சவுதி அரேபியா ஜித்தா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 28 வது பொதுக்குழு கூட்டம் சென்ற செப்டம்பர் 14 வெள்ளி மாலை மக்ரிப் தொழுகைக்குப்பின் ஜித்தா ஷரஃபியாவிலுள்ள இம்பாலா உணவக கூட்டரங்கத்தில் நோன்புப்பெருநாள் சந்திப்பாக சிறப்பாக நடந்தேறியது. மன்றத்துணைத்தலைவர் மருத்துவர் எம்.எ.முஹம்மது ஜியாது மற்றும் மன்ற ஆலோசகர் பொறியாளர் எஸ்.பஷீர் அஹ்மது முன்னிலை வகித்த அக்கூட்டத்திற்கு மன்றத்தலைவர் குளம் அஹ்மது முஹ்யித்தீன் தலைமை தாங்கினார். சகோ.எம்.என்.எல்.முஹம்மது ரஃபீக் நிகழ்ச்சிகளை நெறிபடுத்த, சகோ.அல்ஹாஃபிழ் எஸ்.எம்.ஷெய்கு ஆலம் இறைமறை ஓதி கூட்டத்தை ஆரம்பிக்க சகோ.அரபி எம்.அய்.முஹம்மது ஷுஅய்ப் அனைவரையும் வரவேற்றார்.
தொடர் நன்மைகள்:
ஆரம்பமாக; தமிழிலும் ஆங்கிலத்திலும் அழகியதொரு முன்னுரையை தந்த மருத்துவர் முஹம்மது ஜியாத்; 'நம்மிடமிருந்து விடைபெற்ற ரமலானில் நோன்பிருந்து, நற்கிரியைகள் பல புரிந்து அல்லாஹ்வின் அளப்பெரும் அருளை பெற்ற நாம், சிறப்பாக பெருநாளும் கொண்டாடி மகிழ்ந்து, இன்று நமது பொதுக்குழு "ஈத் மிலன்" சந்திப்பாக நடைபெறுவது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது' என்றார். மேலும், நாம் பெற்ற நன்மைகள் ரமலானோடு நின்று விடாமல், நமது இந்த பாரிய சேவைகள் மூலம் அந்த நன்மைகளை நாம் மென்மேலும் தொடர்ந்து பெற்றிட நாம் அதிகம் உழைத்திட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
நோயில்லா காயல்:
தலைமையுரையாற்றிய மன்றத்தலைவர் குளம் அஹ்மது முஹ்யித்தீன்; ‘விடுமுறையில் தாயகத்தில் இருந்த சமயம் பல மஷூராக்களில் கலந்துகொள்ள வாய்ப்பு கிட்டியதென்றும், 2010 டிசம்பர் 24 அன்று நடைபெற்ற நமது 57 வது செயற்குழுவில் நாம் ஏற்கனவே தீர்மானமாக ஏற்றி அறிவித்த கல்விக்கென்று 'இக்ரஃ' இருப்பது போல், "மருத்துவத்திற்கென்று ஒரு தனி அமைப்பு தேவை" என்ற செய்தியும் ஒரு மஷூராவில் விவாதிக்கப்பட்டதாக கூறினார்.
மருத்துவத்திற்கென்று தனி கட்டமைப்பு அவசியத் தேவையென்றும், அதன் மூலம் மருத்துவ சேவைகளை விரைவாக நாம் முன்னெடுக்கலாமென்று பல சகோதரர்கள் கருத்து தெரிவித்ததாகவும் கூறிய அவர், அம்மருத்துவ அமைப்பிற்காக பல பெயர்கள் அலசப்பட்டு நாம் சொன்ன "ஷிஃபா" என்ற பெயர் அனைவராலும் ஏகோபித்து ஏற்றுக்கொள்ளப்பட்டு அவ்வாறே அவ்வமைப்பை அழைக்கலாமென்று கூறப்பட்டதாகவும், அதற்காக அனைவருக்கும் நம் மன்றம் சார்பாக நன்றி தெரிவித்ததாகவும் கூறினார்.
