காயல்பட்டினத்திலுள்ள பெரும்பாலான பள்ளிவாசல்களில் ரமழான் இரவு தராவீஹ் - சிறப்புத் தொழுகையை வழிநடத்த, திருக்குர்ஆனை மனனம் செய்து முடித்த ஹாஃபிழ்கள் பிரத்தியேகமாக நியமிக்கப்படுவர்.
ரமழான் கடைசி தினங்களில் இவர்கள் தராவீஹ் தொழுகையில் திருக்குர்ஆனை முழுமையாக ஓதி முடித்த பின்னர், கடைசியாக தமாம் செய்யப்பட்டு, அன்றைய தொழுகை நிறைவுற்ற பின்னர் அவர்களை கண்ணியப்படுத்தும் நிகழ்ச்சி நடத்தப்படும் வழமை உள்ளது.
இந்நிகழ்ச்சியின்போது பள்ளி நிர்வாகத்தின் சார்பிலும், ஜமாஅத்தார் தன்னார்வத்தோடும் - தொழுகை நடத்திய ஹாஃபிழ்களுக்கு ஊக்கத் தொகை வழங்கி வாழ்த்துவர்.
அந்த அடிப்படையில், காயல்பட்டினம் புதுப்பள்ளிவாசலில் 15.08.2012 அன்று - ரமழான் 27ஆம் இரவில் திருக்குர்ஆன் தமாம் செய்யப்பட்டது. அதனையடுத்து, தராவீஹ் தொழுகையை வழிநடத்திய பள்ளியின் இமாம் ஹாஃபிழ் செய்யித் நூஹ், பிலால் அரபி முஹம்மத் முஹ்யித்தீன், தராவீஹ் சிறப்பு இமாம் ஹாஃபிழ் மூஸல் காழிம் ஆகியோருக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் ஊக்கத்தொகை அளிக்கப்பட்டு, சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.
புதுப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் - பள்ளி மாணவர்களுக்கான மார்க்கக் கல்வி நிறுவனம் மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபை சார்பிலும் இமாம்களுக்கு சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.
பின்னர், பள்ளியின் பாரம்பரிய வழமைப்படி முரசு (டங்கா) முழங்க, அரபி பாடல்களைப் பாடியவாறு நகர்வலமாக இமாம்கள் அவர்களின் இல்லங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு, இமாம்களின் இல்லத்தினர் சார்பில் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஜமாஅத்தாருக்கு வரவேற்பளிக்கப்பட்டது.
நிகழ்வுகள் அனைத்திலும், புதுப்பள்ளி மஹல்லாவாசிகள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
இந்நடைமுறை இப்பள்ளியில் பல்லாண்டு காலமாக இருந்து வருவதாக பள்ளி நிர்வாகிகள் தெரிவித்தனர். |