குவைத் நாட்டில் நேற்று (19.08.2012) நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது. அங்குள்ள காயலர்களின் பெருநாள் சந்திப்பு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் பின்வருமாறு:-
குவைத் நாட்டில் நேற்று (19.08.2012) நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது. குவைத் நகரில் வசிக்கும் காயலர்களாகிய நாங்கள், குவைத் - ஷர்க் என்ற பகுதியில் அமைந்துள்ள தமிழ் பள்ளிவாசலில், தமிழகத்தின் ஏராளமான முஸ்லிம் மக்களுடன் இணைந்து பெருநாள் தொழுகையை நிறைவேற்றினோம்.
திண்டுக்கல்லைச் சேர்ந்தவரும், காயல்பட்டினம் மஸ்ஜிதுல் ஆமிர் - மரைக்கார் பள்ளிவாசலில் முன்பு இயங்கி வந்த ரூஹுல் இஸ்லாம் (சுலைமானிய்யா) திருக்குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸாவின் முன்னாள் ஆசிரியருமான மவ்லவீ ஹாஃபிழ் ஜமாலுத்தீன் ஃபாஸீ தொழுகையை வழிநடத்தியதோடு, உணர்வூட்டும் அழகிய உரையாற்றினார்.
தொழுகை நிறைவுற்ற பின்னர், காயலர்களான நாங்கள் தமிழகத்தின் அனைத்து முஸ்லிம் மக்களுடனும், மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்ட பின், காயலர்கள் ஒன்றுகூடி எமக்குள் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டோம்.
பின்னர், குவைத் நகரிலுள்ள முதன்னா காம்ப்ளக்ஸில், அப்பா பள்ளித் தெரு கே.எஸ்.அமானுல்லாஹ்வால் - காயல்பட்டினம் பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்பட்ட வட்டிலியாப்பம், ஜவ்வரிசி பாயசம், இடியாப்பம் - மாசி, பரோட்டா, களறி உள்ளிட்ட சுவையூட்டும் உணவுப் பதார்த்தங்கள் அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
உணவுண்ட நாங்கள் யாவருக்கும், காயல்பட்டினத்தில் கல்யாண விருந்துண்ட திருப்தியை உணர்ந்தோம்.
இவ்வாறு, குவைத் காயலர்கள் தெரிவித்துள்ளனர்.
தகவல் & படங்கள்:
நளீம்
மற்றும்
செய்யித் அம்ஜத் அலீ (ஹைதராபாத்) |