‘பசுங்காயல்’ திட்டத்தின் கீழ், RISE ட்ரஸ்ட் அமைப்பும், கத்தர் காயல் நல மன்றமும் இணைந்து நகரின் சில தெருக்களைத் தேர்ந்தெடுத்து மொத்தம் 70 மரக்கன்றுகளை நட்டியுள்ளன. திட்ட அறிமுக நிகழ்ச்சியில், நகரின் பசுமை ஆர்வலர்கள் பங்கேற்றுள்ளனர். விரிவான விபரம்:-
காயல்பட்டினம் நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களையும் – இளைஞர்களையும் உள்ளடக்கியது RISE ட்ரஸ்ட். இவ்வறக்கட்டளையின் மூலம் நகரிலுள்ள அனைத்து தெருக்களையும் வரைபடமிட்டு, அவற்றுள் மிக வெப்பப் பகுதிகள், மித வெப்பப் பகுதிகள், தாழ்வெப்பப் பகுதிகள் என தெருக்களைப் பிரித்து, அதிக வெப்பமுள்ள பகுதிகளுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் மரங்களை வளர்க்கும் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக நகரிள்ள அனைத்து பள்ளிவாசல்கள், பொதுநல அமைப்புகளின் அறிவிப்புப் பலகைகளில் சுற்றறிக்கைகள் காணப்பட்டன.
இதே திட்டத்தை நீண்ட காலமாகச் சிந்தனையில் கொண்டிருந்த கத்தர் காயல் நல மன்றம், நிதி அனுசரணைக்கு ஆயத்தமாக இருந்தாலும் – நகரில் களப்பணி செய்யப் போதிய தன்னார்வலர்கள் வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தது.
RISE ட்ரஸ்ட்டின் சுற்றறிக்கைகளைக் கண்ணுற்ற பின், கத்தர் காயல் நல மன்ற நிர்வாகம், இத்திட்டத்தை நகரில் இணைந்து செய்வது குறித்துக் கலந்தாலோசிக்க RISE ட்ரஸ்ட் அமைப்பினருக்கு அழைப்பு விடுத்தது. பலமுறை நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டங்களில், இத்திட்டத்தை நகரில் தாம் செயல்படுத்தவுள்ள நடைமுறைகள் குறித்து ரைஸ் ட்ரஸ்ட் அமைப்பினர் கத்தர் காயல் நல மன்றத்திடம் விளக்கி, களப்பணிக்குத் தாங்கள் முழுப் பொறுப்பேற்றுக் கொள்வதாகவும், நிதிப் பங்களிப்பை கத்தர் காயல் நல மன்றம் பொறுப்பேற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ள – அது ஏற்கப்பட்டு, மரம் வளர்ப்பதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் துவக்கப்பட்டன.
கால்நடைகள் தீண்டாத வகையில் 10 அடி உயரம் வளர்க்கப்பட்ட மரங்கள் - ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியிலிருந்து வரவழைக்கப்பட்டன. 26.11.2018. திங்கட்கிழமையன்று 08.30 மணிக்கு மரங்களை நட்டும் பணி துவங்கியது. காயல்பட்டினம் தைக்கா தெரு, கீழ நெய்னார் தெரு, பரிமார் தெரு, காயிதேமில்லத் 2ஆவது தெரு ஆகிய தெருக்களிலும், இன்னும் சில தெருக்களின் ஒரு சில இடங்களிலும் திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களில் மொத்தம் 70 மரங்கள் நட்டி முடிக்கப்பட்டுள்ளன.
இத்திட்டம் குறித்துப் பொதுமக்களுக்கு விளக்கி, சமூகப் பாதுகாப்பை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF)யின் புகாரீ நினைவு நூலக வளாகத்தில் திட்ட அறிமுக நிகழ்ச்சி, 26.11.2018. திங்கட்கிழமையன்று 17.00 மணியளவில் நடைபெற்றது.
இளைஞர் ஐக்கிய முன்னணியின் துணைத் தலைவர் நஹ்வீ எம்.கே.அஹ்மத் முஹ்யித்தீன் தலைமை தாங்கினார். அதன் இணைச் செயலாளரும் – கத்தர் காயல் நல மன்றப் பிரதிநிதியுமான எஸ்.கே.ஸாலிஹ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தி, அறிமுகவுரையாற்றினார். இளைஞர் ஐக்கிய முன்னணி செயலாளர் எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் அனைவரையும் வரவேற்றார்.
RISE ட்ரஸ்ட் அமைப்பின் நிர்வாகி ஹாரிஸ் – மரம் வளர்ப்புத் திட்டம் செயல்பாட்டு முறைகள் குறித்து விளக்கிப் பேசினார்.
