இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களைக் கேலி செய்து படமெடுத்து, இணையதளத்திலும் வெளியிட்ட அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவரைக் கண்டிக்காத அந்நாட்டு அரசைக் கண்டித்து, காயல்பட்டினம் நகர பொதுமக்கள் சார்பில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் இன்று மதியம் 01.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை நிறைவுற்ற பின்னர், காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளி, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித், மகுதூம் ஜும்ஆ பள்ளி, மஸ்ஜிதுத் தவ்ஹீத் ஆகிய பள்ளிவாசல்களிலிருந்து, தொழுகையில் பங்கேற்ற அனைவரும், ஆர்ப்பாட்ட நிகழ்விடத்திற்கு அணியணியாகச் சென்றனர்.
இறைத்தூதர் நபிகள் நாயகத்தைக் கேலி செய்து திரைப்படம் எடுத்தவர், அதற்கு ஒத்துழைத்தவர்கள், அவர்களைக் கண்டிக்காத அமெரிக்க அரசு - ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றைக் கண்டித்து, எம்.ஏ.கே.ஜைனுல் ஆப்தீன், ஹாஜி எம்.எம்.ஷாஹுல் ஹமீத், எம்.ஏ.புகாரீ, பாலப்பா முஹம்மத் அப்துல் காதிர், எம்.எஸ்.ஸதக்கத்துல்லாஹ், எம்.ஏ.இப்றாஹீம் (48), எஸ்.ஷம்சுத்தீன், ஹாஜி எஸ்.எம்.எச்.முஹம்மத் முஹ்யித்தீன் ஆகியோர் கண்டன வாசகங்களை முன்மொழிய, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் உரத்த குரலில் அதனை வழிமொழிந்தனர்.
மதியம் 02.15 மணியளவில் ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது. பின்னர் அனைவரும் அமைதியாக நிகழ்விடத்தை விட்டும் கலைந்து சென்றனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது விரும்பத்தகாத நிகழ்வுகள் எதுவும் நடைபெற்று விடாதிருக்கும் பொருட்டு, இன்று காலையிலிருந்தே காயல்பட்டினம் பிரதான வீதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது, பிரதான வீதி வழியான பேருந்து போக்குவரத்தும் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டது. |