காயல்பட்டினத்தில் நடப்பாண்டு ரமழான் மாதத்தின் தினசரி மாலை நேரங்களில், நோன்பு துறப்புக்காக பிரதான வீதி, எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, கூலக்கடை பஜார் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளிலும் தின்பண்ட வகைகள் சுடச்சுட தயாரித்து விற்பனை செய்யப்படும். மற்ற நாட்களில் காலை நேரங்களில் மீன் சந்தையிலும் - தெருக்களில் கூவியும் விற்பனை செய்யப்படும் மீன் வகைகள் ரமழான் காலங்களில் மட்டும் மாலையிலும் பிரதான வீதியில் விற்பனை செய்யப்படும்.
இரவு நேரங்களில் ஆங்காங்கே தின்பண்டங்களுடன் தேனீர் கடைகள் திறந்திருக்கும். ஒரு சில கடைகளில் மட்டன் கபாப் உள்ளிட்ட சிறப்பு உணவு வகைகளும் விற்பனை செய்யப்படும்.
பல்வேறு தினங்களில் பதிவு செய்யப்பட்ட நோன்பு கால மாலை நேர காட்சிகள் பின்வருமாறு:-
நகரிலுள்ள கடைகளுள் சற்று வேறுபட்டதாக, காயல்பட்டினம் கூலக்கடை பஜாரில் இயங்கி வரும் ஜீ ஸ்நாக்ஸ் கடையில், தம் வீடுகளில் ஸஹர் உணவு அருந்த வாய்ப்பில்லாத மக்களுக்காக தினமும் பல்வேறு உணவு வகைகளுடன் ஸஹர் உணவு கட்டணமின்றி பரிமாறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரமழான் காலங்களில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, நோன்பு நேரமான காலை முதல் மாலை வரை உணவுக் கடைகளில் திரை தொங்க விடப்பட்டிருக்கும். நோயாளிகள், முதியோர் மற்றும் முஸ்லிமல்லாத மக்கள் அக்கடைகளில் சாப்பிட வருகையில், நோன்பாளிகள் எதிர்பட்டால் அது சங்கைக் குறைவாக இருக்குமெனக் கருதி முஸ்லிம் - முஸ்லிமல்லாத அனைத்து வணிகர்களும் தம் கடைகளுக்கு முன் திரை தொங்க விட்டிருப்பர். காலப்போக்கில் இப்பழக்கம் மறைந்து வருகிற நிலையிலும், ஒரு சில கடைகளில் இவ்வாண்டும் மறவாமல் திரை தொங்கியது.
|