எம்.எல்.ஏ.யாக வெற்றி பெற்றதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கும்படி முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நோட்டீஸ் அனுப்பி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த மே மாதம் 13ஆம் தேதி வெளியிடப்பட்டன. திருச்செந்தூர் தொகுதி தி.மு.க. வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க. வேட்பாளர் பி.ஆர்.மனோகரனை விட, 640 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், தேர்தல் விதிகளை மீறி அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதாகவும், எனவே அவர் பெற்ற வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் மனோகரன் மனு தாக்கல் செய்துள்ளார்.
பெரியகுளம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் ஏ.லாசர், தி.மு.க. வேட்பாளர் வி.அன்பழகனை விட, 5,641 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதை எதிர்த்து வி.அன்பழகனும், அந்த தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் எம்.கணபதியும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
கள்ளக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் அழகுவேலு, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பவராசுவை விட, 59,998 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து சின்னத்துரை என்பவர் ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
வேப்பனஹள்ளி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட செங்குட்டுவன், தே.மு.தி.க. வேட்பாளர் எஸ்.எம்.முருகேசனை விட, 7,604 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து முருகேசன், சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த 5 வழக்குகளும், நீதிபதி கே.வெங்கட்ராமன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தன. இந்த வழக்குகளை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, அவற்றுக்கு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டுமென்று வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அழகுவேலு, லாசர், செங்குட்டுவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
நன்றி:
தூத்துக்குடி ஆன்லைன் (18.08.2011) |