புகழ்பெற்ற முஸ்லிம் எழுத்தாளரும் – சாகித்ய அகடமி விருது பெற்றவருமான தோப்பில் முகமது மீரான், உடல் நலக் குறைவால் - 10.05.2019. வெள்ளிக்கிழமையன்று 01:20 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 74.
தமிழ் மற்றும் மலையாள எழுத்தாளரான தோப்பில் முகமது மீரான் 1997ஆம் ஆண்டில் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றார்.கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினத்தை சேர்ந்த தோப்பில் முகமது மீரான் நெல்லை மாவட்டம் பேட்டை பகுதியில் வசித்து வந்தார்.
பல்வேறு புதினங்கள், சிறுகதை தொகுப்புகள், மொழிபெயர்ப்பு நூல்களை எழுதியுள்ளார். சாய்வு நாற்காலி என்ற நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார்.இந்நிலையில் முகமது மீரான் உடல்நலக் குறைவால் 10.05.2019. அதிகாலை 1.20க்கு காலமானார். அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள், அரசியல் கட்சிகள், அவற்றின் தலைவர்கள் உட்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முகமது மீரான் உடல் நெல்லை வீரபாகுநகரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அன்று அஸ்ர் தொழுகைக்குப் பின், 17.00 மணியளவில் நெல்லை பேட்டையில் உள்ள பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
5 புதினங்கள், 6 சிறுகதைகள், சில மொழிபெயர்ப்பு நூல்களை முகமது மீரான் எழுதியுள்ளார். இதுவரை தோப்பில் முகமது மீரான் வாங்கிய விருதுகள் சுருக்கமாக:-
சாகித்திய அகாதமி விருது – சாய்வு நாற்காலி (1997)
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது
இலக்கியச் சிந்தனை விருது
லில்லி தேவசிகாமணி விருது
தமிழக அரசு விருது
அமுதன் அடிகள் இலக்கிய விருது
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது.
இவர் எழுதிய அன்புக்கு முதுமை இல்லை, தங்கரசு, அனந்தசயனம் காலனி போன்ற சிறுகதை தொகுப்புகள் வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவை ஆகும். அதே போல் அஞ்சுவண்ணன் தெரு, கூனன் தோப்பு, ஒரு கடலோரக் கிராமத்தின் கதை போன்றவை தோப்பில் முகமது மீரான் படைப்பில் வெளிவந்த ஆகச்சிறந்த நூல்கள் ஆகும்.
மீனவ கிராமங்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வை அடிப்படையாக கொண்ட ஒரு கடலோரக் கிராமத்தின் கதை நூல் இன்றளவு பல இலக்கியவாதிகள் அதிகம் போற்றக்கூடிய படைப்பாகும். தோப்பில் முகமது மீரானின் இழப்பு இலக்கிய உலகில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்பதில் சந்தேகமில்லை.
நன்றி:
இந்தியன் எக்ஸ்ப்ரஸ் தமிழ் இணையதளம்
மறைந்த தோப்பில் முகமது மீரான், 2018 ஜூலை 18, 19, 20 ஆகிய நாட்களில் காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி வளாகத்தில், எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட முதலாவது புத்தகக் கண்காட்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, காலத்திற்கேற்ற தகவல்களுடன் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது. |