தூத்துக்குடியில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சுகிராமம் வரை கிழக்கு கடற்கரை சாலை நீட்டிக்கப்படவுள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சுமார் 119 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த பாதையை அமைக்க, தமிழக அரசு சுமார் 257 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் தீட்டிவுள்ளது.
தூத்துக்குடியில் இருந்து அஞ்சுகிராமம் வரை இந்த சாலை அமையவுள்ள பாதை குறித்த விபரத்தை காயல்பட்டணம்.காம் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், தமிழக நெடுஞ்சாலை துறையிடம் இருந்து வினவி இருந்தது. அது குறித்த பதில் தற்போது கிடைத்துள்ளது.
அதில் - இந்த சாலை, முத்தையாபுரம், முக்காணி, ஆத்தூர், திருச்செந்தூர், மணப்பாடு, பெரியதலை - வழியாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருச்செந்தூர் தாலுகாவில் - இப்பாதை, ஆத்தூர், திருச்செந்தூர், குலசை மற்றும் மணப்பாடு வழியாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சாலை, காயல்பட்டினம் வழியாக அமைந்திட காயல்பட்டினத்தில் முயற்சிகள் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து நடவடிக்கைகள் எடுக்க, இ.சி.ஆர். பயனாளிகள் சங்கம் (திருச்செந்தூர் வட்டம்) என்ற பெயரில் அமைப்பு ஒன்றும் அண்மையில் துவக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
[செய்தி திருத்தப்பட்டது @ 7:30 am / 21.8.2012] |