நிகழும் ரமழான் மாதத்தை முன்னிட்டு, சஊதி அரபிய்யா – ரியாத் காயல் நல மன்றம் சார்பில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த – பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள 363 குடும்பங்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி வழங்கப்பட்டுள்ளதோடு, வரும் நோன்புப் பெருநாளன்று நாட்டுக்கோழி இறைச்சி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நல மன்றம் சார்பில், கடந்த ஏழு வருடங்களாக புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு ஏராளமான ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிடும் திட்டமும், கடந்த ஐந்தாண்டுகளாக ஆதரவற்ற முதியோர்கள், விதவைகள், மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வரும் பல குடும்பங்களுக்கு மாதந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கிடும் திட்டமும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
அந்த திட்டத்தின் கீழ் நடப்பாண்டும் (2019) ரமழான் நோன்பை முன்னிட்டு ரியாத் காயல் நல மன்றத்தின் சார்பில் 363 ஏழைக் குடும்பத்திற்கு அரிசி உள்ளிட்ட (30 வகையான) நோன்பு கால அத்தியாவசிய உணவுப் பொருட்களும், கூடுதல் திட்டமாக இந்த அனைத்து குடும்பத்தினரும் பெருநாளன்று இரவு ஒரு உரித்த நாட்டுக் கோழி பெற்றுக் கொள்ளும் வகையில் அதற்கான டோக்கனும் ரமலான் நோன்புக்கு முந்தைய தினங்களில் பயனாளிகளின் இல்லம் சென்று வழங்கி முடிக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்! இதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை ரியாத் காயல் நல மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதிகள் ஏ.தர்வேஷ் முஹம்மது மற்றும் சோனா எம்.எம்.டி.ஷாஹுல் ஹமீது ஆகியோர் செய்திருந்தனர்.
(ரமலான் உணவுப்பொருட்கள் வழங்கி வரும் ரியாத், சிங்கப்பூர் மற்றும் அபுதாபி காயல் நல மன்றங்களின் பயனாளிகளின் விபரங்களும் வருடம்தோறும் பெறப்பட்டு, சரிபார்க்கப்பட்டு, அவற்றில் Duplication (ஒரு பயனாளியின் பெயர் இரு அமைப்புகளின் பட்டியலில் வரும் பட்சத்தில்) கண்டறியப்பட்டு அதற்கு பதில் புதிய பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அவ்வகையில் நடப்பாண்டு மேற்கண்ட மூன்று அமைப்புகளில் 35 Duplication கண்டறியப்பட்டு, அதற்கு பதில் வேறு புதிய பயனாளிகள் தேர்வு செய்து வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.)
இந்த ரமலான் உணவுப் பொருட்கள் வழங்கிட பொருளுதவி செய்த ரியாத் காயல் நல மன்றத்தின் அங்கத்தினர்கள், அபிமானிகள் மற்றும் இதற்கான முயற்சிகளில், பணிகளில் ஈடுபட்ட அனைவர்களுக்கும் ரியாத் காயல் நல மன்ற நிர்வாகம் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து மகிழ்கிறது. ஜஸாக்குமுல்லாஹு கைரா!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியாத் கா.ந.மன்றம் (RKWA) சார்பாக...
தகவல்:
A.தர்வேஷ் முஹம்மத்
(பிரதிநிதி, ரியாத் கா.ந.மன்றம்) |