காயல்பட்டினத்தை – வெப்பம் அடிப்படையில் பல்வேறு மண்டலங்களாகப் பிரித்தமைக்கான காரணங்களை அவர் விளக்கிப் பேசியதோடு, இதற்கு முன் இத்திட்டம் பலரால் செயல்படுத்தப்பட்டபோது ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல்கள் – தொய்வுகள் அனைத்தும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளதாகவும், கத்தர் காயல் நல மன்றத்துடன் இணைந்து நடத்தப்பட்ட பல்வேறு கலந்தாலோசனைக் கூட்டங்களையடுத்து – புதிதாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தில் அக்குறைகள் நேராதிருக்க மேற்கொள்ளப்படவுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அவர் விளக்கமளித்தார்.
இந்நிகழ்ச்சிக்கு நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பசுமை ஆர்வலர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.
தனது இடைவெளியில்லாத அன்றாட மருத்துவ சிகிச்சைப் பணிகளுக்கிடையிலும் தன் வீட்டில் பல்வேறு மரம், செடி, கொடிகளை வளர்த்துப் பராமரிக்கும் டாக்டர் பீ.எம்.ஜாஃபர் ஸாதிக்,
காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடி, கடற்கரை தொழுமிடம் உள்ளிட்ட பகுதிகளில் தனது தன்னார்வத் தொடர் முயற்சியால் நிறைய மரங்களை நட்டு, இன்று அவை ஓங்கி வளர்ந்து நிழல் தரக் காரணமாகத் திகழும் சொளுக்கு செய்யித்,
தான் துணைச் செயலாளராக இருக்கும் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி வளாகத்தையே பல வகை மரங்களைக் கொண்டு பசுஞ்சோலையாக மாற்றிக் கொண்டிருக்கும் கே.எம்.டீ.சுலைமான்,
காயல்பட்டினத்திலேயே தொழில்முறை விவசாயத்தைத் துவக்கமாகக் கையிலெடுத்துப் பல்லாண்டுகளாகச் செய்து வரும் ‘செம்பருத்தி’ இப்றாஹீம்,
அபூதபீ காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினரும் – அங்குள்ள அய்மான் பொதுநல அமைப்பின் பொதுச் செயலாளருமான எஸ்.ஏ.சி.ஹமீத்,
பசுமை ஆர்வலரும் – பிஎஸ்என்எல் நிறுவன பொறியாளருமான முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
காயல்பட்டினம் மரைக்கார் பள்ளித் தெருவில் மரைக்கார் பள்ளி வளாகத்தைச் சுற்றிய சாலைப் பகுதிகளில் ஏராளமான மரங்களை நட்டு, இன்று அவை ஓங்கி வளர்ந்து நிழல் தரக் காரணமாயிருக்கும் எம்.எம்.உவைஸ் இந்நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார். வெளிநாட்டில் இருக்கின்ற காரணத்தால் வரவியலாத நிலை ஏற்பட்டுவிட்டதாகவும், திட்டம் சிறக்க வாழ்த்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
முதற்கட்டாக மேற்படி தெருக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு – வேம்பு, புங்கை ஆகிய இரு வகை மரங்கள் 70 நட்டப்பட்டுவதாகவும், இதிலுள்ள நிறை – குறைகளைக் கருத்திற்கொண்டு, அடுத்தடுத்த செயல்திட்டங்கள் மூலம் நகரின் இதர பகுதிகளிலும் மரங்கள் வளர்க்கத் திட்டமுள்ளதாகவும், இவ்வகைக்காக பல்வேறு காயல் நல மன்றங்களும், தொழில் நிறுவனங்களின் அதிபர்களும் அனுசரணையளிக்க ஆயத்தமாக உள்ளதாகவும் நிகழ்ச்சி நெறியாளர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் முன்னிலை வகித்த - கத்தர் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினரும் – அதன் மருத்துவக் குழு ஒருங்கிணைப்பாளருமான எம்.ஆர்.ஷாஹுல் ஹமீத் நன்றி கூற, ஸலவாத் – கஃப்பாராவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
சமூக ஆர்வலர்களான - ஜித்தா காயல் நல மன்ற முன்னாள் தலைவர் சொளுக்கு எஸ்.எஸ்.எம்.செய்யித் அஹ்மத், ஹாங்காங் எஸ்.ஏ.முஹம்மத் நூஹ், எம்.எம்.முஜாஹித் அலீ, ஹாமிதிய்யா திருக்குர்ஆன் மனனப் பிரிவு முதன்மை ஆசிரியர் மவ்லவி அபூபக்கர் ஸித்தீக் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அனைவருக்கும் தேனீர், சிற்றுண்டி பரிமாறப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை - கத்தர் காயல் நல மன்ற ஒருங்கிணைப்பில், இளைஞர் ஐக்கிய முன்னணி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
|