அதன் பணிகளுக்கு செயலாக்கம் கொடுப்பதன் ஆரம்ப முயற்சியாக ஒரு அட்ஹாக்குழு நியமிக்க பட்டிருப்பதாகவும் கூறிய அவர், அந்த 'ஷிபா' என்ற மருத்துவ அமைப்பு விரைவில் இயங்கி பணிகளில் முழுமூச்சுடன் செயல்பட்டு நோயில்லா காயலை உருவாக்க ஆயத்தமாக வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும்; நம் நகரின் தேவைகள் அதிகமென்றும், அதற்காக நாம் மிகுந்த சிரமமெடுத்து உழைக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்ட அவர், நிர்வாகத்தில் உள்ள குறை நிறைகளை அறியத்தாருங்கள், தவறு நடப்பின் தாட்சண்யமின்றி சுட்டுங்கள், திருத்த விழையுங்கள், நம் நகர் மக்களுக்காக நம்மால் நடாத்தப்படும் மன்றம் இது, இம்மன்றம் செய்யும் ஒவ்வொரு பணியிலும் உங்களின் பங்களிப்பு உள்ளது. ஆகவே நாம் ஒன்றிணைந்து செயல்பட்டு நம் நகர் மக்களுக்காக நற்பணிகள் பல ஆற்றுவோம் என்றார்.
மன்ற செயல்பாடுகள்:
இதற்கு முன் மக்கா மற்றும் ஜித்தாவில் நடந்த செயற்குழு கூட்டவிபரங்கள், அதன் தொடராக மன்றம் ஏற்றுக்கொண்டு செயல்படுத்திய பணி விபரங்கள் மற்றும் மன்றத்தின் ஏனைய செயல்பாடுகளின் நிலைகளை புள்ளி விபரத்தோடு அறியத்தந்தார் மன்றச்செயலர் சட்னி எஸ்.எ.கே.செய்யிது மீரான். மேலும், நகரில் மருத்துவத்திற்கென்று தனி அமைப்பு உருவாக்கம் மற்றும் இக்ரஃவின் நடப்புப்பனிகள் பற்றிய செய்திகள் குறித்தும் இக்ரஃ நிர்வாகி
சகோ.எஸ்.தர்வேஷ் அவர்களிடம் பகிர்ந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.
வலுவான சந்தாக்கள்:
மருத்துவர் முஹம்மது ஜியாதின் அழகிய உரையை மேற்கோள்காட்டி பேசிய மன்றச்செயலர் சகோ.எம்.எ.செய்யிது இப்ராஹீம்; நாம் செய்யும் ஒவ்வொரு நற்செயலுக்கும் அல்லாஹ் நன்மையை எழுதாமல் இல்லை, ஒன்று முதல் எழுநூறு... ஏன்... அவன் நாடினால் நாம் செய்யும் இந்த நல்லறங்களுக்கு அதை விட பன்மடங்கு நன்மைகளைத் தருவான் என்றும், இது போன்ற பொற்பணிகளில் நம்மை அர்ப்பணிக்க முற்படவேண்டுமென்றும், நம்மின் பயனாளிகள் நமக்காக கேட்கும் பிரார்த்தனைகள் மூலம் நம் மன்றப்பணிகள் மேலும் வீரியமடைய வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். இப்பொதுக்குழுவில் அதிக புதுமுகங்களை காண்கிறேன் என்றும், அவர்களும் நம்மோடு தோள் நின்று அறப்பணிகளாற்ற முழுமையாக உழைப்பளிக்க வேண்டுமென்றும் கூட்டத்திற்கு வந்திருந்த புதிய உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார்.
மேலும்; மன்றம் கடந்து வந்த பாதை மற்றும் மன்றத்தின் ஆரம்ப வரலாறுகளை புதிய சகோதரர்களுக்கு நினைவூட்டிய அவர், மன்றம் ஏற்றுக்கொண்டு நிறைவேற்றிய காரியங்கள், அதன் செயல் திட்டங்கள் எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றன, அதற்கு உறுப்பினர்களாகிய உங்களின் ஆலோசனைகள் மற்றும் உங்களின் சந்தாக்கள் எவ்வாறு வலு சேர்க்கின்றன, அந்த வலு மூலம் நம் மன்றம் சாதித்துள்ள சாதனைகள் போன்ற மன்றத்தின் சீரிய செயல்பாடுகளை செவ்வனே எடுத்துச்சொன்னார்.
மேலும்; ஹஜ் கிரியைகளை நிறைவேற்ற வரும் ஹாஜிகளுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய ஏதுவாக நமது மன்ற உறுப்பினர்களைக்கொண்டு ஒரு குழு அமைக்கப்பட்டு அது தனது சேவைகளை யாத்திரீகளுக்கு இன்ஷாஅல்லாஹ் செய்யும் என்றும், அது குறித்த மேலதிக செய்திகள் மற்றும் விபரங்கள் அடங்கிய விளக்க கையேடு யாத்திரீகளுக்கு வழங்கவும் ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் கூறினார்.
