காயல்பட்டினத்தில் பெரும்பாலான பள்ளிவாசல்களில் ரமழான் மாத இரவுகளில் தராவீஹ் - சிறப்புத் தொழுகையின்போது திருமறை குர்ஆனின் வசனங்கள் பகுதி பகுதியாக ஓதப்பட்டு, ரமழான் 27 அல்லது 29ஆம் நாளில் முழு குர்ஆனும் ஓதி தமாம் செய்யப்படும்.
இந்த தமாம் நிகழ்வை முன்னிட்டு, நகரின் பல பள்ளிகளில் அடுத்தடுத்த தினங்களில் காயல்பட்டினம் பாரம்பரிய முறைப்படி களறி சாப்பாடு தயாரிக்கப்பட்டு, ஸஹர் - நோன்பு நோற்பு உணவாக அந்தந்த ஜமாஅத் மஹல்லாவாசிகளுக்கு விருந்துபசரிப்பு செய்யப்படும்.
இந்த விருந்துபசரிப்பில் சீர்கேடுகள் ஏற்பட்டுவிடாது தடுக்கும் நோக்குடன், தற்காலத்தில் சில பள்ளிவாசல்களில் முற்கூட்டியே மஹல்லாவாசிகளுக்கு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, அதனைக் கொண்டு வரும் ஜமாஅத்தார் உணவுண்ண அனுமதிக்கப்படுகிறது.
இன்னும் சில பள்ளிகளில், களறி சாப்பாடு சமைக்கப்பட்டு, மஹல்லாவாசிகள் பள்ளிக்கு அழைக்கப்படாமல் - அவரவர் இல்லங்களுக்கு சாப்பாட்டுப் பொதி அனுப்பி வைக்கும் முறையும் உள்ளது.
வேறு சில பள்ளிகளில், நெய்சோறு சமைக்கப்பட்டு பனை ஓலையால் செய்யப்பட்ட பெட்டியில் (மிட்டாய் பெட்டி) அடைக்கப்பட்டு - மஹல்லாவாசிகளுக்கு வினியோகிக்கப்படும் வழமை உள்ளது.
காயல்பட்டினம் கோமான் மொட்டையார் பள்ளியில் ஆண்டுதோறும் ரமழான் 27ஆம் நாள் இரவில் தமாம் சாப்பாடு சமைக்கப்பட்டு, ஜமாஅத்தாருக்கு ஸஹர் - நோன்பு நோற்பு உணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
ரமழான் 29ஆம் தினமான இன்று அதிகாலையில், காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி சார்பில் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் வளாகத்திலும், அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளி, அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளி, அஹ்மத் நெய்னார் பள்ளி உள்ளிட்ட பல பள்ளிவாசல்களிலும் ஸஹர் - நோன்பு நோற்பிற்காக காயல்பட்டினம் பாரம்பரிய முறைப்படி களறி சாப்பாடு தயாரிக்கப்பட்டு, மஹல்லாவாசிகளுக்கு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
பெரிய குத்பா பள்ளியில் நடைபெற்ற விருந்துபசரிப்பின்போது பதிவு செய்யப்பட்ட காட்சிகள் பின்வருமாறு:-
|