எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலைக் கருத்திற்கொண்டு, காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தலில் நகர மக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வழிகாட்டும் முகமாக ‘நகராட்சித் தேர்தல் வழிகாட்டு அமைப்பு‘ ‘MUNICIPAL ELECTION GUIDANCE ASSOCIATION (MEGA)‘ என்ற பெயரில் அமைப்பு துவக்கப்பட்டுள்ளது.
அவ்வமைப்பின் சார்பாக காயல்பட்டினம் பொதுமக்கள் கவனத்திற்கு ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அறிக்கை பின்வருமாறு:-
எல்லையிலா வல்லமையின் அல்லாஹ்வின் திருப்பெயரால்!
உலகெங்கும் வாழ்கின்ற காயல் சொந்தங்களே! அஸ்ஸலாமுஅலைக்கும்!
இன்ஷாஅல்லாஹ், எதிர்வரும் அக்டோபர் மாதம் தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருப்பது தாங்கள் அறிந்ததே! கடந்த தேர்தலின்போது, நகர்மன்ற உறுப்பினர்களுள் பெரும்பான்மையானோர், நமது ஆய்வு செய்யாத அவசர புத்தியால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் மோசமான விளைவுகளையும், சுயநலமிகளால் ஏற்பட்ட கேடுகளையும், கடந்த ஐந்தாண்டு காலமாக நாம் அனுபவித்தோம். நகர்மன்றத்திற்கு நல்ல தலைவர் கிடைத்துவிட்டார் என்று நிம்மதி அடைந்த நாம், சரியான மன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டதால் நகர்மன்றம், நாறும் மன்றமாகிவிட்டதை கண்கூடாகக் காண்கிறோம்.
இந்த முறையும், கடந்த முறையைப்போல, எடுத்தோம்,கவிழ்த்தோம் என்று சமூக அக்கறை இல்லாதவர்களை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கும் அவல நிலை ஏற்படாமல் தடுக்க நாம் சிந்தித்து செயலாற்ற வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். தனி நபர்களின் விருப்பத்தை தாண்டி, ஒட்டுமொத்த நகர மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் ஜனநாயகரீதியான ஒரு மன்றம் அமைக்கப்பட்டால் மாத்திரம்தான், நாம் எதிர்பார்க்கும் நல்லதொரு காயலை கட்டமைக்க முடியும்.
அப்படிப்பட்ட ஒரு மகத்தான பணி நடந்தேறவும், நல்ல ஒழுக்கசீலர்களை தேர்ந்தெடுக்க மக்களை வழிநடத்தவும்,உலகளவில் சமூக ஆர்வலர்கள் ஒன்றுகூடி,ஒரு தற்காலிக அமைப்பை ஏற்படுத்தவேண்டும் என்ற ஏராளமான காயலர்களின் வேண்டுகோளுக்கிணங்கி, அல்லாஹ்வை முன்னிறுத்தி, நகர்நலன் ஒன்றை மாத்திரமே கருத்திற்கொண்டு MUNICIPAL ELECTION GUIDANCE ASSOCIATION (MEGA) என்னும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வழிகாட்டும் தற்காலிக அமைப்பு இன்றுமுதல் செயல்படத் துவங்குகிறது என்னும் இனிய செய்தியை உலகெங்கும் வாழும் காயலர்க்கு அறியத் தருகிறோம்.
இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களாக மரியாதைக்குரிய சாளை ஷேக் சலீம் (அமீரக காயல் நல மன்ற துணைத் தலைவர்), ஃபாஸுல் கரீம் (கத்தர் காயல் நல மன்ற தலைவர்) ஆகியோர் பொறுப்பேற்கின்றனர்.
இதன் துணை ஒருங்கிணைப்பாளராக சாளை நவாஸ் (சிங்கப்பூர்) அவர்களும், செய்தித் தொடர்பாளராக கவிமகன் காதர் அவர்களும் பணியாற்ற இசைந்துள்ளனர். இந்த MEGA என்னும் தற்காலிக அமைப்பிற்கும், உலகின் காயல் நல மன்றங்கள் மற்றும் வேறெந்த சமூக, கொள்கை, அரசியல் அமைப்புகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதனை உறுதிபட அறியத் தருகிறோம்.
கடந்த காலங்களில் நாம் எத்தனையோமுறை நகர்நலன் கருதி நமது காயல்பட்டணம்.காம்இல் செய்த விவாதங்கள், காயல் மாநகரில் வாழும் வாக்காளர்களை சென்றடையும் வாய்ப்பு மிகவும் குறைவு. ஆதலால் உண்மை நிலையை ஊருக்கு எடுத்துச் சொல்லவும், அந்ந்தந்த பகுதிகளில் இருக்கும் ஜமாஅத் மற்றும் சமூக அமைப்புகளுடன் தொடர்புகொள்ளவும், நல்லவற்றை பல்வேறு தகவல் மற்றும் ஒளிபரப்பு ஊடகங்கள் மூலம் நகர மக்களுக்கு எடுத்துச் செல்லவும், நல்லவர்களை அடையாளம் காட்டவும் இப்படி ஒரு அமைப்பு செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று கருதுகிறோம்.
இன்றைக்கு நாம் துவங்கும் பணி, இன்ஷா அல்லாஹ் அடுத்த ஐந்து வருடங்களுக்கு, நகரத்திற்கும், நகர மக்களுக்குமான நல்லதோர் நகர்மன்றம் அமைவதற்கு அச்சாரமாக அமையவேண்டும் என்பதே எமது ஆசை, குறிக்கோள்.
இந்த அமைப்பிற்கு தலைமை ஏற்பதற்கும்,துணை ஒருங்கிணைப்பாளர், செயற்குழு உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், என்று அனைத்து பொறுப்புகளுக்கும் வர விரும்பும், தன்னார்வலர்கள் தயவு செய்து, salai_saleem@hotmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அஞ்சல் செய்திட அன்புடன் வேண்டுகிறோம்.
ஒன்றுபடுவோம்!
நல்லதோர் நகர்மன்றம் அமைத்திடுவோம்!!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
கவிமகன் காதர்,
செய்தித் தொடர்பாளர் - MEGA |