இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடைபெற்ற - கத்தர் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில், ஒருநாள் ஊதிய நன்கொடையாக 1 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் சேகரிக்கப்பட்டுள்ளது. காயலர்கள் திரளாகக் கலந்துகொண்டுள்ளனர். இதுகுறித்து, அவ்வமைப்பின் செயலாளர் எம்.என்.முஹம்மத் சுலைமான் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
இறையருளால் எமது கத்தர் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம், 09.05.2019. வியாழக்கிழமையன்று 17.00 மணியளவில், மன்றத் தலைவர் மொகுதூம் மீரான் தலைமையில் நடைபெற்றது. எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம், எம்.என்.முஹம்மத் யூனுஸ், மவ்லவீ ஹாஃபிழ் ஏ.எல்.முஹம்மத் ஸாலிஹ் உமரீ, மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.முஹம்மத் லெப்பை ஜுமானீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஹாஃபிழ் ஹபீப் முஹம்மத் நிஜாமுத்தீன் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். செயலாளர் எம்.என்.முஹம்மத் சுலைமான் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தி, வரவேற்புரையாற்றினார்.
மறைந்தோருக்கு இரங்கல்:
அண்மையில் காலமான, குழந்தை நல சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் முஹம்மத் தம்பி, மன்ற உறுப்பினர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.முஹம்மத் லெப்பை அவர்களின் மச்சான் அல்ஹாஜ் ஏ.எஸ்.ஹாமித் லெப்பை, விபத்தில் காலமான ஹாஃபிழ் செய்யித் அபூதாஹிர், புனித மக்காவில் – உம்றா பயணம் மேற்கொள்கையில் காலமான மக்கள் சேவா கரங்கள் அமைப்பின் நிறுவனர் பா.மு.ஜலாலீ ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, அவர்களின் மண்ணறை – மறுமை நல்வாழ்விற்காகப் பிரார்த்திக்கப்பட்டது.
இஃப்தார் – நோன்பு துறப்பு:
‘கவிக்குயில்’ ஃபாயிஸ் இஸ்லாமிய இன்னிசை பாடினார். புதிய உறுப்பினர்கள் அறிமுகத்தைத் தொடர்ந்து, மஃரிப் வேளை நெருங்கியதும், இஃப்தார் – நோன்பு துறப்புக்காக இடைவேளை விடப்பட்டது.
கேக்:
மஃரிப் தொழுகை ஜமாஅத்தாக நிறைவேற்றப்பட்ட பின், இரண்டாம் அமர்வு துவங்கியது.
தலைமையுரை:
தலைமையுரையாற்றிய மன்றத் தலைவர் மொகுதூம் மீரான், மன்றத்தின் இதுநாள் வரையிலான நகர்நலப் பணிகளைப் பட்டியலிட்டு விளக்கியதோடு, அனைத்துப் பணிகளிலும் மன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து வழங்கி வரும் தொய்வற்ற நல்ல ஒத்துழைப்புகளுக்காக நன்றி தெரிவித்தார். இனி வருங்காலங்களில் இன்னும் அதிகளவில் ஒத்துழைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
இக்ராஃ தலைவர் உரை:
முன்னிலை வகித்த எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம், இக்ராஃவின் தலைமைப் பொறுப்பைத் தற்போது மன்றம் ஏற்றுள்ளதையும் – அதையொட்டி செய்யப்பட்டுள்ள பணிகள், இக்ராஃவின் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் குறித்தும் விளக்கிப் பேசினார்.
இக்ராஃ மூலம் ஏழை மாணவர்களின் மேற்படிப்பிற்கான கல்வி உதவித்தொகை – கடன் அடிப்படையில் முழுமையாக வழங்கப்பட்டு வருவதாகக் கூறிய அவர், இவ்வகைக்குத் தேவைப்படும் நிதி மிகக் குறைந்த அளவிலேயே உள்ளதாகவும், இதுகுறித்து உலக காயல் நல மன்றங்களுக்கு விளக்கி, அவர்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் நிறைவாக இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்.