நிதி நிலை:
அல்லாஹ்வின் பெருங்கிருபையால் நம் மன்றம் இதுவரை அளித்த உதவிகள், ஆற்றிய சேவைகள், அன்றைய சந்தாக்களின் வரவு, மொத்த நிதியின் இருப்பு மற்றும் விடுப்பு போன்ற நிதி நிலையின் அனைத்து விபரங்களையும் ஒரு பட்டியலாக சமர்பித்தார் மன்றப் பொருளாளர் சகோ.எம்.எஸ்.எல். முஹம்மது ஆதம்.
கண்ணீர் துடைப்போம்:
‘நம் நல மன்றம் நல்ல பல பணிகளை நம் நகர் மக்களுக்கு நலமே செய்து வருகிறதென்றும், நம் மன்ற உறுப்பினர்களின் ஆக்கத்தினாலும், ஊக்கத்தினாலும் உத்வேகத்துடன் களப்பணிகளாற்றி வருகிறதென்றும், நம் மன்றம் இத்தனை காலம் உங்களிடமிருந்து சிறுக சிறுக சேகரித்து மிகப்பெரும் உதவிகளை ஏறத்தாள அரை கோடிஅளவில் நம் நகர் பயனாளிகளுக்கு வழங்கியுள்ளது என்றும், நம் மன்றம் இதுவரை சாதித்ததைப்பற்றி கொஞ்சம் பேசினாலும், இன்னும் எவ்வழிகளில் மக்களுக்கு பணிகளாற்றி சாதிக்கலாம் என்று அதிகம் யோசிக்கிறதென்றும் தனது கருத்துரையில் கூறினார் சகோ.எஸ்.ஹெச்.ஹுமாயூன் கபீர்.
மேலும்; நாம் ஆற்றும் அனைத்து நற்பணிகளுக்கும் அவன் கூலி வழங்குகிறான் என்றும், நாம் நல்லது செய்ய நாடினாலே அவன் நமக்கு நன்மையை அளித்துவிடுகிறான் என்றும், நம் மன்றம் பல நல்ல காரியங்களில் ஈடுபடுவதின் நிமித்தம் பலரது பாராட்டைப்பெற்றாலும், நமது முழுமையான நோக்கமெல்லாம் அந்த வல்ல அல்லாஹ்வின் அன்பையும், அருளையும் பெறவே இந்த நற்காரியங்களை செய்கிறோம் என்பதை மனதிலிருத்தி இன்னும் அதிகமதிகம் பொதுப்பணிகளில் ஈடுபட்டு நம் நகர் தேவையுள்ளோரின் கண்ணீர் துடைக்க அனைவரும் முன்வந்து காரியமாற்ற வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
பணியே பிரதானம்:
சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி தனது கருத்துரையை ஆரம்பித்த சகோ.எம்.எம்.மூஸா சாஹிப்; பொது நலப்பணிகளில் ஈடுபடும் நம் மன்ற உறுப்பினர்கள் அப்பணிகள் மூலம் ஏற்படும் சிரமங்களை பொறுத்தக்கொள்ள வேண்டுமென்றும், அப்பணியையே பிரதான குறிக்கோளாக்கி முன்னெடுத்து செயலாற்றவேண்டுமென்றும், பொதுநலப்பணிக்கு அப்பாற்பட்டவைகளை விட்டும் நாம் விலகிக்கொள்ளவேண்டுமென்றும் உறுப்பினர்களை வேண்டிக்கொண்டார்.
உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென்ற அவர், ஜித்தா மற்றும் மக்காவில் புதிய உறுப்பினர்கள் பலர் தம்மை இந்நலமன்றத்தில் ஐக்கியப்படுத்தியதுபோல், மதீனா, யான்பு நகர காயல் அன்பர்களை தொடர்புகொண்டோ அல்லது நேரில் சென்றோ அங்குள்ள புதிய உறுப்பினர்களை மன்றத்தில் இணைத்து சந்தாக்கள் பெறவேண்டுமென்றும், சந்தாக்கள் பெருகுவதன் மூலம் நம் மன்றம் மேலும் பல பணிகளை முழுவீச்சுடன் உத்வேகத்துடன் செய்யுமென்றும், இது விஷயத்தில் நாம் உரிய கவணமெடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
நேர்த்தியான நலப்பணிகள்:
'இந்த நற்பணி மன்றத்தின் மிகப்பெரும் பொது நல சேவை கண்டு வியக்கிறேன்' என தனது சிறப்புரையை ஆரம்பித்த இப்பொதுக்குழுவின் சிறப்பு விருந்தினர் நெல்லை ரவணசமுத்திரத்தைச் சார்ந்த சகோதரர் பொறியாளர் எம்.ஜலாலுத்தீன்; 'ஒரு மாபெரும் அறப்பணியை கையிலெடுத்து முறையாக செய்து வருகிறீர்கள் என்றும், இம்மன்றத்தின் இந்த முறையான நேர்த்தியான நலப்பணிகள் கண்டு மெய்சிலிர்க்கிறேன் என்றும், நானும் பொது நலப்பணிகளில் என்னை இணைத்துக்கொண்டவதான் என்றாலும் இதுபோன்று திட்டமிட்ட செயல்பாடுகளை கொண்ட ஒரு மெகா மன்றப்பணிகளை காணும்போது உண்மையிலேயே அல்லாஹ்வை புகழ்ந்தவனாக உங்களை பாராட்டுகிறேன்' என்றார்.
மேலும்; 'உங்கள் நகர் மக்களின் தேவை அறிந்து அவர்கள் மீது கருணை காட்டும் நீங்கள், நிச்சயம் அல்லாஹ்வின் கருணையை பெறுவீர்கள் என்று கூறிய அவர், 'மக்களிடம் கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ்வும் கருணை காட்ட மாட்டான்' என்ற நபி போதனையை நினைவு படுத்தினார். 'நாம் மனிதர்களுக்கு செய்யும் இது போன்ற சேவைகளும் இறைவழிபாடுதான் என்ற அவர், இது போன்ற பொதுநல சேவைகள் மூலம் உங்கள் நேரத்தை இறை வழிபாட்டிலேயே கழிக்கிறீர்கள் என்பதை நினைக்கும் போது மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்றார். ஒவ்வொருவரும் ஒரு நிலையிலிருந்து மறு நிலைக்கு உயர வேண்டும் என்ற அவர், இந்த நல மன்றமும் இப்போதுள்ள நிலையிலிருந்து இன்னும் பல பணிகளை சிறப்பாக செய்து மேல்நிலைக்கு வர வேண்டுமெண்டு கேட்டுக்கொண்டார்.
மேலும்; 'கல்விக்கென்று ஒரு இக்ரஃ, அது போன்று மருத்துவத்திற்கென்று ஒரு ஷிஃபா' என்ற இந்த அருமையான கூட்டமைப்பின் மூலம் உங்கள் உலக காயல் நல மன்றகளின் பங்களிப்புக்கள் ஒரு சேர குவிந்து நகர் மக்களின் தேவை பூர்த்தியாக சிறந்த வாய்ப்பு என்றும், இது போன்ற சமூகப்பணிகள் செய்யும் போது பொறுமை அவசியம் பேணப்படவேண்டும் என்றும், மன்றம் எடுத்துக்கொண்ட பணிகளை பளு பார்க்காமல் இறுதி வரை பூர்த்தியாக்கிய பிறகே அமரவேண்டுமென்றும், இம்மன்றத்தின் உயரிய பணிகள் மேலும் சிறக்க வாழ்த்தி, அப்பணிகளில் இறைவனின் அருளும் கிடைத்திட பிரார்த்தித்தவனாக விடைபெறுகிறேன்' என்று கூறி அமர்ந்தார்.
பல்சுவை நிகழ்ச்சி:
நோன்புப்பெருநாள் சந்திப்பு நிகழ்வை / ஈத் மிலனை அலங்கரிக்கும் முகமாக நமது குழந்தைச் செல்வங்களின் பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது. இறைமறை ஓதல், அரபிப்பாடல், மழலை கொஞ்சல் போன்ற பிஞ்சுகளின் கண்குளிர்ச்சியான நிகழ்ச்சிகள் மூலம் பொதுக்குழு கலகலப்பானது. தம்மிடமுள்ள திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்திய குழந்தைகள் அசத்திவிட்டு அகன்றனர். பிறகு, நம் காயல் கவிஞர் மற்றும் பாடகர் சகோ.எ.ஆர்.ஜாகிர் ஹுசைன் தனது இனிய குரலில் அருமையான பாடலைத் தந்து அனைவரையும் ஆனந்தத்தில் ஆழ்த்தினார்.
