இவ்வாண்டு இந்திய ஹஜ் குழு மூலம் - சுமார் 1,25,000 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர். அவர்களுக்கான ஏற்பாடுகளை - ஜித்தாவில்
உள்ள இந்திய தூதரகம் - இந்திய ஹஜ் குழு உட்பட சவுதியில் உள்ள பல அமைப்புகளுடன் இணைந்து செய்து வருகிறது. இவ்வாண்டு பயணம்
மேற்கொள்ள உள்ள யாத்திரிகர்களுக்கு காத்திருக்கும் வசதிகள் என்னென்ன? ஒரு பார்வை:
தங்கும் இடம்
இவ்வாண்டு மக்காவில் யாத்திரிகர்கள் தங்குவதற்கு இரு வகையான பிரிவுகள் மட்டும் உருவாக்கப்பட்டுள்ளது. அவை - பச்சை நிற வசதி
(ஹரத்திலிருந்து 1500 மீட்டர் வரை) மற்றும் அசீசிய பகுதி (மக்கத்தல் வங்கி மற்றும் பின் ஹுமைத்). பச்சை நிற வசதியில் 60,000 பேர் தங்கும்
இடமும், அசீசியா பகுதியில் 65,000 பேர் தங்கும் இடமும் வாடகைக்கு எடுக்கபட்டுள்ள்ளது.
சமீப வரலாற்றில் முதல் முறையாக - யாத்திரிகர்கள் தங்குவதற்கான அனைத்து இடங்களும் ஹஜ் காலம் துவங்குவதற்கு முன்னரே, முடிவு
செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ள கட்டிடங்களில் உள்ள வசதிகளை மேம்படுத்த கூடுதல் கால அவகாசம்
கிடைத்துள்ளது. சென்ற ஆண்டை கணக்கில் எடுக்கும்போது வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ள கட்டிடங்களின் எண்ணிக்கை குறைந்தும்,
அதே நேரத்தில் - கட்டிடங்களில் அளவு உயர்ந்தும் உள்ளது.
ஒரே நிறுவனத்தின் மூலம் அவசிய பொருட்கள் விநியோகம்
யாத்திரிகர்களுக்கு தேவையான சில அவசிய பொருட்களை அந்தந்த கட்டிட உரிமையாளரே வழங்கி வந்தார். இவ்வாண்டு முதல் - அனைத்து
யாத்திரிகர்களுக்கும், சீரான முறையில், ஒரே தரமான பொருட்களை ஒரே நிறுவனம் மூலம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி கீழ்க்காணும் பொருட்கள் யாத்திரிகர்களுக்கு வழங்கப்படும்:
<> இரண்டு புதிய - 100 சதவீதம் பஞ்சினால் ஆன - படுக்கை விரிப்பு
<> இரண்டு புதிய தலையணை உறை
<> இரண்டு வாளி (12 யாத்திரிகர்களுக்கு)
<> இரண்டு குவளை (12 யாத்திரிகர்களுக்கு)
<> ஓர் அறைக்கு ஒரு விளக்குமாறு/ஒரு சுத்தம் செய்யும் துடைப்பம்
<> ஒரு கழிவறைக்கு 5 லிட்டர் பினாயில்
<> ஒரு காற்றினிமைத் திவலை (Air Freshener)
காஸ் சிலிண்டர் கிளை அலுவலகம் மூலம் நிரப்பப்படும்
இவ்வாண்டு காஸ் சிலிண்டர் நிரப்புதல் கிளை அலுவலங்கள் மூலம் செய்யப்படும். அதற்கான கட்டணத்தையும் கிளை அலுவலகமே செலுத்தும்.
சுத்தம் செய்ய நிறுவனம் ஏற்பாடு
கடந்த ஆண்டை போல் கட்டிடங்களை சுத்தம் செய்ய / குளிர்பெட்டி, லிப்ட் போன்றவற்றை பராமரிக்க தனியார் நிறுவனங்களுக்கு பொறுப்பு
வழங்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் ஹஜ் காலத்தில் கண்டிப்பாக குறைந்தது ஒரு முறையாவது கட்டிடங்களை முழுவதுமாக சுத்தம் செய்யும்.
தேவைப்படும் காலகட்டத்தில் - குடிநீர் வழங்கும் பணியையும் அவர்கள் மேற்கொள்வார்கள்.
பயணியர்களுக்கு இந்தியாவிலேயே சவுதி SIM கார்டு வழங்கப்படும்
இந்திய ஹஜ் யாத்திரை வரலாற்றிலேயே முதல் முறையாக - பயணியர்களுக்கு இந்தியாவிலேயே சவுதி நாட்டு SIM கார்டு (Saudi Telecom
Company) வழங்கப்படும். ஐந்து சவுதி ரியால் மதிப்பில் உள்ள இந்த SIM கார்டு மூலம், பாக்கி இல்லாவிட்டாலும், அழைப்பு பெறும் வசதி இருக்கும்.
அந்த SIM கார்டில் பயணியருக்கு அவசியமான அனைத்து தொலைப்பேசி எண்களும் முற்கூட்டியே - பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும்.
இந்தியாவில் இருந்து புறப்படுவதற்கு முன்னர் இந்த SIM கார்டு யாத்திரிகர்கள் அனைவருக்கும் வழங்கப்படும் என்பதால் - யாத்திரிகர்களின்
உறவினர்கள், எளிதாக தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும். மேலும் யாத்திரிகர்களின் தொலைப்பேசி எண்கள் - ஜித்தாஹ் தூதரக
இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்படும்.
கூடுதல் 30 படுக்கைகள் வசதி கொண்ட மருத்துவமனை
மக்காவில் வழக்கம் போல் ஏற்பாடு செய்யப்படும் 50 படுக்கைகள் வசதிகொண்ட மருத்துவமனைக்கு கூடுதலாக, 70 ஆயிரம் இந்திய யாத்திரிகர்கள் தங்கும் அசீசயா பகுதியிலும், கூடுதலாக 30 படுக்கைகள் வசதி கொண்ட மருத்துவமனை இயக்கப்படும்.
மசேர் பகுதிக்கு ரயில் வசதி
மினா - அரபாத் - முஜ்தலிபா மார்க்கத்தில் சிரமமின்றி இந்திய யாத்திரிகர்கள் பிரயாணம் செய்ய - சவுதி அரசாங்கத்தின் பல துறைகளில் - ரயில் வசதியினை பயன்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு இவ்வசதி - இந்திய யாத்திரிகர்களுக்கு வழங்கப்பட - வாய்ப்புள்ளது.
நகரில் இருந்துக்கொண்டே பயண ஆயத்தம் (check in)
கடந்த ஆண்டினை போல் இவ்வாண்டும்- யாத்திரிகர்கள் நகரில் இருந்துக்கொண்டே தங்கள் உடமைகளை - Check In செய்ய ஏற்பாடு செய்யப்படும். இதன் மூலம் - கட்டிடத்தில் இருந்தே, யாத்திரிகர்கள் உடமைகள் விமான நிலையத்திற்கு எடுத்து செல்லப்படும்.
ஜம் ஜம் தண்ணீர்
10 லிட்டர் கேன்கள் மூலம் - யாத்திரிகர்களுக்கு ஜம் ஜம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பயணியர் இறங்கும் நகரிலேயே இந்த கேன்கள் வழங்கப்படும்.
அதாஹி
கடந்த காலங்களில் - குர்பானி மேற்கொள்ளும் யாத்திரிகர்கள் - சிலரால் ஏமாற்றப்பட்டுள்ளனர். ஆகவே சவுதி அரசின் அதாஹி திட்டத்தினை பயன்படுத்த - யாத்திரிகர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தினை - சவுதி அரசாங்க அனுமதியுடன், ISLAMIC DEVELOPMENT BANK (IDB) நடத்துகிறது. தாங்கள் குர்பான் கொடுக்க விரும்பும் பிராணிகளுக்கான கூப்பனை - யாத்திரிகர்கள் வாங்கலாம். மேலதிக விபரம் - http://www.adahi.org/adahisite/default.aspx - என்ற இணையதளத்தில் உள்ளது.
Vishwa Yatra Foreign Travel Card (VYFTC) கார்ட்
கடந்த ஆண்டு - State Bank of India - யாத்திரிகர்களுக்கு வசதியாக - Vishwa Yatra Foreign Travel Card (VYFTC) கார்ட் வழங்கியது. இந்த கார்டினை - சவுதி ரியால் கணக்கில் - நாம் விரும்பும் தொகைக்கு வாங்கலாம். ATM கார்டு போல் இந்த கார்டினை பயன்படுத்தலாம். இந்தியாவில் இருந்து புறப்படுவதற்கு முன்பே இந்த கார்டினை வாங்கிக்கொள்ளலாம்.
மினாவில் உணவு
முவல்லிம்கள் மூலமே - மினாவில் தங்கியிருக்கும் ஹஜ் யாத்திரிகர்களுக்கு உணவு வழங்க முயற்சி செய்யப்பட்டு வருகிறது.
தகவல்:
ஜித்தாஹ் இந்திய தூதரகம் |