காயல்பட்டினத்தைச் சேர்ந்த – மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் பட்டப் படிப்புகளில் சேரத் தகுதியும், ஆர்வமும் இருந்தும் – பொருளாதார நலிவு காரணமாக இயலா நிலையிலுள்ள மாணவர்களை – அவர்களது குடும்பச் சூழல் அடிப்படையில் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கான முழுச் செலவினத்தையும் பல்லாண்டு காலமாகச் செய்து வருகிறது ஹாங்காங்கில் இயங்கி வரும் காயல்பட்டினம் மாணவர் நலச் சங்கம் (Kayalpatnam Students Welfare Association – KSWA).
அதன் சார்பில் நடத்தப்பட்ட சுற்றுலாவில், இளைஞர்கள் கலந்துகொண்டு, குதூகலத்துடன் கொண்டாடி முடித்துள்ளனர். இதுகுறித்து, அவ்வமைப்பிலிருந்து பெறப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
பிஸ்மில்லாஹ் - நஹ்மதுஹு வனு ஸல்லி அலா ரசூலிஹில் கரீம்
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளவற்ற கருணையால், எமது ஹாங்காங் கஸ்வா அமைப்பின் 2018 ஆம் ஆண்டின் இன்பச் சுற்றுலா, ஹாங்காங்கிலுள்ள (Wu Kai Sha) என்னும் அழகிய சுற்றுலா பூங்காவிற்கு , கடந்த சனி, ஞாயிறு கிழமைகளில் (அக்டோபர் 27 & 28) சென்று வந்தோம்.
நம் வேலைப்பளுவின் காரணமாக உடலும் உள்ளமும் களைப்படைந்து இருந்த மனம், இந்த சுற்றுலாவின் அறிவிப்பு வந்ததும், உள்ளங்களில் ஏற்பட்ட அளவில்லா மகிழ்ச்சி நம் முகத்தில் புன்னகையாய் பிரகாசித்தது.
இந்த சுற்றுலாவின் ஆரம்பம், நம் காயல்வாசிகள் அதிகமாக குடியிருக்கும் "சிம் ஷா ஷுய்" (Tsim Sha Tsui) பகுதியில் அமைந்திருக்கும் YMCA கட்டிட அருகில் இருந்து, இரண்டு பேருந்துகளில் மொத்தம் 80 பேர் கொண்ட குழு 27ஆம் தேதி சனிக்கிழமை மதியம் 3.30 மணிக்கு கிளம்பியது.
பிரயாண பிராத்தனைகளுடன் இனிதே தொடங்கிய இப்பயணம், பேருந்தில் இருந்த ஒவ்வொருவருக்கும் மற்ற நண்பர்களை ஒரே இடத்தில் சந்தித்தது ஒரு அழகிய ஆனந்தத்தை அள்ளிக்கொடுத்தது. என்னதான் அடிக்கடி பார்த்தாலும், தொலைபேசியில் பேசினாலும் இப்படி ஒரே நேரத்தில் அனைவரையும் சந்திப்பது ஒரு இனம் புரியாத பூரிப்புதான்.
நம் காயல்பதிக்கே உரித்தான வழக்கமான நல விசாரிப்புக்கு பின், இயல்பான கேலியும், நகைச்சுவையும் பேருந்திலேயே அமர்க்களமாக ஆரம்பமானது. சுமார் 45 நிமிட பேருந்து பயணத்திற்கு பின் நம் சுற்றுலா பூங்காவை சென்றடைந்தோம்.
அழகிய கட்டமைப்பு மற்றும் மிகப்பெரிய நீச்சல் குளம், கால்பந்து, கைபந்து, பூப்பந்து மைதானங்கள் மற்றும் நடைபயிற்சி பாதைகள் போன்ற பல்வேறு பொழுதுபோக்கு விளையாட்டு வசதிகளுடன் விடுதிகள் உள்ளடக்கிய அழகிய பூங்கா அது.
ஒவ்வொருவரும் அவர்களே தங்களின் படுக்கை இடங்களை தேர்ந்தெடுத்து தங்களின் உடமைகளை வைத்து விட்டு அஸர் ஜமாத்திற்கு தயாராகினார்கள். மாலை சுமார் 5 மணிக்கு அஸர் ஜமாஅத் முடிந்த பின் நம் காயல் தேநீரும், சமூசவும் பரிமாறப்பட்டது. அதோடு மக்ரிப் தொழுகைக்குரிய நேரம் வந்ததும் மக்ரிப் ஜமாஅத் சிறப்பாக நடைபெற்றது.
தேநீர் அருந்தியவாரே வந்த குழுக்களை அறிவு திறன் மற்றும் பொழுதுபோக்கு விளையாட்டு போட்டிக்காக நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டார்கள். அதன் பின், தனி தனிக் குழுவாக அமர்ந்து ஒருவருக்கொருவர் போட்டி போட உற்சாகத்தோடும் குதூகலத்தோடும் தயாராயினார்கள்.
அணி அமைப்பதில் இருந்தே நண்பர்களுக்குள் விறுவிறுப்பு ஆரம்பமானது. போட்டியின் முதல் கேள்வியிலேயே. நடுவர்களுடன் செல்ல சண்டைகளும், அதன் தொடர்ச்சியாக நகைச்சுவைகளும் இப்போட்டிகளின் ஆர்வத்தை இன்னும் மெருகூட்டியது. இப்போட்டிகள் அறிவுத்திறன் மட்டுமல்ல, சிரித்து மகிழக்கூடிய சுற்றுகளை உள்ளடங்கி இருந்ததால், கலந்து கொண்ட அனைவர்களுக்கும் இது மிகவும் உற்சாகமூட்டியது. சுமார் மூன்று மணிநேரம் ஆரவாரத்தோடும், ஆனந்த ஆர்ப்பாட்டத்தோடும் நடைபெற்று முடிவடைந்தது.
