புதிய தலைமைச்செயலகத்துக்காக கட்டப்பட்ட கட்டடத்தின் ஏ பிளாக்கில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் இன்று அறிவித்தார். மேலும் இன்னும் கட்டுமானப் பணி நிலுவையில் உள்ள பி பிளாக் கட்டடத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் அவர் இன்று வெளியிட்ட அறிக்கை வருமாறு:-
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
நோய் இன்னதெனக் கண்டறிந்து, பின் அது உண்டான காரணத்தை அறிந்து, அதன் பின் அந்நோயைத் தீர்ப்பதற்கான வழிமுறையைக் கையாண்டு, நோய் நீங்க மருத்துவம் செய்ய வேண்டும் என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப, அனைவருக்கும் சுகாதாரம் என்ற குறிக்கோளை எய்தும் நோக்குடன், “தேசிய ஊரக சுகாதார நலத் திட்டம்”- National Rural Health Mission; “தமிழ்நாடு சுகாதார நலத் திட்டம்” – Tamil Nadu Health System Project என்னும் இரண்டு மாபெரும் திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தகுதி வாய்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள், நவீன உபகரணங்கள் ஆகியவற்றுடன் சுகாதாரமான சுற்றுச்சூழலைக் கொண்ட தரமான மருத்துவச் சேவையை தாராளமாக அனைத்து மக்களுக்கும் வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.
இந்தக் குறிக்கோளை நிறைவேற்றும் விதமாக, ஆரம்ப சுகாதார நிலையங்களை 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த்துதல்; உயிர் காக்கும் உபகரணங்களை தமிழ்நாடு சுகாதார நலத் திட்டத்தின் கீழ் 55 கோடி ரூபாய் செலவில் மாவட்ட மருத்துவமனைகளுக்கு வழங்குதல்; உணவு பாதுகாப்பு-மருந்து கட்டுப்பாடு நிருவாகத்திற்கென தனியாக ஒரு ஆணையரகத்தை உருவாக்குவது; திருச்சி அண்ணல் காந்தி அரசு மருத்துவமனையில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு சிகிச்சை மையம், அதாவது, Super Specialty Centre; மக்கள் வீட்டிற்கே சென்று சுகாதார வசதிகள் அளிக்கக் கூடிய “நடமாடும் மருத்துவமனை” என்னும் புதிய திட்டம் உட்பட பல்வேறு சிறப்புத் திட்டங்கள் எனது தலைமையிலான அரசின், 2011-2012 ஆம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் அறிவீர்கள்.
இவை மட்டும் அல்லாமல், அனைவருக்கும் மருத்துவ சேவையை நல்கும் வகையில், “முதலமைச்சரின் விரிவான பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்” தொடங்கப்படும் என்றும், இந்தத் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ வசதிகளை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்படும் என்றும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் அடிப்படையில், அரசு மருத்துவமனைகளில் உள்ள
மருத்துவ வசதிகளை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போது, இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும், குறிப்பாக, ஏழை, எளிய மக்கள், பல்வேறு நோய்களுக்கும், தரமான, உயரிய சிகிச்சையினை இலவசமாகப் பெறும் வகையில், பல துறை உயர் சிறப்பு மருத்துவமனை, அதாவது, ஆரடவi ளுரயீநச ளுயீநஉயைடவல ழடிளயீவையட ஒன்றை அமைக்க எனது தலைமையிலான அரசு முடிவு எடுத்துள்ளது என்பதை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மருத்துவமனை, சென்னை மாநகரத்தின் மையப் பகுதியான அண்ணா சாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், முந்தைய தி.மு.க அரசால், புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக கட்டப்பட்ட, 97,829 சதுர மீட்டர் தளப் பரப்பு கொண்ட பிளாக் 'A' கட்டடத்தில் அமைக்கப்படும். இந்தக் கட்டடம், சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகத்தில் தற்போது உள்ள 36 துறைகளும் செயல்படுவதற்கு போதுமானதல்ல என்பதாலும்; பயன்படுத்தக் கூடிய இடம் வெகு குறைவாக இருப்பதால், அலுவலக பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இந்தக் கட்டடம் இல்லை என்பதாலும்; இரு வேறு கட்டடங்களில் இருந்து தலைமைச் செயலகம் செயல்பட முடியாது என்பதாலும்; சட்டமன்றமும், தலைமைச் செயலகமும் புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வருவதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவீர்கள்.
தற்போது, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், பயன்படுத்தப்படாமல் உள்ள கட்டடம், ஏழை, எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த பலதுறை உயர் சிறப்பு மருத்துவமனையை அமைக்க எனது தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தக் கட்டடத்தில் பல துறை உயர் சிறப்பு மருத்துவமனை அமையும் வகையில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு, மருத்துவ வல்லுநர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டு, உயர் தர மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான நவீன உபகரணங்கள் வாங்கப்பட்டு, இந்த மருத்துவமனை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மருத்துவமனை, புது டெல்லியிலுள்ள AIIMS (All India Institute of Medical Sciences) மருத்துவமனைக்கு இணையான வசதிகளுடன் விளங்கும் என்பதையும் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.
மேலும், தற்போது கட்டப்பட்டு வரும் பிளாக் 'B' கட்டடங்களில் புதியதாக ஒரு அரசு மருத்துவக் கல்லூரியை தொடங்கவும் எனது தலைமையிலான அரசு முடிவு எடுத்துள்ளது என்பதையும் மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|