கால்பந்துப் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்றமைக்காக காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர்களுக்கு, பள்ளி நிர்வாகம் சார்பிலும், முன்னாள் மாணவர்கள் சார்பிலும் மதிப்புமிக்க பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. விபரம் வருமாறு:-
இந்தியாவின் 64ஆவது குடியரசு தின விழாவையொட்டி, தமிழகம் தழுவிய அளவில் - 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான சீனியர் பிரிவு கால்பந்தட்டப் போட்டிகள் தஞ்சாவூரில் நடைபெற்றது.
26.01.2013 மாலை 04.30 மணியளவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், திண்டுக்கல் புனித மேரி மேனிலைப்பள்ளியை எதிர்த்தாடிய காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
மாநில அளவில் கால்பந்தாட்டப் போட்டியில் முதலிடம் வென்று சரித்திர சாதனை புரிந்த - அப்பள்ளியின் சீனியர் பிரிவு கால்பந்து அணி வீரர்கள், 28.01.2013 அன்று காலை 09.15 மணியளவில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகத்தில், மாணவர் ஒன்றுகூடலின்போது (அசெம்ளி) அனைத்து மாணவர்கள் முன்னிலையிலும் பாராட்டப்பட்டனர்..
இந்நிகழ்வில், தம் பள்ளி மாணவர்களின் இச்சாதனையைப் பாராட்டி, விரைவில் சிறப்பு நிகழ்ச்சியொன்றை நடத்தி சிறப்பு செய்யப்படுமென நிர்வாகிகள் தெரிவித்ததாக, பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா தெரிவித்தார்.
அதனடிப்படையில், கால்பந்துப் போட்டியில் மாநிலத்தில முதலிடம் வென்ற பள்ளி மாணவர்களைப் பாராட்டி, 08.02.2013 வெள்ளிக்கிழமை மாலை 04.30 மணியளவில், பாராட்டு விழா சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பள்ளி ஆசிரியர் ஆனந்தக்கூத்தன் விழா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.
கிராஅத், தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, விழாவிற்குத் தலைமை வகித்த - பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நடப்பாண்டு, தான் பணி ஓய்வு பெறவுள்ள நிலையில், இவ்வளவு பெரிய சாதனையை மாணவர்கள் நிகழ்த்தியிருப்பது தன்னை பெரிதும் மகிழ்வித்துள்ளதாக அவர் தனதுரையில் நெகிழ்வுடன் கூறினார்.
அவரைத் தொடர்ந்து, பள்ளி தாளாளர் டாக்டர் முஹம்மத் லெப்பை வாழ்த்துரை வழங்கினார். அவரைத் தொடர்ந்து, முன்னாள் மாணவர்கள் சார்பில், பல்லாக் அப்துல் காதிர் நெய்னா வாழ்த்துரை வழங்கினார். பின்னர் பள்ளியின் முதுநிலை ஆசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் வாழ்த்துரை வழங்கினார்.
அவரைத் தொடர்ந்து, இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியின் முதல்வர் பெவிஸ்டன் பேரின்பராஜ் வாழ்த்துரை வழங்கினார்.
தொடர்ந்து, மற்றொரு சிறப்பு விருந்தினரான - தூத்துக்குடி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சிரோன்மணி சந்திரா வாழ்த்துரை வழங்கினார்.
பின்னர், பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் வேலாயுதம், மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் முதலிடம் பெற்ற அணி வீரர்களின் பெயர்களை வாசிக்க, பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்ட பரிசு மற்றும் கேடயத்தை, சிறப்பு விருந்தினர்கள் சாதனை மாணவர்களுக்கு வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து, முன்னாள் மாணவர்கள் சார்பில், சுமார் 2 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பரிசு ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கப்பட்டது. அவற்றை, பள்ளி நிர்வாகிகளுள் ஒருவரான ஹாஜி எஸ்.எம்.உஸைர், பள்ளியின் பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவர் ஹாஜி எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா, ஹாஜி பி.எஸ்.எம்.இல்யாஸ், பள்ளி துணைச் செயலாளர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா உள்ளிட்டோர் வழங்கினர்.
இவ்விழாவில், பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா, உடற்கல்வி ஆசிரியர்களான வேலாயுதம், ஜமால், ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர் ஜெபராஜ் ராஜநாயகம் ஆகியோருக்கு, பள்ளி நிர்வாகம் சார்பிலும், முன்னாள் மாணவர்கள் சார்பிலும் பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னாள் மாணவர்கள் சார்பிலான பரிசுகளை, பள்ளியின் முன்னாள் மாணவர் துணி எம்.ஓ.அன்ஸாரீ வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்களுக்கு, பள்ளி நிர்வாகத்தின் சார்பில், அதன் தாளாளர் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
பின்னர், மேடையில் வீற்றிருந்த அனைவருக்கும் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.
நன்றியுரை, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. இவ்விழாவில், பள்ளியின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
|