வரும் ஜூலை மாதம் 13ஆம் நாளன்று காயல்பட்டினத்தில் பொதுக்கூட்டத்தை நடத்திட – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளையின் நோன்புப் பெருநாள் ஒன்றுகூடல் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
நோன்புப் பெருநாள் நிறைவுற்றுள்ளதையடுத்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், பெருநாள் ஒன்றுகூடல் & கலந்தாலோனைக் கூட்டம், காயல்பட்டினம் சதுக்கைத் தெருவில் அமைந்துள்ள நகர முஸ்லிம் லீக் அலுவலகமான தியாகி பீ.எச்.எம்.முஹம்மத் அப்துல் காதிர் மன்ஸிலில், 06.06.2019. வியாழக்கிழமையன்று 19.00 மணியளவில், நகர தலைவர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன் தலைமையில் நடைபெற்றது.
அரபி ஷாஹுல் ஹமீத் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். முன்னிலை வகித்தவர்களான மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்த, நகரச் செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூ ஸாலிஹ் வரவேற்றுப் பேச, மாவட்டச் செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், அமீரக காயிதேமில்லத் பேரவை நிர்வாகிகளான எம்.எஸ்.நூஹ் ஸாஹிப் ஆகியோரும், எஸ்.ஏ.சி.ஹமீத், கொள்கை பரப்பு மாவட்டச் செயலாளர் ‘அல்முஸ்தகீம்’ என்.டீ.முஹம்மத் இஸ்மாஈல் புகாரீ, மாவட்ட துணைத் தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், மாவட்ட செய்தி தொடர்பாளர் ‘அக்குஹீலர்’ எஸ்.கே.ஸாலிஹ், நகர நிர்வாகிகளான என்.டீ.அஹ்மத் ஸலாஹுத்தீன், இளைஞரணி நகரச் செயலாளர் எம்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம், எம்.எல்.ஷேக்னா லெப்பை, மாணவரணி உமர் ரஃபீ உள்ளிட்டோர் கருத்துரையாற்றினர்.
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட – மாநில பொதுச் செயலாளரும் – கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 – தேர்தலில் வெற்றி பெற்றோருக்குப் பாராட்டு:
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், கேரள மாநிலத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிட்டு பெருவாரியான வாக்குகள் வேறுபாட்டில் வெற்றிபெற்ற இ.டீ.முஹம்மத் பஷீர், குஞ்ஞாலிக்குட்டி ஆகியோருக்கும், தமிழகத்தில் தூத்துக்குடி தொகுதியில் பெருவாரியான வாக்குகள் வேறுபாட்டில் வெற்றி பெற்ற கவிஞர் கனிமொழி கருணாநிதி, ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அதன் ஏணி சின்னத்தில் முதன்முறையாகப் போட்டியிட்டு, ஒன்றரை லட்சம் வாக்குகள் வேறுபாட்டில் வெற்றி பெற்ற நவாஸ் கனீ ஆகியோருக்கு இக்கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டதோடு, மாநிலம் முழுக்க தி.மு.க. கூட்டணிக்கு பெருவெற்றியைத் தேடித்தந்தமைக்காக – தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், குறிப்பாக நவாஸ் கனீ அவர்களது வெற்றிக்காக அங்கேயே இருந்து தலைமை வகித்துக் களப்பணியாற்றிய மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அவர்களுக்கும் இக்கூட்டம் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறது.
தீர்மானம் 2 – ஜூலை 13இல் பொதுக்கூட்டம்:
வரும் 13.07.2019. சனிக்கிழமையன்று 19.00 மணிக்கு, காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. அக்கூட்டத்தில் – நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் நவாஸ் கனீ அவர்களை நேரில் வரவழைத்துப் பாராட்டும் விழாவாகவும் அதை அமைத்திடத் தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்திட – நகர தலைவர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன், செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூ ஸாலிஹ், மாவட்டச் செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், மாவட்ட துணைத் தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், கொள்கை பரப்பு மாவட்டச் செயலாளர் ‘அல்முஸ்தகீம்’ என்.டீ.முஹம்மத் இஸ்மாஈல் புகாரீ ஆகியோரிடம் பொறுப்பளிக்கப்பட்டது.
