தூத்துக்குடி மாவட்டத்தில் 11ஆம் வகுப்பு பயிலும் சிறுபான்மை மாணவியருக்கு மௌலான ஆசாத் கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் ஆஷீஷ்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
கல்வியில் சிறந்து விளங்கி வசதியின்றி கல்வியினை தொடர இயலாத சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த மாணவிகளுக்கு உதவிடும் வகையில் மத்திய அரசு மௌலானா ஆசாத் தேசிய கல்வி உதவித் தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் தமிழகத்தில் வசிக்கும் இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சிகள் மதத்தை சேர்ந்த 11ஆம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு மத்திய அரசின் மௌலானா ஆசாத் கல்வி அமைப்பு மூலம் 12 ஆயிரம் உதவித் தொகை இரண்டு தவணைகளில் வழங்கப்படுகிறது.
கல்வி உதவித் தொகையில் கல்வி கட்டணம், பாடப்புத்தகம், எழுதுபொருட்கள் மற்றும் உண்டி உறையுள் கட்டணங்களும் அடங்கும். நம் மாநிலத்தில் 767 கல்வி உதவித் தொகைகள் (இஸ்லாமியர் 366, கிறிஸ்தவர் 399, சீக்கியர் 1, புத்தமதத்தினர் 1) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கல்வி உதவித் தொகை பெறுவதற்கு சிறுபான்மையின மாணவிகள் பத்தாம் வகுப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மார்க் பெற்று நடப்பாண்டில் (2011-2012) மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 11ஆம் வகுப்பு பயில்பவராக இருத்தல் வேண்டும்.
சேர்க்கை அனுமதிச்சீட்டு கடத நகல் இணைக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். இதற்கான வருமானச்சான்று மற்றும் உறுதி ஆவணம் போன்றவை இணைக்க வேண்டும்.மாணவிகள் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து நாளைக்குள் (20ஆம் தேதி) சமர்பிக்க வேண்டும்.
பள்ளி தலைமையாசிரியர் 11ஆம் வகுப்பு பயிலும் சிறுபான்மை மாணவிகளிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்று சரிபார்த்து டில்லி முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த உதவித் தொகை பெற மாணவிகள் ஆர்வமாக விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. |