பின்பு விளக்கு செய்யித் அஹ்மத் மற்றும் கூஸ் அப்துல் காதர் பிஸ்தாமி ஆகியோரின் கூட்டு கைபக்குவத்தில் சுவையான இரவு உணவு எல்லோருக்கும் தயாராகவே இருந்தது. கோதுமை சப்பாத்தியுடன் நம்மூர் புகழ் ஈரல் வறுவல் மற்றும் கோழி கறியுடன் மணக்க மணக்க பரிமாறப்பட்டது. இந்த சமையல் வேலைகள் மற்றும் உணவு பரிமாறுதல் போன்ற வேலைகளை நம் உறுப்பினர்கள் சிலர் தன்னார்வத்துடன் உதவி செய்தார்கள். அல்ஹம்துலில்லாஹ். பின்பு இஷா ஜமாஅத் தொழுகை நடைபெற்றது.
அதன் பின்பு அனைவரும் சிறு சிறு கூட்டமாக ஓய்வாக அமர்ந்து ஊர் கதைகள், தமாஷ், கிண்டல்கள் எல்லாம் அளவளாவி கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு இஞ்சி கருந்தேநீர் பரிமாறப்பட்டது. நேரம் போக போக அவரவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட படுக்கைக்கு சென்று உறக்கத்தில் ஆழ்ந்தார்கள்.
பஜ்ர் நேரம் வந்ததும், தொழுகைக்கு அழைப்பு விடுத்து சுபுஹு ஜமாஅத் நடைப்பெற்றது. அதன் பிறகு ஒரு சிலர் மீண்டும் உறக்கத்திற்கு சென்றனர். ஒரு சிலர் கூட்டாக இருந்து உலக, ஊர் நடப்புகளை பற்றி உரையாடி கொண்டிருந்தார்கள். ஒரு சிலர் நடை பயிற்சி, கால்பந்து போன்ற பல விளையாட்டு விளையாடி கொண்டிருந்தார்கள்.
சரியாக காலை 7.30 மணி அளவில் தேநீருடன் நம் ஊர் தின்பண்டங்களும் 9.30 மணிக்கு கொத்து ரொட்டியும், உப்புமாவும் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
அதன் பின் சற்று நேரம் ஓய்வு எடுத்துவிட்டு, அநேகர் மிகப்பெரிய நிச்சல் குளத்தில் ஆனந்த குளியல் போட்டனர். சற்றொப்ப ஒரு மணி நேரம் குளித்து விட்டு, லுஹ்ர் ஜமாத்திற்கு தயாராகி தொழுதனர்.
பின்பு அனைவருக்கும் ருசியான மட்டன் பிரியாணி, கோழி பொறியல், தயிர் சட்னி, தக்காளி பச்சடி என அறுசுவை உணவு விருந்தளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். சிறு ஓய்வுக்கு பின் அனைவரும் தங்களின் உடமைகளை எடுத்து வைத்து இல்லம் திரும்ப தயாராயினார்கள். சரியாக 4மணிக்கு அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது.
அதன் பின் அசர் தொழுகைக்கான ஜமாத்தும் நடைபெற்றன. ஜமாஅத் முடிந்ததும் ஒரு சில நிமிடங்கள் நமது KSWA அமைப்பின் வருங்கால சேவைகள் பற்றி கருத்து பரிமாற்றங்கள் நடைப்பெற்றன. இந்த நிகழ்வை அமைப்பின் செயற்குழு உறுப்பினர்கள் மக்பூல், பொறியாளர் செய்யித் அஹ்மத் ஆகியோர் முறைப்படுத்தி நடாத்தினார்கள். ஹாபில் ஷேக் தாவுத் துஆ ஓதி நிறைவு செய்தார்.
பின்பு குழு புகைப்படம் எடுத்து கொண்டு, பிரத்தயோகமாக ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்துகளில் தங்களின் இல்லங்களுக்கு திரும்பினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!
இந்த சுற்றுலாவின் நிகழ்ச்சிகள் ஆரம்பம் முதல் அனைத்தும் நம் அமைப்பின் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.ஹெச்.மக்பூல், பொறியாளர் செய்யித் அஹ்மத், ஹாபில் முஹ்யித்தீன், சவூத், ஹாபில் அப்துல் பாசித், விளக்கு நூஹு மற்றும் விளக்கு செய்யித் அஹ்மத் ஆகியோர் கொண்ட குழு மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த இன்பச் சுற்றுலா இறைவணக்கங்களோடும், இனிய நினைவுகளோடும், இன்சுவை உணவுகளோடும், இதமான வானிலையோடும் இன்பமயமாக இருந்தது என்பது இன்றியமையாத ஒன்று.. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்.
சகோதரத்துவ வாஞ்சையுடன் கூடிய நம் உறுப்பினர்களின் ஒற்றுமை, வலிமையான செயல்பாடு, கடின உழைப்பு ஆகியவற்றின் துணையுடன் இனி வருங்காலங்களில் இன்னும் பல வெற்றிகளை இவ்வமைப்பு காண வேண்டுமென அனைவரும் பிரார்த்திக்க அன்புடன் வேண்டுகிறோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளும், நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நல்லாசியும் நம் யாவர் மீதும் நிறைவாக சூழட்டுமாக, ஆமீன். வஸ்ஸலாமு அலைக்கும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|