இந்திய ஹஜ் குழு மூலம் இவ்வாண்டு ஹஜ் பயணியரை தேர்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. பயணம் மேற்கொள்ள விரும்புவோர் தங்கள் விண்ணப்பங்களை - பிப்ரவரி 6 முதல் மார்ச் 20 வரை சமர்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கவரில் 5 பெரியோரும், 2 கைக்குழந்தைகள் மட்டும் விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர்.
நவம்பர் 20, 2013 அன்று 2 வயதை பூர்த்திசெய்பவர்கள் - கைக்குழந்தைகளாக கருதப்படுவர். மீதி அனைவரும் - பெரியோராகவே கருதப்படுவர்.
விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் கவர் எண்கள் பல விபரங்களை தரும்: உதாரணமாக TNF-1079-3-1 என்ற கவர் எண்ணை காணலாம்.
இதில் TN - என்பது தமிழகத்தை குறிக்கும். F என்பது பொது பிரிவு என்பதை குறிக்கும் (General Category). R - என்பது சிறப்பு பிரிவை குறிக்கும் (Reserved Category).
1079 என்பது வரிசை எண். 3 என்பது விண்ணப்ப கவரில் 3 பெரியவர்கள் உள்ளனர் என்பதனை குறிக்கும். 1 என்பது விண்ணப்பத்தில் ஒரு கைக்குழந்தை இணைக்கப்பட்டுள்ளதை குறிக்கும்.
விண்ணப்பதாரர்கள் - விண்ணப்பம் செய்யும் போது தங்கள் பாஸ்போர்ட்டினை சமர்ப்பிக்கவேண்டும். விண்ணப்பம் செய்யும் வெளிநாடு வாழ் இந்தியர்கள், அடிக்கடி வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் இந்தியர்கள் - தங்கள் பாஸ்போர்ட்டினை ஆகஸ்ட் 31க்குள் சமர்ப்பிக்கவேண்டும்.
ஹஜ் பயண கட்டணம் - சவுதி ரியால் கொள்முதல் டெண்டர் விடப்பட்டப்பின் அறிவிக்கப்படும்.
பச்சை பிரிவு (Green Category) பயணியருக்கு ஹரத்தின் எல்லையில் இருந்து 1500 மீட்டர் தூரத்திற்குள் தங்கும் இடம் மக்காவில் வழங்கப்படும். ஒரு இடத்திற்கான கட்டணம் 4500 சவுதி ரியால்.
அசீசியா பிரிவு (Aziziya Category) பயணியர் மக்காவின் அசீசியா பிரிவில் தங்குவர். அவர்களுக்கான ஒரு இடத்திற்கான கட்டணம் (போக்குவரத்து ஏற்பாடும் சேர்த்து) 2630 சவுதி ரியால்.
கைக்குழந்தைகள் - விமான கட்டணத்தில் 10 சதவீதம் செலுத்த வேண்டி இருக்கும்.
இந்திய ஹஜ் குழு நிர்ணயம் செய்யும் மொத்த தொகையில் - முன் பணமாக 76,000 ரூபாய் மே 20, 2013 க்கு முன்னர் செலுத்தப்பட வேண்டும். மீதி தொகையை - ஜூன் 28, 2013 க்கு முன்னர் செலுத்த வேண்டும்.
இந்தியாவில் இருந்து பயணியரை ஏற்றிக்கொண்டு சவுதி செல்லும் முதல் விமானம் செப்டம்பர் 7, 2013 அன்று புறப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இறுதி விமானம் - அக்டோபர் 11, 2013 அன்று புறப்படும்.
திரும்பும் திசையில் பயணியரை ஏற்றிக்கொண்டு முதல் விமானம் - அக்டோபர் 20, 2013 அன்று இந்தியாவிற்கு புறப்படும். இத்திசையில் இறுதி விமானம் - நவம்பர் 20, 2013 அன்று புறப்படும். |