செய்தித்துளிகள்:
@ நமது மன்றத்தின் நலப்பணிகள் குறித்து பாராட்டிப் பேசிய மன்ற உறுப்பினர் சகோ.ஷெய்க் அப்துல்லாஹ்; 'நாம் இன்னும் என்ன பணிகளை செய்யலாம்? மேலும் என்னென்ன விழிப்புணர்வுகளை மக்களுக்கு தெரியப்படுத்தலாம்? போன்ற சேவைகளின் பக்கமே நமது கவனம் செலுத்தபடவேண்டுமே அல்லாது, தேவையற்ற வலைதளப்பதிவுகளில் தம்மை ஈடுபடுத்துவதை விட்டும் நாம் தவிர்ந்து கொள்ள வேண்டுமென்று உறுப்பினர்களை கேட்டுகொண்டார்.
@ புனித ஹஜ் பயணத்தை மேற்கொள்ள வரும் ஹாஜிகளுக்கு வழிகாட்டும் குழு பற்றி செய்திகளை பகிர்ந்த சகோ.சீனா எஸ்.ஹெச்.மொகுதூம் முஹம்மது, எந்த உதவிகள் எங்கு கிடைக்கும்? அங்கு அணுகுவது எப்படி? அதை பெறுவது எப்படி? என்று ஹாஜிகளுக்கும், அவர்களை பார்க்க வருபவர்களுக்கும் சில அறிவுரைகள் சொன்ன அவர், மேலும்; ஹாஜிகளுக்கு வழங்கவிருக்கும் சிறு கையேடு குறித்த விளக்கங்கள், சஊதி அரசு மற்றும் இந்திய அரசு ஹாஜிகளுக்கு விதித்துள்ள வரம்புகள் மற்றும் அளித்துள்ள சலுகைகள் போன்ற விபரங்கள் அனைத்தையும் தெளிவாக தந்தார்.
@ சொந்த அலுவல் நிமித்தம் தாயகம் சென்று விட்ட இரு செயற்குழு உறுப்பினர்களின் வெற்றிடத்தை பூர்த்தி செய்ய ஜனநாய முறைப்படி உறுப்பினர்களிடம் கேட்டறியப்பட்டு, நஹ்வி எ.எம்.ஈசா ஜகரிய்யா மற்றும் சட்னி எஸ்.எம.முஹம்மது லெப்பை ஆகிய இருவரும் புதிய செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்க பட்டனர்.
தீர்மானங்கள்:
• புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற வரும் ஹாஜிகளுக்கு 'தன்னார்வ வழிகாட்டி' என்ற ஒரு சிறு கையேடு நம் மன்றத்தின் மூலம் வழங்க ஏற்பாடு செய்தல்.
• நம் நகரில் மருத்துவ ஒருங்கிணைப்புக்கென்று தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ள 'ஷிஃபா' என்ற அமைப்புக்கு நம் மன்றம் முழு ஒத்துழைப்பு வழங்குதல்.
• அடுத்த செயற்குழு வரும் அக்டோபர் திங்கள் 05 ஆம் நாள் வெள்ளி அன்று பலதில் உள்ள அல் கய்யாம் ஹோட்டலில் நடைபெறுமென்று அறிவிப்பு செய்தல்.
நன்றியுரை:
சொளுக்கு எஸ்.எம்.அய்.செய்யிது முஹம்மது சாஹிப் நன்றி கூற, கத்தீபு எம்.என்.உமர் அப்துல் காதிர் பிரார்த்திக்க, துஆ கஃப்பாரவுடன் பொதுக்குழு இனிதே சிறப்பாக நிறைவு பெற்றது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை சகோதரர்கள் எஸ்.எ.கே.உமர் ஒலி, ஞானி எம்.எம்.முஹம்மது அபூபக்கர்,எம்.என்.முஹம்மது ஷமீம் மற்றும் கே.எ.முஹம்மது நூஹு ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
சகோதரர்கள் என்.எம்.அப்துல் மஜீத், கே.வி.ஷெய்க் இஜ்ஜத் அலீ மற்றும் மக்காவைச்சார்ந்த மன்ற உறுப்பினர் ஒருவருமாக இணைந்து கூட்டம் மற்றும் இரவு உணவு அனுசரணையினை மிகச்சிறப்பாக செய்திருந்தனர் அல்ஹம்துலில்லாஹ்!
தகவல்:
அரபி முஹம்மது ஷுஅய்ப்
இணைச்செயலர்,
காயல் நல மன்றம், ஜித்தா
நிழற்படங்கள்:
எம்.என்.எல்.முஹம்மது ரஃபீக் மற்றும்
சீனா எஸ்.ஹெச்.மொகுதூம் முஹம்மது,
மக்கா.
|