உலகில் எங்கு பிறை காணப்பட்டாலும் அதனடிப்படையில் முடிவெடுக்கலாம் என்ற கருத்தின் அடிப்படையில் காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நோன்பு, பெருநாள் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
இந்தியாவில் பட்கல் என்ற ஊரிலும், சஊதி அரபிய்யாவிலும் ஷவ்வால் தலைப்பிறை பார்க்கப்பட்ட தகவல் உறுதி செய்யப்பட்டதையடுத்து, இன்று பெருநாள் இரவு என்றும், நாளை ஜூன் 04 செவ்வாய்க்கிழமை ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வறிவிப்பை, அப்பள்ளியின் கத்தீப் மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ, இன்று 21.45 மணியளவில் பின்வருமாறு வெளியிட்டார்:-
நோன்பையோ, பெருநாளையோ தீர்மானிக்க நாம் 3 அளவுகோள்களை வைத்துள்ளோம்.
(1) பிறையை நாம் கண்ணால் பார்க்க வேண்டும். அவ்வாறு பார்க்கப்பட்டால், அன்று முதல் நோன்பு என்றோ பெருநாள் என்றோ தீர்மானிக்கப்படும்.
(2) அப்படிப் பார்க்கப்படவில்லையெனில் அம்மாதம் 30 நாட்களாகப் பூர்த்தி செய்யப்படும்.
(3) பிறை பார்க்கப்பட்ட நம்பகமான தகவல்கள் உலகின் எந்தப் பகுதியிலிருந்து பெறப்பட்டாலும் அதனடிப்படையில் நோன்பு / பெருநாள் முடிவு செய்யப்படும்.
இந்த அளவுகோள்களின் அடிப்படையில் இன்று நாம் தகவல்களுக்காகக் காத்திருந்தோம். ஆனால் உள்ளூரில் பிறை பார்க்கப்பட்ட தகவல்கள் எங்கிருந்தும் கிடைக்கப்பெறவில்லை. உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் கிடைக்கப்பெறாத நிலையில், இரவுத் தொழுகைக்கான நேரத்தையும் அடைந்துவிட்டதால் தொழுகையை நடத்தி முடித்தோம்.
அடுத்த சில நிமிடங்களில், சஊதி அரபிய்யாவில் பிறை பார்க்கப்பட்டதையடுத்து, அந்நாட்டு அரசாங்கம் பெருநாளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதன் அடிப்படையில் இன்று பெருநாள் இரவு என்றும், 04.06.2019. செவ்வாய்க்கிழமை ஈதுல் ஃபித்ர் – நோன்புப் பெருநாள் என்றும் நமது அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தால் அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் அறிவித்தார். பெருநாள் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, நாளை 04.06.2019. செவ்வாய்க்கிழமை 07.30 மணிக்கு, காயல்பட்டினம் கடற்கரையில் பெருநாள் தொழுகை நடத்தப்படவுள்ளது. அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் இமாம் ஏ.எஸ்.நெய்னா முஹம்மத் பெருநாள் தொழுகையை வழிநடத்தவுள்ளார். அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் கத்தீபும், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ குத்பா உரையாற்றவுள்ளார்.
தொழுகைக்கு வரக்கூடிய பொதுமக்களுக்காக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் இயன்றளவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனினும், நீங்கள் வரும்போது தொழுவதற்கான விரிப்புகளைக் கொண்டு வந்து ஒத்துழைக்குமாறு அந்நிர்வாகத்தால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தகவல்:
ஹிஜாஸ் மைந்தன்
(செய்தியாளர், காயல்பட்டணம்.காம்) |