தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் ