சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 60வது செயற்குழு சென்ற ஆகஸ்ட் 12 அன்று ஆர்யாஸ் உணவகத்தில் நடந்தேறியது. மன்றத்துணைத்தலைவர் மருத்துவர் எம்.ஏ.முஹம்மது ஜியாது அபூபக்கர் தலைமையில் மன்றத்துணைச்செயலர் சகோ.எம்.அய்.முஹம்மது ஷுஅய்ப் இறைமறை ஓத கூட்டம் ஆரம்பமானது.
வரவேற்றார்:
சகோ.பிரபு நூர்தீன் நெய்னா அனைவரையும் வரவேற்றதோடு நமது நகரின் தற்போதைய நிலவரம் அதற்காக நம் மன்றம் எடுக்க வேண்டிய முயற்சிகள் மற்றும் நம் மன்றம் நகரில் நடத்திய சிறப்பு முகாம்கள் பற்றிய செய்திகளையும் பகிர்ந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினர்:
புனித 'உம்ரா'வை நிறைவேற்ற இலண்டனிலிருந்து மக்கா வந்திருக்கும் இலண்டன் காயல் நற்பணிமன்ற துணைத்தலைவர் பொதுநல ஆர்வலர் பொறியாளர் முஹம்மது அபூபக்கர் இச்செயற்குழுவில் சிறப்பு விருந்தினராக கலந்து அறிய பல கருத்துக்களை அள்ளித்தந்தார். அவர் இங்கு பணி செய்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட நம் நகர் நல மன்றத்தின் செயல்பாடுகளை நினைவு கூர்ந்த அவர், அச்சமயம் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் அவைகளை சாதுர்யமாக சந்தித்த முறைகள் குறித்தும் தெளிவாக எடுத்துக்கூறினார்.
அப்போது இதுபோன்ற விரைதொடர்பு (fast communication) சாதணங்கள் இல்லாதிருந்தும் எம்மால் நலப்பணிகளை ஆற்ற எத்தடையும் இல்லை சில நேரதாமதங்களை தவிர. அன்று நாங்கள் பள்ளித்தலைமையை நேராக தொடர்பு கொண்டு கல்வி உதவிகளை வழங்கினோம். இன்று நீங்கள் 'இக்ரஃ' என்ற கல்வி அமைப்பின் மூலம் கல்வி உதவிகளை மிக செம்மையாக செய்கிறீர்கள். நாம் செய்யும் எந்த பணிகளிலும் QUALITY இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் செய்யும் பணிகளில் உயிரோட்டம் இருக்கும். நம் பொதுநல உழைப்புக்களில் QUALITY என்ற தரத்தை பிரகாசிக்க செய்வது நம் அமைப்புக்களின் தலையாய கடமையாக இருக்கவேண்டும்மென்று வலியுறுத்தினார். இம்மன்றப் பணிகளை கண்டு வியப்புறுகிறேன் என்றும், நம்மக்களை சந்தித்து இவ்வாறு அமர்ந்து கலந்துரையாடுவதில் அகமகிழ்கிறேன் என்றும் இம்மன்றத்தின் சீரிய பணிகள் இன்னும் வீரியமடைய இறையிடம் பிரார்த்திக்கிறேன் என்று கூறி, மேலும் பல சிறந்த ஆலோசனைகளை வழங்கி அமர்ந்தார்.
நிதி நிலை:
நாம் கல்வி, மருத்துவத்திற்கு உதவிய, உதவ இருக்கும் தொகை மற்றும் இருப்பு போன்ற நிதி விபரங்களை சகோ.முஹம்மது ஆதம் விவரித்தார்.
மன்ற கண்ணோட்டம்:
நமது மன்ற ஆரம்பம், அதன் உயரிய நோக்கம் இறை பொருத்தத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்ட நம் மன்ற சகோதரர்களின் சிறந்த உழைப்பு, நம் மன்றம் இதுவரை ஆற்றிய அரும்பெரும் சேவைகள், இன்னும் ஆற்றவிருக்கும் பணிகள், 'இக்ரஃ' என்ற கல்வி அமைப்பு உருவாக நம் மன்றத்தின் பங்கு அளப்பரியது என்றால் அது மிகையல்ல என்றும், அந்த கல்வி அமைப்பின் தற்போதைய நிச்சயத்தேவை, அதை உருவாக்க முழு முயற்சி எடுத்த நம்மன்ற முன்னாள் சகோதரர்களின் தியாகத்தன்மை, பல நலமன்றங்கள் தோன்ற காரணமாக இருந்த நம் மன்றத்தின் சிறப்பான செயல்திறன், இதுபோன்ற பல நல்ல சேவை தளத்தில் நம் மன்றம் கால்பதித்து பயணிக்கிறது என்று மன்ற கண்ணோட்டத்தை அவருக்கே உரிய பாணியில் சிறப்பாக சொல்லிச் சென்றார் சகோ.ஹுமாயூன் கபீர்.
உதவிகள்:
வரப்பெற்ற மனுக்கள் வாசிக்கப்பட்டு வழமையான ஆரோக்கிய விவாதம் மூலம் முடிவெடுக்கப்பட்டு உதவிகள் அறிவிக்கப்பட்டன.
மருத்துவம்
கர்ப்பப்பை மற்றும் இருதய அறுவை சிகிச்சை வகைக்கு இரு பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.
கல்வி:
பொறியியல் கல்வி முதலாண்டு மாணவர்கள் நால்வருக்கும், பொறியியல் மற்றும் ஏனைய துறைகளை தேர்ந்தெடுத்து இரண்டாம், மூன்றாம் ஆண்டுகளை முறையே தொடரும் எட்டு மாணவர்கள் என்று மொத்தம் 12 மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.
சிகிச்சை பெறுபவர்களின் நற்சுகத்திற்காகவும், மாணவர்களின் உயரிய முன்னேற்றதிற்காகவும் பிரார்த்திக்கப்பட்டது.
இஃப்தார் மற்றும் இரவு உணவு ஏற்பாடுகள் மன்றத்தலைவர் சகோ.குளம் அஹ்மது முஹ்யித்தீன் அனுசரணையில் மிகச்சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது.
சகோ.எம்.எம்.எஸ்.ஷெய்கு அப்துல் காதிர் நன்றி கூற சகோ.ஜாஃபர் சாதிக் பிரார்த்திக்க கஃப்பாராவுடன் செயற்குழு இனிதே நிறைவு பெற்றது.
தகவல்:
அரபி ஷுஅய்ப், ஜித்தா.
|