தமிழகத்தில் உள்ள சில நூலகங்களின் தரத்தினை உயர்த்திட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:
நூலகங்கள் நாட்டின் அறிவுக் களஞ்சியங்கள். கேடில் விழுச்செல்வமான கல்வியை முழுமையாகப் பெற வேண்டுமாயின், அதற்கு பெருந்துணையாயுள்ளது நூல் நிலையங்கள் ஆகும்.
"பூசை அறை, சமையல் அறை, படுக்கை அறை வைத்துக் கட்டும் நம் மக்கள், படிக்கும் அறை வைத்து வீடு கட்டும் காலம் என்று வருகிறதோ அன்றுதான் நாம் எழுச்சி பெற்றவர்களாவோம்" என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறுவார்.
எந்த ஒரு நாட்டில் படிக்கும் பழக்கம் பெருகுகிறதோ அந்த நாடு விழிப்புணர்வு மிக்க நாடாக கருதப்படும். இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நூலகங்களின் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, 96 ஊர்ப்புற நூலகங்களை கிளை நூலகங்களாக தரம் உயர்த்தியும்,
அதனை நிர்வகிக்க 96 மூன்றாம் நிலை நூலகர் பணியிடங்களை ரூ 5,200 - 20,000/- + தர ஊதியம் ரூ.2,000/- என்ற ஊதிய விகிதத்தில் தோற்றுவிக்கவும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
இதுமட்டுமல்லாமல், 160 பகுதி நேர நூலகங்களை ஊர்ப்புற நூலகங்களாக தரம் உயர்த்தவும், தரம் உயர்த்தப்படும் நூலகங்களை நிர்வகிக்க 160 ஊர்ப்புற நூலகர் பணியிடங்களை ரூ2,500–5,000 + தர ஊதியம் ரூ.500/- என்ற சிறப்பு ஊதிய விகிதத்தில் தோற்றுவிக்கவும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
அரசின் இந்த நடவடிக்கைகள் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு பெரும் உதவிகரமாக இருப்பது மட்டுமன்றி, அவர்களது கல்வி அறிவு சிறந்து விளங்க வழிவகை செய்யும்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத்துறை,
சென்னை-9.
|