நோன்புப் பெருநாளை முன்னிட்டு, காயல்பட்டினம் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மற்றும் காயல்பட்டினம் அரிமா சங்கம் ஆகியன இணைந்து, ஏழை முஸ்லிம் பெண்களுக்கு பெருநாள் புத்தாடை - உணவுப் பொருள் வழங்கும் விழாவை 15.08.2012 அன்று காலை 10.30 மணியளவில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடத்தின.
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் விழாவிற்குத் தலைமை தாங்கினார். அதன் ஒருங்கிணைப்பாளர் ஹாஜி சொளுக்கு எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் என்ற முத்து ஹாஜி, கே.எம்.டி. மருத்துவமனை தலைவர் ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் நகரப் பிரமுகர்களான ஃபாஸீ, ஹாஜி முஹ்யித்தீன் தம்பி (துரை), அரிமா சங்க காயல்பட்டினம் கிளை நிர்வாகச் செயலாளர் வி.டி.என்.அன்ஸாரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜாவியா அரபிக்கல்லூரியின் மாணவர் எஸ்.எம்.எச்.ஃபரீதுத்தீன் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். காயல்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை பயனாளிகள் சங்க தலைவர் லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அரிமா சங்க பொருளாளர் கே.அப்துர்ரஹ்மான் அரிமா கொடி வாழ்த்துரை வழங்கினார். அரிமா சங்க தலைவர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா அறிமுகவுரையாற்றினார்.
இவ்விழாவில், அரிமா மாவட்ட துணை ஆளுநர் சிவகாமி எஸ்.ஆறுமுகம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அவரைத் தொடர்ந்து, சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட - அரிமா மண்டல தலைவர் தர்மன் டிரோஸ் வாழ்த்துரை வழங்கினார்.
பின்னர், சிறப்பு விருந்தினர், சிறப்பழைப்பாளர்கள் மற்றும் மேடையில் முன்னிலை வகித்த அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டதுடன், சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.
பின்னர், எதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, காயல்பட்டினத்தின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த 1000 முஸ்லிம் பெண்களுக்கு பெருநாள் புத்தாடை மற்றும் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதி இலவசமாக வழங்கப்பட்டது.
விழாவிற்குத் தலைமை - முன்னிலை வகித்தோரும், சிறப்பு விருந்தினர் - சிறப்பழைப்பாளர்களும் அவற்றை பயனாளிகளுக்கு வழங்கினர்.
காயல்பட்டினம் அரிமா சங்க செயல் செயலாளர் ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை நன்றி கூற, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ துஆவுடன் விழா நிறைவுற்றது.
இவ்விழாவில், நகர அரிமா சங்க உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை, காயல்பட்டினம் நகர அரிமா சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
|