காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில், ஹாஃபிழ்கள் - ஆலிம்கள் என சுமார் 150 பேர் பங்கேற்றுள்ளனர். விபரம் பின்வருமாறு:-
காயல்பட்டினம் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் சார்பில், திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்துள்ள ஹாஃபிழ்கள் மற்றும் மார்க்க அறிஞர்களான ஆலிம்கள் பங்கேற்கும் சிறப்பு இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி, 17.08.2012 வெள்ளிக்கிழமையன்று (நேற்று) மாலை 05.30 மணியளவில், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் தலைவர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை தலைமையிலும், பெரிய - சிறிய குத்பா பள்ளிகளின் தலைவர் ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் காதிர், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி நிர்வாகி ஹாஜி வி.எஸ்.எஸ்.முஹ்யித்தீன் தம்பி, காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவன தலைவர் ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் துவக்கமாக, கத்முல் குர்ஆன் ஓதப்பட்டு - நகரின் அனைத்து பள்ளிவாசல்களிலும் முத்தவல்லிகளாகவும், நிர்வாகிகளாகவும் வாழ்ந்து மறைந்த முன்னோர் பெயரில் ஈஸால் தவாப் செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியை, சிறிய குத்பா பள்ளியின் இமாம் மவ்லவீ என்.எம்.ஓ.முஹம்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ வழிநடத்தினார். ஹாங்காங் கஸ்வா அமைப்பின் செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் எம்.என்.முஹ்யித்தீன் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
பின்னர் நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்வில், அனைவருக்கும் பேரீத்தம்பழம், நோன்புக் கஞ்சி, வடை வகைகள், குளிர்பானம், பனிக்கூழ் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் பரிமாறப்பட்டது.
நிகழ்வுகளனைத்திலும், காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஹாஃபிழ்கள் - ஆலிம்கள் உட்பட சுமார் 150 பேர் பங்கேற்றனர்.
தகவல்:
S.A.இப்றாஹீம் மக்கீ
படம்:
நேஷனல் H.M.முஹம்மத் அப்துல் காதிர் |