உலக காயல் நல மன்றங்களுடன் இணைந்து கத்தர் மன்றம் இக்ராஃ மூலம் செய்து வரும் பள்ளிச் சீருடை வினியோகத் திட்டம் குறித்துப் பேசிய அவர், இத்திட்டத்திற்கு பொதுமக்களிடத்தில் நல்ல வரவேற்பு இருப்பதைக் கருத்திற்கொண்டு, நிகழாண்டில் (2019) 300 ஏழை மாணவ-மாணவியருக்கு தலா இரண்டு செட் சீருடைகள் என மொத்தம் 600 சீருடைகளை வழங்கிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறினார். உலக காயல் நல மன்றங்களின் நிறைவான ஒத்துழைப்புகளால் மட்டுமே இத்திட்டம் இந்தளவுக்கு வெற்றிகரமாக இதுநாள் வரை செயல்படுத்தப்பட்டுள்ளது என அவர் பெருமிதத்துடன் கூறி, திட்டத்தில் பங்கேற்றுள்ள அனைத்து காயல் நல மன்றங்களுக்கும் நன்றி கூறினார்.
முன்னிலையாளர் உரை:
முன்னிலை வகித்த எம்.என்.முஹம்மத் யூனுஸ் உரையாற்றுகையில், கடந்த 11 ஆண்டுகளாக காயல்பட்டினத்தில் நடத்தப்பட்ட புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம் குறித்து விளக்கினார்.
கத்தர் காயல் நல மன்றத்தின் தூண்டுதலை ஏற்று, காயல்பட்டினம் கே.எம்.டீ. மருத்துவமனை மூலம் டயாலிஸிஸ் பிரிவு துவக்கப்பட வேண்டும் எனவும், அதற்காகப் பொருளாதார ஒத்துழைப்புகளை வழங்கிடுமாறும் அனைத்துலக காயல் நல மன்றங்களுக்கும் ஷிஃபா சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது.
அதைக் கருத்திற்கொண்டு, ஒரு படுக்கையுடன் கூடிய டயாலிஸிஸ் கருவியை கத்தர் காயல் நல மன்றம் சார்பில் வழங்கிட தீர்மானிக்கப்பட்டது. இத்திட்டத்திற்காக, மிகச் சிறந்த பங்களிப்பைத் தந்தமைக்காக எம்.என்.ஷாஹுல் ஹமீத் அவர்களுக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
வரவு செலவு கணக்கறிக்கை:
மன்றப் பொருளாளர் ஹுஸைன் ஹல்லாஜ் – அசைபட விரிதிரை (வீடியோ ப்ரொஜெக்டர்) துணையுடன் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிக்க, கூட்டம் அதை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. ப்ரொஜெக்டர் கருவிக்கான ஏற்பாடுகளை உறுப்பினர் தாவூத் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மார்க்க அறிஞர் உரை:
நகர்நலப் பணிகளாற்றுவதன் நன்மைகள், அவற்றுக்கான இறை நற்கூலிகள் குறித்து, மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.முஹம்மத் லெப்பை பாக்கவீ உரையாற்றினார்.
ஒருநாள் ஊதிய நன்கொடை:
உறுப்பினர் கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, நகர்நலப் பணிகளுக்காக உறுப்பினர்களிடமிருந்து அவர்களது ஒருநாள் ஊதியம் நன்கொடையாகப் பெறப்பட்டது. மொத்தம் 1 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் சேகரிக்கப்பட்டு, மன்றக் கருவூலத்தில் சேர்க்கப்பட்டது, எல்லாப் புகழும் இறைவனுக்கே! அல்ஹம்துலில்லாஹ்!!
ஹாஃபிழ் எஸ்.எம்.ஏ.ஸாலிஹ் நன்றி கூற, ஹாஃபிழ் அமீர் சுல்தான் துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
பஃபே முறையில் இரவுணவு:
அனைவருக்கும் பஃபே முறையில் இரவுணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது. அனைத்து நிகழ்ச்சிகளிலும் மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிகள் பலவற்றை, மன்ற செயற்குழு உறுப்பினர் பி.ஃபைஸல் ரஹ்மான் – ஸெல்ஃபி ஸ்டிக் உதவியின்றியே படப்பதிவாக்கியமை குறிப்பிடத்தக்கது.
ஏற்பாடுகள்:
ஹாஃபிழ் எம்.எம்.எல்.முஹம்மத் லெப்பை, முஹம்மத் முஹ்யித்தீன் (மம்மி), இசட்.எம்.டி.அப்துல் காதிர் ஆகியோர் இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மன்ற உறுப்பினர்கள், கூட்ட ஏற்பாட்டாளர்கள், உள்ளூர் பிரதிநிதி உள்ளிட்ட அனைவருக்கும் இக்கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
‘அக்கு ஹீலர்’ எஸ்.கே.ஸாலிஹ்
(பிரதிநிதி, கத்தர் கா.ந.மன்றம்)
|