காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையில், இம்மாதம் 07 முதல் 10ஆம் தேதி வரை, மகளிருக்கு மார்பக புற்றுநோய் கண்டறியும் மேமோக்ராஃபி பரிசோதனை முகாம் நடைபெற்றது.
திருச்சியிலுள்ள டாக்டர் ஷாந்தா மார்பக புற்றுநோய் அறக்கட்டளையுடன் கே.எம்.டி. மருத்துவமனை இணைந்து நடத்திய இம்முகாமில், காயல்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 131 பெண்கள் பங்கேற்று பரிசோதனை செய்துகொண்டனர். பரிசோதனை முடிவுகள் பத்து நாட்களில் அவரவருக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 2,500 ரூபாய் கட்டணத்தில் செய்யப்பட வேண்டிய இப்பரிசோதனை, லாப நோக்கமின்றி - சேவை அடிப்படையில் செய்யப்பட்டதால், செலவினத் தொகையான ரூபாய் 750 தொகை மட்டும் பயனாளிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது.
முகாம் நிறைவு நாளான 10.02.2013 ஞாயிற்றுக்கிழமையன்று மதியம் 01.30 மணியளவில், செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி, கே.எம்.டி. மருத்துவமனை கேளரங்கில் நடைபெற்றது.
கே.எம்.டி. மருத்துவமனையை நடத்தும் காயல்பட்டினம் மருத்துவ அறக்கட்டளையின் அறங்காவலர் ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மற்றொரு அறங்காவலர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் முன்னிலை வகித்தார்.
அறக்கட்டளை செயலாளர் ஹாஜி வாவு எம்.எம்.முஃதஸிம் அறிமுகவுரையாற்றினார். அறக்கட்டளை தலைவர் ஹாஜி டாக்டர் அஷ்ரஃப் தொடர் முயற்சி மேற்கொண்டதன் பலனாக இம்முகாம் கே.எம்.டி. மருத்துவமனையில் நடத்தப்பட்டதாகக் கூறிய அவர், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கிடையே 4 நாட்கள் முகாம் நடத்த மருத்துவக் குழுவினர் ஒப்புதலளித்த காரணத்தால், கால அவகாசத்தைக் கருத்திற்கொண்டு, குறைந்த அளவிலேயே பயனாளிகளை அனுமதிக்க முடிந்ததாகக் கூறினார்.
அடுத்து, கே.எம்.டி. மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவ நிபுணர் டாக்டர் சிந்தியா தம்பிராஜ், நடைபெற்று முடிந்த பரிசோதனை முகாமில், காயல்பட்டினம் பெண்களுக்கு இருந்த ஆர்வத்தைப் புகழ்ந்து பேசினார்.
அவரைத் தொடர்ந்து, திருச்சி டாக்டர் ஷாந்தா மார்பக புற்றுநோய் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் விஜயலக்ஷ்மி உரையாற்றினார்.
இந்த முகாம் காயல்பட்டினத்தில் நடத்தப்படுவதற்கு, டாக்டர் அஷ்ரஃப் மேற்கொண்ட முயற்சிகள் அளப்பரியது என்று கூறிய அவர், முகாமை நடத்துவதற்காக கே.எம்.டி. மருத்துவமனைக்கு வந்த நாள் முதல் விடைபெறும் நாள் வரை, மருத்துவமனை நிர்வாகிகள் அளித்த உபசரிப்பு தம்மை மிகவும் மகிழ்வித்ததாகக் கூறினார்.
முகாமில் பங்கேற்ற பெண்களும் நல்ல முறையில் ஒத்துழைத்ததாகக் கூறிய அவர், அடுத்தடுத்த நிகழ்ச்சிகளுக்காக பல ஊர்களுக்கும் செல்ல வேண்டியிருப்பதால் குறைந்த நாட்கள் மட்டுமே வழங்க முடிந்ததாகக் கூறினார்.
தமது அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் வி.கனகராஜின் மனைவி மார்பக புற்றுநோயால் இறந்த காரணத்தால் வேதனையுற்ற அவர், அதன் காரணமாகவே டாக்டர் ஷாந்தா மார்பக புற்றுநோய் அறக்கட்டளையைத் துவக்கியதாகவும், அதன் சேவைப் பணிகளுக்காக திருச்சி - ஸ்ரீரங்கம் ரோட்டரி சங்கத்தின் சார்பில் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான - லண்டனிலிருந்து தருவிக்கப்பட்ட மார்பக புற்றுநோய் பரிசோதனை பேருந்து (Mamo Bus) அறக்கட்டளைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளதாகவும், பல்வேறு பகுதிகளுக்கும் இப்பேருந்தைக் கொண்டு சென்று, சேவை அடிப்படையில் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனைகள் மேற்கொண்டு வருவதாகவும், இந்தப் பரிசோதனை மூலம் செலுத்தப்படும் ரேடியேஷன், எக்ஸ்ரே கருவியின் ரேடியேஷனை விடவும் வீரியம் குறைந்தது என்றும் அவர் கூறினார்.
குறைந்த நேரத்தில் பரிசோதனையை மேற்கொள்ளும் வகையில் கருவிகள் இப்பேருந்தில் கட்டமைக்கப்பட்டுள்ளதாகவும், சாதாரண சோதனைகளின்போது ஒருவருக்கு சுமார் 30 நிமிடங்கள் தேவை என்றிருக்க, இப்பேருந்திலுள்ள பரிசோதனைப் பிரிவில், 10 நிமிடங்களுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் ஒரு நாளுக்கு சுமார் 50 பேருக்கு பரிசோதனை செய்யலாம் என்று அவர் கூறினார்.
கருவுற்றுள்ள பெண்கள் மற்றும் பாலூட்டும் பெண்கள் இப்பரிசோதனையை செய்துகொள்ளக் கூடாது என்றும், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவது மிகவும் அரிது என்றும் கூறிய அவர் - பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வூட்டி வருவதாகவும், பொதுவாக புற்றுநோய் பெரும்பாலும் வாய் அல்லது மார்பகத்தில்தான் அதிகளவில் ஏற்படும் என்றும் கூறினார்.
35 வயதையடைந்த பெண்கள் அனைவரும் ஆண்டுக்கு ஒருமுறையேனும் மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்வது நல்லது என்றும், அடிக்கடி சுய பரிசோதனை செய்துகொள்வது மிகவும் அவசியம் என்றும் அவர் கூறினார்.
அடுத்து காயல்பட்டினம் வரும் வாய்ப்பு கிடைத்தால், பவர் பாய்ண்ட் ப்ரஸென்டேஷனுடன் கூடுதல் விழிப்புணர்வு வழங்க விரும்புவதாகக் கூறி அவர் தனதுரையை நிறைவு செய்தார்.
அவரைத் தொடர்ந்து, மார்பக புற்றுநோய் பரிசோதனை நிபுணர் ருக்மணி, பரிசோதனை பேருந்தில் கட்டமைக்கப்பட்டுள்ள கருவிகளின் தன்மை, பரிசோதனை முறைகள் குறித்து விளக்கமளித்ததுடன், மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் குறித்த அனைத்து தகவல்களும் மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்று கூறினார்.
கே.எம்.டி. மருத்துவமனை நிர்வாக மேலாளர் கே.அப்துல் லத்தீஃப் நன்றி கூற, அத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. |