2012-13 ஆம் ஆண்டில் பரிசோதனை முறையில் சில நகராட்சிகளில் குழல் விளக்குகளுக்குப் பதிலாக எல்இடி போன்ற ஆற்றல் மிக்க மின் விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
நகர்ப்புறத்தில் வாழும் மக்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதும், உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதும் இன்றியமையாததாக இருக்கும் சூழ்நிலையில், பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப அதிகரித்து வரும் எரிசக்தி மற்றும் பராமரிப்புக்கான செலவுகளை எதிர்கொள்வதில் நகராட்சிகள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றன என்பதால் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் நகராட்சிகளின் எரிசக்தி மற்றும் பராமரிப்பு செலவினை குறைக்கும் வகையில், திறன் குறைந்த குழல் விளக்குகளுக்குப்
பதிலாக திறன் மிகுந்த எல்இடி/ சூரிய சக்தி மின்விளக்குகள் பயன்படுத்துதல்; தெரு விளக்குகள் ஒளிர்வதில் ஒளியின் அளவை மட்டுப்படுத்தும் முறையினை பின்பற்றி, மின் நுகர்வினை குறைப்பது; தெரு விளக்குகளை பயன்படுத்துவதில் மேம்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு முறையினை பயன்படுத்தி, திறமையான பராமரிப்பு மேற்கொள்ளுதல்; ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்கள். இம்முறைகளை கடைப்பிடிப்பதால் ஏற்படும் பயன்களை குறிப்பிட்ட கால முறையில் மூன்றாம் நபர்/முகமை மூலம் அளவிடுதல் மற்றும் ஆய்வு செய்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள்.
இதன்படி 2012-13 ஆம் ஆண்டில் பரிசோதனை முறையில் 9 மாநகராட்சிகள்; திருப்பூர் மற்றும் தஞ்சாவூர் மண்டலங்களிலுள்ள 35 நகராட்சிகள்
மற்றும் 101 பேரூராட்சிகளில் தற்போது பயன்பாட்டிலுள்ள குழல் விளக்குகளுக்குப் பதிலாக எல்இடி போன்ற ஆற்றல் மிக்க மின் விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்கும் வகையில், நகராட்சி நிர்வாக ஆணையரகத்திற்காக, நகராட்சி நிர்வாக ஆணையரக தலைமைப் பொறியாளர் அவர்கள் தலைமையில் 9 நபர் கொண்ட தொழில் நுட்பக் குழுவும், நகராட்சி நிர்வாக ஆணையர் தலைமையில் 7 நபர் கொண்ட உயர்மட்ட அதிகாரக்
குழுவும், பேரூராட்சிகளைப் பொறுத்தவரையில் பேருராட்சி இயக்குநர் அலுவலகத்தில் உள்ள நிர்வாகப் பொறியாளர் தலைமையில் 9 நபர் கொண்ட தொழில் நுட்பக் குழுவும், பேரூராட்சிகள் இயக்குநர் தலைமையில் 6 நபர் கொண்ட உயர்மட்ட அதிகாரக் குழுவும் அமைக்கப்படும். இதற்காக பொது ஏல ஆவணம் அறிமுகப்படுத்தியும், பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் இதனை நடைமுறைப்படுத்தவும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர்
செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
பொதுமக்கள் நலன் கருதியும், அலுவலர்கள் பணியாற்றுவதற்கு நல்ல ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கும் வண்ணமும், அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய அலுவலகங்கள் அமைய வேண்டியது மிகவும் அவசியம் என்பதை கருத்தில் கொண்டு, போதிய இடவசதி மற்றும் அடிப்படை வசதியின்றி இயங்கி வரும் மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களுக்கு புதிய அலுவலகங்கள் கட்ட மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். ஜ்ஞஹழுநு னூ இதன் அடிப்படையில், சேலம் மாநகராட்சி மற்றும் ஓசூர், மறைமலைநகர், கொடைக்கானல், சங்கரன்கோவில், திருச்செங்கோடு, ராணிப்பேட்டை, தேனி-அல்லிநகரம், தர்மபுரி, துறையூர் மற்றும் பரமக்குடி ஆகிய 10 நகராட்சிகளுக்கு 37 கோடி ரூபாய் செலவில் புதிய அலுவலகக் கட்டடங்கள் கட்ட அரசு மானியமாக 26 கோடி ரூபாயினை
வழங்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
நகராட்சித் துறையில் அரசு எடுக்கும் இந்த முடிவுகளினால் நகராட்சிகளின் பணிகள் மேன்மை அடையும்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத் துறை,
சென்னை-9. |