சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில், அதன் உள்ளூர் பிரதிநிதியின் அயராத உழைப்பிற்கு பாராட்டு, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPAவின் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் (RKWA) 34ஆவது செயற்குழுக் கூட்டம், 18.01.2013 வெள்ளிகிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின், எமது மன்ற செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் எஸ்.ஏ.சி.சாலிஹ் அவர்கள் இல்லத்தில், எமது மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஹாஜி வி.எஸ்.எச்.செய்யித் முஹம்மத் அலீ அவர்கள் தலைமையில் நடந்தது.
கூட்டத்தை சகோ. நோனா என்.எம்.இஸ்மாயில் மற்றும் சகோ. வி.எம்.ஏ.முஹம்மத் அமீன் அவர்களும் ஒருங்கிணைத்து தந்தார்கள்.
ஹாபிழ் எம்.ஏ.ஷெய்க் தாவூத் இத்ரீஸ் அவர்கள் இறைமறையின் வசந்த வார்த்தைகளை ஓதி துவங்கி வைத்தார்.
வந்தோரை வரவேற்றும், நமது மன்றத்தின் பல்வேறு விசயங்களை முன் மொழிந்தும் எமது மன்றத்தின் தலைவர் ஹாஜி எம்.என்.மின்ஹாஜ் முஹ்யித்தீன் உரையாற்றினார்.
தலைவரின் முன்னுரைக்கு பின், பல்வேறு விஷயங்கள் அலசி ஆராயப்பட்டு, பின்வருமாறு தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றபட்டன:-
தீர்மானம் 1 - அடுத்த பொதுக்குழு:
எமது மன்றத்தின் 45 வது பொது குழு கூட்டம் எதிர் வரும் 08.03.2013 வெள்ளிகிழமை மாலை 5 மணியளவில் பத்ஹா கிளாசிக் பார்ட்டி ஹாலில் நடைபெற இருக்கிறது. மன்றத்தின் உறுப்பினர்கள், மற்றும் காயல் அன்பர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள கேட்டு கொள்கிறது.
தீர்மானம் 2 – KEPA அமைப்பிற்கு முழு ஆதரவு:
காயல்பட்டணம் சுற்று சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) நடத்தி வரும் நமதூர் வாழ்வு உரிமை போராட்டத்திற்கு எமது மன்றம் முழுமையான பாராட்டுதலை முழு ஆதரவினை தெரிவிக்கிறது.
ரியாத் வாழ் காயல் மக்களிடம் கையெழுத்து வாங்கி வைத்திருக்கும் மனுவினை அளிக்க நேரம் (APPOINTMENT) பெற எமது செயற்குழு உறுப்பனர் சகோ. நோனா என்.எம்.இஸ்மாயில் அவர்கள் அரபு நியூஸ் நாளிதழ் தலைமை பதிப்பாளர் அவர்கள் மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.
இன்ஷா அல்லாஹ் வெகு விரைவில் நேரடியாக மனு அளிக்க உள்ளதை எமது செயற்குழு மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறது.
சவுதி அரேபியாவுக்கான மேதகு இந்திய தூதுவரிடம் நேரிடையாக மனு அளிக்க முயற்ச்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தீர்மானம் 3 - நலத்திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு:
நமதூர் வறிய மக்களிடம் இருந்து வந்த விண்ணப்பங்கள் கனிவுடன் பரிசீலிக்கப்பட்டு, மொத்தம் 1,61,500/- ரூபாய், இரண்டு மாணவ செல்வங்களின் கல்வி வகைக்கும் ஆறு நபர்களின் மருத்துவ சிகிச்சைக்கும் உதவி செய்வதென முடிவு செய்யபட்டது.
தீர்மானம் 4 - உள்ளூர் பிரதிநிதிக்கு பாராட்டு:
எமது அமைப்பின் உள்ளூர் பிரதிநிதி, ஹாஜி. தர்வேஷ் முஹம்மது அவர்களின் அயராத உழைப்பையும், ஒத்துழைப்பையும் எமது மன்றம் மிகப்பெருமையாக எண்ணிப்பார்த்து வியக்கின்றது.
எமது மன்றத்தின் செயல்பாட்டில் அவரது பங்கும், ஒத்துழைப்பும் இன்றியமையாதது. அவரது தனித்துவமிக்க சேவை என்றும் தொடரவேண்டும் என இம்மன்றம் விரும்புவதுடன், அவருக்கு எக்குறையுமில்லா நல்வாழ்வைத் தர இறையோனை எம் மன்றம் இறைஞ்சுகிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நன்றி உரை சகோ. வி.எம்.ஏ.முஹம்மது அமீன் அவர்களால் நிகழ்த்தப்பட்டு, இறுதியாக ஹாஃபிழ். பி.எஸ்.ஜெ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் துஆ ஓதி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் ஓத, கூட்டம் நிறைவுபெற்றது.
கூட்டம் துவங்குவதற்கு முன், ஹாஃபிழ் எஸ்.ஏ.சி.ஸாலிஹ் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த காயல் களரி கறியுடன் கூடிய நெய்சோறு விருந்து அனைவருக்கும் சுடச் சுட பரிமாற்றபட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஹாஜி M.E.L.நுஸ்கீ
கவுரவ ஆலோசகர்
காயல் நல மன்றம்
ரியாத் - சஊதி அரபிய்யா |