தீர்மானம் 3 – கொடியேற்று விழா:
கட்சியின் மூத்த உறுப்பினர் – சமையல் மேஸ்திரி எஸ்.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள், 16.06.2019. அன்று நடைபெறும் தனது பேத்தியின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாநில பொதுச் செயலாளர் உள்ளிட்ட அனைவரையும் கேட்டுக் கொண்டதற்கிணங்க, பொதுச் செயலாளரைச் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளச் செய்திடவும், கட்சியின் மாவட்ட – நகர அங்கத்தினர் அனைவரும் திரளாகக் கலந்துகொள்வதென்றும், இத்திருமணத்தையொட்டி – கடந்த மக்களவைத் தேர்தலுக்காக நகர் முழுக்கக் கழற்றி வைக்கப்பட்ட கட்சியின் கொடிக் கம்பங்களில் மீண்டும் பிறைக்கொடியை ஏற்றி வைக்கும் நிகழ்ச்சியை அன்று மாலையில் நடத்திடவும் தீர்மானிக்கப்பட்டு, ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், எம்.இசட்.சித்தீக், அஹ்மத் ஸாலிஹ், எம்.டீ.எஸ்.முஹ்யித்தீன் ஆகியோரிடம் ஏற்பாட்டுப் பொறுப்பளிக்கப்பட்டது.
தீர்மானம் 4 – வேலைவாய்ப்பு சிறப்பு முகாம்:
கட்சியின் மாணவரணி, இளைஞரணி ஒருங்கிணைப்பில் – நிகழாண்டு ஹஜ் பெருநாளையடுத்து – மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு சிறப்பு முகாமை காயல்பட்டினத்தில் நடத்திட தீர்மானிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக – மன்னர் பாதுல் அஸ்ஹப் தலைமையில் – எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், என்.டீ.அஹ்மத் ஸலாஹுத்தீன், கோமான் அப்துல் கரீம், எம்.எல்.ஷேக்னா லெப்பை, ‘அக்குஹீலர்’ எஸ்.கே.ஸாலிஹ், இளைஞரணி எஸ்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம், மாணவரணி உமர் ரஃபீ ஆகியோரிடம் பொறுப்பளிக்கப்பட்டது. இம்முகாமுக்கான ஆலோசகர்களாக எம்.எஸ்.நூஹ் ஸாஹிப், எஸ்.ஏ.சி.ஹமீத் ஆகியோர் இருக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டது.
தீர்மானம் 5 – மூத்த உறுப்பினர் உடல் நலனுக்குப் பிரார்த்தனை:
உடல்நலக் குறைவால் அவதியிலிருக்கும் கட்சியின் மூத்த உறுப்பினர் எம்.கே.முஹம்மத் அலீ என்ற ஹாஜி காக்கா விரைவில் குணமடைய இக்கூட்டம் மனதாரப் பிரார்த்திக்கிறது.
தீர்மானம் 6 – அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க மாநில தலைமைக்கு வேண்டுகோள்:
கட்சியின் கண்ணியம், கட்டுப்பாட்டைக் குலைத்திடும் வகையில் அவதூறுப் பரப்புரை செய்து குழப்பம் செய்வோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்திட மாநிலத் தலைவரை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை அங்கத்தினர் திரளாகக் கலந்துகொண்டனர். இயலாமை காரணமாக நீண்ட காலமாக கட்சி நடவடிக்கைகளில் பங்கேற்காதிருந்த நிலையில், இக்கூட்டத்தில் கலந்துகொள்ள வருகை தந்திருந்த ஹாஜி எம்.எம்.அஹ்மத் அவர்களுக்கு, நகர நிர்வாகத்தின் சார்பில் சால்வை அணிவித்து வரவேற்பளிக்கப்பட்டது. எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம் துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|