காயல்பட்டினத்தில் ஷவ்வால் மாத தலைப்பிறை காணப்படாததாலும், பிற பகுதிகளிலிருந்தும் தலைப்பிறை காணப்பட்ட தகவல் கிடைக்கப் பெறாததாலும் நாளை - ஆகஸ்ட் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரமழான் 30ஆம் நாள் என, காயல்பட்டினம் மஹ்ழரா - ஜாவியா அரபிக்கல்லூரிகளின் உலமாக்கள் கூட்டுக் கலந்தாலோசனைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. விபரம் பின்வருமாறு:-
இன்று ரமழான் 29ஆம் நாள் நிறைவுற்றுள்ளதையடுத்து, நோன்புப் பெருநாள் குறித்து முடிவு செய்வதற்கான - காயல்பட்டினம் மஹ்ழரா - ஜாவியா அரபிக்கல்லூரிகளின் உலமாக்கள் (மார்க்க அறிஞர்கள்) கலந்தாலோசனைக் கூட்டம், இன்று (18.08.2012) 19.00 மணியளவில் காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியில், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவரும், காயல்பட்டினம் முஹ்யித்தீன் பள்ளியின் இமாமுமான மவ்லவீ ஏ.கே.அபூ மன்ஸூர் மஹ்ழரீ தலைமையிலும்,
தூத்துக்குடி மாவட்ட காழீயும், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் இமாமும், மஹ்ழரா அரபிக்கல்லூரியின் துணை முதல்வருமான மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ,
தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவரும், அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும், ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ,
காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
காயல்பட்டினத்திலிருந்தும், இதர பகுதிகளிலிருந்தும் ஷவ்வால் தலைப்பிறை பார்க்கப்பட்ட தகவல்கள் இக்கூட்டத்தில் எதிர்பார்க்கப்பட்டது. நீண்ட நேரமாகியும் இது குறித்து எந்தத் தகவலும் கிடைக்கப் பெறாததால், ஆகஸ்ட் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று (நாளை) ரமழான் 30ஆவது நோன்பு நோற்கப்பட வேண்டும் என்று கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. கூட்டத்தின் நிறைவில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு பின்வருமாறு:-
இக்கூட்டத்தில், காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ, ஜாவியா அரபிக்கல்லூரியின் துணை முதல்வரும் - மகுதூம் ஜும்ஆ மஸ்ஜிதின் கத்தீபும் - அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக் கல்லூரியின் பேராசிரயருமான மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, மவ்லவீ ஹாஃபிழ் கத்தீப் கே.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, மவ்லவீ ஹாஃபிழ் எம்.எம்.சுலைமான் லெப்பை மஹ்ழரீ, மவ்லவீ ஹாஃபிழ் உமர் ஃபாரூக் அஃழம் மஹ்ழரீ, மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் மஹ்ழரீ, ஹாஜியப்பா தைக்கா பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் முஹம்மத் அலீ மஹ்ழரீ, ஜாவியா அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ முஹம்மத் முஹ்யித்தீன், மவ்லவீ அப்துல் வதூத் ஃபாஸீ, மவ்லவீ ஹாஃபிழ் கே.ஏ.தாஜுத்தீன் மஸ்லஹீ, மவ்லவீ ஹாஃபிழ் நோனா காஜா முஈனுத்தீன் ஜிஷ்தீ மஸ்லஹீ உள்ளிட்ட - காயல்பட்டினம் நகரின் பல்வேறு உலமாக்களும், ஹாஜி ஸதக்கத்துல்லாஹ் (ச.த.), ஹாஜி எம்.ஏ.எஸ்.அபூ தல்ஹா, ஹாஜி பிரபுத்தம்பி உள்ளிட்ட பிரமுர்களும் கலந்துகொண்டனர்.
நோன்புப் பெருநாள் குறித்த அறிவிப்பை அறிந்துகொள்வதற்காக, இன்றிரவு மஃரிப் தொழுகை நிறைவுற்றவுடன், நகர பொதுமக்கள், உலமாக்கள் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெறும் மஹ்ழரா அரபிக்கல்லூரி வளாகத்தில் திரண்டிருந்தனர்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு கிடைக்கப்பெற்றதையடுத்து அவர்கள் தமக்கறிமுகமானோருக்கு உடனடியாக தகவல்களைத் தெரிவித்தவாறு கலைந்து சென்றனர்.
ஆகஸ்ட் 19ஆம் தேதி - ஞாயிற்றுக்கிழமை ரமழான் 30 நாட்கள் பூர்த்தியாவதையடுத்து, 20.08.2012 திங்கட்கிழமை நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. |