்ளியாகும் (SPECIAL ROADS PROJECT).
[தொடரும்]
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: டிசம்பர் 3, 2018; 11:00 am]
[#NEPR/2018120301]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகம் 01 | பாகம் 02 | பாகம் 03 | பாகம் 04 | பாகம் 05 | பாகம் 06 | பாகம் 07 | பாகம் 08 | பாகம் 09 | பாகம் 10 | } |