மன்றம் புதுப்பொலிவுடன் தனது பயணத்தைத் தொடர வேண்டுமானால், புது முகங்கள் மன்றத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்று, வழிநடத்த முன்வர வேண்டுமென, கத்தர் காயல் நல மன்றத்தின் 16ஆவது பொதுக்குழு மற்றும் 05ஆம் ஆண்டு துவக்க விழா ஒன்றுகூடலின்போது, மன்றத் தலைவர் பேசியுள்ளார்.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, கத்தர் காயல் நல மன்றத்தின் துணைத்தலைவர் எம்.என்.முஹம்மத் யூனுஸ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
நிறைவான அருளன்பின் இறை ஏகன் திருப்பெயரால்!
கத்தர் காயல் நல மன்றத்தின் பதினாறாவது பொதுக்குழு மற்றும் ஐந்தாம் ஆண்டு துவக்க விழா, 08.02.2013 வெள்ளிக்கிழமையன்று தோஹா கார்னிச் மியூசியம் பார்க்கில் சிறப்புற நடைபெற்றது.
ஊண்டி முஹைதீன் காக்கா தலைமையேற்ற இந்தக் கூட்டத்தை, சாலிஹ் ஆலிம் இறைமறையை இனிதுற ஓதி துவக்கி வைத்தார். கவிமகன் காதர் வரவேற்புரையாற்ற, கே.வி.ஏ.டி .ஹபீப் முஹம்மத் வாழ்த்துரை வழங்கினார்.
செயலாளர் செய்யித் முஹ்யித்தீன், மன்றத்தின் ஆண்டறிக்கையை சமர்ப்பிக்க, அதனைத் தொடர்ந்து மன்றத் தலைவர் ஃபாஜுல் கரீம் சிறப்புரையாற்றினார்.
மன்றம் புதுப்பொலிவுடன் பயணத்தைத் தொடர, புது முகங்கள் நிர்வாகப் பொறுப்பை ஏற்று வழிநடத்த முன்வர வேண்டும் என வலியுறுத்திய தலைவர் அவர்கள், இதற்கான விரிவான கலந்தாலோசனை எதிர்வரும் செயற்குழுவில் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டார்.
மன்றத்தின் நற்பணிகள் தொய்வின்றித் தொடர்வதற்கு, உறுப்பினர்கள் தானாகவே முன்வந்து சந்தா பணத்தை செலுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் தனதுரையில் விளக்கினார்.
தொடர்ந்து பேசிய தலைவர் அவர்கள், நகர்நலப் பணியில் கடந்த ஆண்டுகளை விட, அதிக வீரியமாய் செயலாற்ற வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, வழக்கம் போல் பல்வேறு நல மன்றங்கள், காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட், மற்றும் இக்ராஃ கல்விச் சங்கம் அமைப்புகளுடன் இணைந்து செய்து வரும் புற்று நோய் கண்டறியும் முகாம், பள்ளிச் சீருடை இலவச விநியோகம், “சந்தியுங்கள் மாநிலத்தின் முதல் மாணவரை” நிகழ்ச்சி, வினாடி-வினா போட்டி, சர்க்கரை நோய் பரிசோதனை முகாம், அதற்கான மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டம், மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை, நலிந்தவர்க்களிக்கும் மருத்துவ உதவி இவற்றுடன் உலக நல மன்றங்களுடன் கைகோர்த்து இன்னும் பல்வேறு சமூக நலப் பணிகளை முன்னின்று செய்வதற்கு நாம் அனைவரும் தயாராக வேண்டும் என்று கூறினார்.
ஜித்தாஹ் காயல் நற்பணி மன்றத்துடன் இணைந்து, புற்று நோய் குறித்த விழிப்புணர்வு செயல்பாட்டுத் திட்டங்கள் இன்னும் அதிகரிக்கப்பட இருப்பதாகாவும் அவர் தனதுரையில் தெரிவித்தார்.
கடந்த நான்காண்டு காலமாக மன்றத்தின் அனைத்து செயல்பாடுகளுக்கும் முழுமையான ஆதரவளித்து வரும் உறுப்பினர்கள், சகோதர மன்றங்கள், காயல் மண்ணிலிருந்து களப்பணியாற்றும் உள்ளூர் பிரதிநிதி மற்றும் சமூக ஊழியர்களுக்கு மன்றத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்த தலைவர்,
மாநில அளவில் நடைபெற்ற கால்பந்து விளையாட்டுப் போட்டியில் வெற்றிக் கோப்பையைக் கைப்பற்றி, நகருக்குப் பெருமை சேர்த்த எல்கே. பள்ளி மாணவர்களை மனதார பாராட்டுவதாகவும், வரும் கல்வியாண்டில் அரசுப் பொதுத் தேர்வு எழுதவுள்ள காயல்பட்டினத்தைச் சேர்ந்த பள்ளிகளின் மாணவ-மாணவியர் மாநில அளவில் சிறப்பிடங்களைப் பெற்று, நகருக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்திப் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து, மன்றத்தின் மூத்த உறுப்பினர் கே.வி.ஏ.டி.ஹபீப் முஹம்மத் அவர்களின் தூண்டுதலின் பேரில், நமது சகோதர மன்றமான சிங்கப்பூரைப் போன்று, கத்தார் உறுப்பினர்களும் கனிசமான தொகையை சிறப்பு நிதியாக அன்பளித்தார்கள்.
நன்றியுரையைத் தொடர்ந்து, மவ்லவீ ஹாஃபிழ் ‘முத்துச்சுடர்’ எஸ்.எம்.எஸ்.முஹம்மத் லெப்பை பாக்கவீ அவர்களின் துஆவுடன் விழா நிகழ்வுகள் அனைத்தும் இனிதே நிறைவுற்றன. அல்ஹம்துலில்லாஹ்!
இவ்விழாவில், நாற்பதுக்கும் மேற்பட்ட மன்ற உறுப்பினர்கள் ஆவலுடன் கலந்துகொண்டனர். அனைவருக்கும் விழா நிறைவுக்குப் பின் விருந்து வழங்கியுபசரிக்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை, மன்றத்தின் மூத்த உறுப்பினர் சொளுக்கு செய்யித் முஹம்மத் ஸாஹிப் என்ற சேம்ஸா, துணைத்தலைவர் எம்.என்.முஹம்மத் யூனுஸ், எஸ்.ஏ.முஹம்மத் முஹைதீன் மற்றும் மன்ற அங்கத்தினர் சிறப்புற செய்திருந்தனர்.
இவ்வாறு, கத்தர் காயல் நல மன்ற துணைத்தலைவர் எம்.என்.முஹம்மத் யூனுஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
கவிமகன் காதர்
செய்தித் தொடர்பாளர்
கத்தர் காயல் நல மன்றம் |