இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களைக் கேலி செய்து படமெடுத்து, இணையதளத்திலும் வெளியிட்ட அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவரைக் கண்டிக்காத அந்நாட்டு அரசைக் கண்டித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் கிளை சார்பில், 19.09.2012 புதன் கிழமை மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ்வார்ப்பாட்டத்திற்கு அவ்வமைப்பின் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமை தாங்கினார். மாணவரணியைச் சேர்ந்த சதக் ஷமீல் கிராஅத் ஓதி நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார்.
முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தி, அறிமுகவுரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன், நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூ ஸாலிஹ், துணைச் செயலாளர் ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன், மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், பாலப்பா முஹம்மத் அப்துல் காதிர் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
பின்னர், காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ கண்டனப் பேருரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, இறைத்தூதர் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி படமெடுத்தவரையும், அவர் மீது நடவடிக்கை எடுக்காத அமெரிக்க அரசையும் கண்டித்தும், அமெரிக்காவுக்கும் - ஐக்கிய நாடுகள் சபைக்கும் கண்டனம் தெரிவிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியும் முழக்கம் செய்யப்பட்டது.
நன்றியுரைக்குப் பின், காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ துஆவுடன் ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாநகர தலைவர் நவ்ரங் ஸஹாபுத்தீன், அதன் கவுரவ தலைவர் அப்துல் கனீ, அக்கட்சியின் காயல்பட்டினம் நகர பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன், துணைச் செயலாளர்களான எம்.எச்.அப்துல் வாஹித், அரபி ஷாஹுல் ஹமீத், நகர நிர்வாகிகளான ஹாஜி பி.எம்.எஸ்.அமானுல்லாஹ், ஹாஜி வாவு சித்தீக், ஹாஜி எஸ்.டி.கமால் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும், காயல்பட்டினத்தின் 27 ஜமாஅத்துகள், 20க்கும் மேற்பட்ட பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகளும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
முன்னதாக, ஆர்ப்பாட்டத்திற்கு வருமாறு கோரி, நகரின் பெரும்பாலான பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆர்ப்பாட்டத்தையொட்டி, இன்று மாலையில் காயல்பட்டினம் பிரதான வீதியிலுள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மாலை 05.00 மணி முதல் 06.00 மணி வரை, பிரதான வீதியின் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டது.
படங்களில் உதவி:
A.K.இம்ரான்.
[செய்தியில் சிறு திருத்தம் செய்யப்பட்டது @ 17:22/20.09.2012] |