காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நலச் சங்கம் மூலம் மாதாந்திர குறைகேள் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தேவைகளை வலியுறுத்தி, சுகாதாரத் துறை இணை இயக்குநரிடம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் அரசு மருத்துவமனை சேவைகளை தரம் உயர்த்த கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகளை, மெகா | நடப்பது என்ன? குழுமம் மேற்கொண்டு வருகிறது.
ஒரு மருத்துவர் கொண்டு செயல்பட்டு வந்த இந்த மருத்துவமனையின் காலியிடங்கள், மெகா | நடப்பது என்ன? குழுமம் முயற்சியினால், இறைவனின் உதவிக்கொண்டு, முழுமையாக நிரப்பப்பட்டது.
கூடுதலாக மருத்துவர்கள் பொறுப்பு உருவாக்கப்படவேண்டும் என அரசுக்கு - மெகா | நடப்பது என்ன? குழுமம் வைத்த தொடர் கோரிக்கைகளை ஏற்று, இவ்வாண்டு பிப்ரவரி மாதம், கூடுதலாக இரு இடங்களை (OPHTHALMOLOGIST/ENT, DGO) காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு என தமிழக அரசு உருவாக்கியது நினைவிருக்கலாம்.
தற்போது - காயல்பட்டினம் அரசு மருத்துவமனையை அதிகளவில் பொது மக்கள் - பயன்படுத்தி வருகிறார்கள். எல்லாப்புகழும் இறைவனுக்கே!
அரசு மருத்துவமனையின் நலனையும், மேம்பாட்டையும் கருத்தில் கொண்டு - தமிழக அரசின் தூத்துக்குடி மாவட்ட சுகாதாரத்துறையின் இணை இயக்குனர் டாக்டர் பாத்திமா ஸீரீன் அவர்களை நடப்பது என்ன? குழும நிர்வாகிகள், இன்று சந்தித்து, சில கோரிக்கைகளை முன் வைத்தனர்.
// தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும், அந்த மருத்துவமனையின் பெயரில் நோயாளிகள் நல சங்கங்கள் (PATIENT WELFARE SOCIETY) உள்ளன. அரசு பதிவு செய்யப்பட்ட இந்த சங்கங்கள் மூலம், அடிக்கடி மருத்துவமனை நிர்வாகம் - நோயாளிகள் சந்திப்பு கூட்டங்களை ஏற்பாடு செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் மூலம் மருத்துவமனையை பயன்படுத்துவோர் தேவைகளை / குறைகளை எளிதாக நிர்வாகம் அறிந்திட முடியும்; மேலும் - மருத்துவமனைக்கும், பொது மக்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஏற்படும் என்றும் எடுத்துரைக்கப்பட்டது.
// காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் ஐந்தாவது மருத்துவராக நியமனம் செய்யப்பட்ட கண் மருத்துவர் டாக்டர் வில்பர் தற்போது வேறு மருத்துவமனைக்கு சென்று பணியாற்றுவதாக தெரிகிறது. கண் மருத்துவத்திற்கு தேவையான சாதனங்களை வழங்கி, மீண்டும் அவரை காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் பணியமர்த்த வேண்டும் என்ற கோரிக்கை இணை இயக்குனரிடம் வைக்கப்பட்டது. வேறு மருத்துவமனையின் மருத்துவர் - அவசர விடுமுறையில் சென்றுள்ளதால், தற்காலிகமாக டாக்டர் வில்பர் அங்கு செல்வதாகவும், சில தினங்களில் மீண்டும் காயல்பட்டினம் வருவார் என்றும் இணை இயக்குனர் தெரிவித்தார்.
// காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு பெண் மருத்துவர் - வியாழன்கிழமை மட்டும் வருகிறார். இது போதாது என்றும், தற்காலிகமாக கூடுதல் தினங்களுக்கு வர ஏற்பாடு செய்யவேண்டும் என்றும், விரைவில் நிரந்தர மகப்பேறு மருத்துவர் நியமனம் செய்யப்படவேண்டும் என்றும் இணை இயக்குனரிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது.
// அரசு மருத்துவமனையில் உள்ள சமையல் பணி / சுகாதாரப்பணி காலியிடங்கள் உடனடியாக நிரப்பப்படவேண்டும் என்ற கோரிக்கை, இணை இயக்குனரிடம் வைக்கப்பட்டது.
// காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் பணிப்புரியும் லேப் டெக்னீசியன் குறித்து பொது மக்கள் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வருவதை கருத்தில் கொண்டு, அவரை வேறு இடத்திற்கு மாற்றி, திறமை வாய்ந்த புது லேப் டெக்னீசியன் - காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு நியமனம் செய்யப்படவேண்டும் என்றும் இணை இயக்குனரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: நவம்பர் 26, 2018; 9:30 pm]
[#NEPR/2018112604]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|