ஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீ காயல் நல மன்றத்தின் 07ஆவது செயற்குழுக் கூட்டத்தில் அம்மன்றத்திற்கான சட்ட திட்டங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அமீரக தலைநகர் அபூதபீயில் காயல் நல மன்றத்தின் ஏழாவது செயற்குழுக் கூட்டம் 14.09.2012 அன்று மாலையில், மன்றத்தின் துணைத் தலைவர் மக்பூல் அஹ்மத் இல்லத்தில், செயற்குழு உறுப்பினர் கே.வி.எஸ்.ஏ.ஹபீப் முஹம்மத் தலைமையில் கூடியது. செயற்குழு உறுப்பினர் பி.எம்.ஹுசைன் நூருத்தீன் கிராஅத் ஓதி நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார்.
மருத்துவக் கையேடு:
அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் அனைத்து வேலைகளும் முடிந்து இறுதி செய்யப்பட்டுள்ள இந்த கையேட்டை வரும் ஹஜ் பெருநாளில் வெளியிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காயலின் மத்திய மருத்துவ நிதி மேலாண்மைக் குழு:
அனைத்துலக காயல் நல மன்றங்களின் ஆதரவோடு ஒருமித்த மத்திய மருத்துவ நிதி மேலாண்மைக் குழு உருவாக அண்மையில் காயலில் உருவாகிய SHIFAவின் அட்ஹாக் கமிட்டி உடைய அறிக்கையைப் பெற்ற பிறகு மன்றத்தில் ஆலோசித்து தேவையான முடிவுகள் எடுக்க தீர்மானிக்கப்பட்டது.
மன்றத்தின் சட்டத்திட்டங்கள் [ BY - LAW ] நிறைவேற்றம்:
மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் முன்வரையப்பட்ட மன்றத்திற்கான சட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு தீர்மானமாக பதியப்பட்டது.
கண்டன தீர்மானம்:
நபிகள் நாயகம் [ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்] அவர்களை கற்பனையாக விவரித்து கேவலமாக படம் எடுத்த சாத்தான் சாம் பெசில் என்ற நிகோலா பெசிலை வன்மையாகக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
“வாழ்நாள் சாதனையாள”ருக்கு வாழ்த்து:
அண்மையில் மருத்துவத் துறையில் தனது தனிப்பட்ட உழைப்பாலும் ஏழைகளின் துஆவினாலும் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் சார்பாக தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் பி.ஜெயகுமார் அவர்களால் “வாழ்நாள் சாதனையாளர்” விருது வழங்கப் பெற்று, நமது காயலுக்கு பெருமை சேர்த்து தந்துள்ள சாதனையாளர், நமது காயலின் கல்வித் தந்தையருள் ஒருவரான மர்ஹூம் எம்.கே.டி அப்பா அவர்களின் மூத்த குமாரர் குழந்தை நல நிபுணர் டாக்டர் எம்.ஏ. முஹம்மது தம்பி M.B.B.S., M.D. (Paed.), DCH அவர்களை இம்மன்றம் மனமார வாழ்த்தி நீடுழி நலமுடன் வாழ்ந்து இன்னும் பிற சாதனைகள் பெற்று சிறப்புடன் விளங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜக்வா தலைவர் மறைவுக்கு இரங்கல்:
ஜெய்ப்பூர் காயல் நலமன்றத் தலைவர் அல்ஹாஜ் முஸ்தபா கமால் அவர்களின் மறைவுக்கும் எம் மன்றத்தின் உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தும் அன்னாரின் மஃபிரத்திற்காக துஆ செய்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அடுத்த செயற்குழு:
அடுத்த செயற்குழு கூட்டம் இன்ஷாஅல்லாஹ் அக்டோபர் 12ஆம் தேதியன்று அஸர் தொழுகைக்கு பின் நடைபெறும் என்று மன்றத்தின் தலைவர் ஹாபிஃழ் ஹபீபுர் ரஹ்மான் ஆலிம் அறிவித்து இறுதியாக ஹாஃபிழ் இஸ்ஹாக் லெப்பை ஆலிம் மஹ்ழரி அவர்களின் துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
இக்கூட்டத்தில், மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, அபூதபீ காயல் நல மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.E.முஹ்யித்தீன் அப்துல் காதிர்.
செய்தித் தொடர்பாளர்,
அபூதபீ காயல் நல மன்றம்.
படங்கள்:
சுப்ஹான் N.M.பீர் முஹம்மத் |