காயல்பட்டினத்திலுள்ள பெரும்பாலான பள்ளிவாசல்களில் ரமழான் இரவு தராவீஹ் - சிறப்புத் தொழுகையை வழிநடத்த, திருக்குர்ஆனை மனனம் செய்து முடித்த ஹாஃபிழ்கள் பிரத்தியேகமாக நியமிக்கப்படுவர்.
ரமழான் கடைசி தினங்களில் இவர்கள் தராவீஹ் தொழுகையில் திருக்குர்ஆனை முழுமையாக ஓதி முடித்த பின்னர், கடைசியாக தமாம் செய்யப்பட்டு, அன்றைய தொழுகை நிறைவுற்ற பின்னர் அவர்களை கண்ணியப்படுத்தும் நிகழ்ச்சி நடத்தப்படும் வழமை உள்ளது.
இந்நிகழ்ச்சியின்போது பள்ளி நிர்வாகத்தின் சார்பிலும், ஜமாஅத்தார் தன்னார்வத்தோடும் - தொழுகை நடத்திய ஹாஃபிழ்களுக்கு ஊக்கத் தொகை வழங்கி வாழ்த்துவர்.
அந்த அடிப்படையில், காயல்பட்டினம் மஸ்ஜிதுல் உஸ்ஃபூர் - குருவித்துறைப் பள்ளியில், தராவீஹ் தொழுவித்த ஹாஃபிழ்களை கண்ணியப்படுத்தும் நிகழ்ச்சி, நேற்று (17.08.2012) இரவு ரமழான் சிறப்புத் தொழுகைகள் நிறைவுற்ற பின்னர் நடைபெற்றது.
முன்னதாக தராவீஹ் தொழுகையும், அதனைத் தொடர்ந்து தஸ்பீஹ் தொழுகையும், நிறைவாக வித்ர் தொழுகையும் நடைபெற்றது.
தொழுகை நிறைவுற்ற பின்னர், ஹாஃபிழ்களை கண்ணியப்படுத்தும் நிகழ்ச்சி, வெளிப்பள்ளி வளாகத்தில் - பள்ளியின் துணைத்தலைவர் ஹாஜி நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம் தலைமையில் நடைபெற்றது. ஹாஜி கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத், ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஆகியோர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினர்.
துவக்கமாக, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ வாழ்த்துரை வழங்கினார்.
பின்னர், பள்ளியில் பணியாற்றி வரும் இமாம், பிலால் மற்றும் கணக்கருக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் ரமழான் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
நடப்பாண்டு ரமழான் மாதத்தில் தராவீஹ் சிறப்புத் தொழுகைக்கு இமாமாக நியமிக்கப்பட்டிருந்த ஹாஃபிழ் உமர் ஃபாரூக் ரிஸ்வீ-க்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ஹாங்காங் கம்பல்பக்ஷ் ட்ரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் - வழமை போல இவ்வாண்டும் தினமும் தராவீஹ் தொழுகை வழி நடத்திய ஹாஃபிழ்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், பள்ளியின் செயலாளர் ஹாஜி எஸ்.எம்.கபீர், இணைச் செயலாளர் ஹாஃபிழ் எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல் உள்ளிட்ட ஜமாஅத் பிரமுகர்களும் - பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
படங்களில் உதவி:
ஹாஜி M.N.மின்ஹாஜ் முஹ்யித்தீன் |