காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியில் ரமழான் 28ஆம் நாளன்று தராவீஹ் தொழுகையைத் தொடர்ந்து தஸ்பீஹ் தொழுகை நடத்தப்பட்டது. கேரள மாநிலம் குட்டிகாட்டூர் ஜாமிஆ ஆரிஃபிய்யா அன்வாரிய்யா அரபிக் கல்லூரியின் திருக்குர்ஆன் மனனப் பிரிவு ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் கே.ஏ.முத்த தாஜுத்தீன் மஸ்லஹீ – தஸ்பீஹ் தொழுகையின் மகத்துவம் குறித்து உரையாற்றியதோடு, தொழுகையையும் வழிநடத்தினார்.
ரமழான் 29ஆம் நாளன்று (ஜூன் 03) இஷா தொழுகை 21.30 மணிக்கும், தராவீஹ் தொழுகை 21.45 மணிக்கும், அதனைத் தொடர்ந்து வித்ர் தொழுகையும் நடைபெற்றது.
இவ்வாண்டு தராவீஹ் தொழுகையை காயல்பட்டினம் கொச்சியார் தெரு – ஏ.எம்.நூர் முஹம்மத் ஜக்கரிய்யா என்பவரது மகன் ஹாஃபிழ் என்.எம்.இசட்.அஹ்மத் முஹ்யித்தீன், தீவுத்தெரு முஹம்மத் உமர் என்பவரது மகன் எம்.யு.முஹம்மத் முஹ்யித்தீன் முஸ்தஃபீழ் ஆகியோர் வழிநடத்தினர்.
ரமழான் 20 முதல் 29ஆம் நாள் வரை கடைசிப் பத்து நாட்களில் 01.00 மணி முதல் 03.00 மணி வரை நடைபெற்ற கியாமுல் லைல் சிறப்புத் தொழுகை, ஒவ்வொரு நாளும் - ஒவ்வொரு ஸலாமிலும் அரை ஜுஸ்உ என மொத்தம் 6 ஸலாம்களில் 3 ஜுஸ்உகள் வீதம் 10 நாட்களில் 30 ஜுஸ்உகளாக திருக்குர்ஆன் முழுமையும் ஓதி முடிக்கப்பட்டு, தமாம் செய்யப்பட்டது. இத்தொழுகையை குருவித்துறைப் பள்ளி மஹல்லாவைச் சேர்ந்த 56 ஹாஃபிழ்களும், இதர மஹல்லா ஜமாஅத்துகளைச் சேர்ந்த 4 ஹாஃபிழ்களும் என மொத்தம் 60 ஹாஃபிழ்கள் வழிநடத்தினர்.
இவ்வனைத்து இமாம்களுக்கும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் சங்கை செய்யும் நிகழ்ச்சி 22.45 மணிக்குத் துவங்கியது. பள்ளி துணைத்தலைவர் என்.எஸ்.நூஹ் ஹமீத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தராவீஹ் இமாம்கள் இருவருக்கும், பள்ளியின் தலைமை இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எல்.முஹம்மத் அலீ ஃபைஜீ, துணை இமாம் மவ்லவீ ஹாஃபிழ் ஏ.எல்.ஜாஃபர் ஸாதிக் ஆகியோருக்கும் சால்வை அணிவித்து, பணமுடிப்பு வழங்கி கண்ணியப்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, குருவித்துறைப் பள்ளி மஹல்லா ஜமாஅத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பலர், ஹாஃபிழை வாழ்த்தி பணமுடிப்பு அளித்து ஊக்கப்படுத்தினர்.
ஹாங்காங் கம்பல்பக்ஷ் ட்ரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில், மர்ஹூம் ஹாஃபிழ் என்.எச்.ஷாஹுல் ஹமீத் நினைவாக - வழமை போல இவ்வாண்டும், புனித ரமழான் மாதம் முழுக்க தராவீஹ் தொழுகையை வழிநடத்திய அனைவருக்கும் ஊக்கத்தொகை அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
கடைசிப் பத்து நாட்களில் கியாமுல் லைல் தொழுகையை வழிநடத்திய ஹாஃபிழ்கள், ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் – சென்னை கே.ஏ.எஸ்.எண்டர்ப்ரைசஸ் நிறுவனத்தார், அல்ஃபத்தாஹ் ஹஜ் சர்வீஸ் நிறுவனத்தார், தன்னார்வலர்கள் உள்ளிட்டோரின் அனுசரணையில் பரிசுப் பொருட்களும், பணமுடிப்பும், தலா ஒரு கைலியும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
நடப்பு ரமழான் மாதம் முழுக்க பள்ளி நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து சிறப்பு நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பளித்தமைக்காக மஹல்லாவாசிகளுக்கு பள்ளி இணைச் செயலாளர் கே.எம்.செய்யித் அஹ்மத் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் – பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும் – முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ சிறப்புரையாற்றினார்.
திருமறை குர்ஆனின் மகத்துவம், அதை மனனம் செய்து பாதுகாப்பதன் மகத்துவம், அவ்வாறு மனனம் செய்த ஹாஃபிழ்களை சங்கைப்படுத்துவதினால் விளையும் நன்மைகள், பள்ளிவாசலுக்குள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் குறித்து அவரது உரையில் செய்திகள் இடம்பெற்றன.
‘அக்குஹீலர்’ எஸ்.கே.ஸாலிஹ், கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத், என்.டீ.முஹம்மத் இஸ்மாஈல் புகாரீ ஆகியோர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினர். கேரள மாநிலம் குட்டிகாட்டூர் ஜாமிஆ ஆரிஃபிய்யா அன்வாரிய்யா அரபிக் கல்லூரியின் திருக்குர்ஆன் மனனப் பிரிவு ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் நோனா காஜா முஈனுத்தீன் மஸ்லஹீ துஆ இறைஞ்சி, நிகழ்ச்சிகளை நிறைவு செய்தார்.
அனைத்து நிகழ்ச்சிகளிலும், குருவித்துறைப் பள்ளி மஹல்லாவைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகிகள் செய்திருந்தனர்.
|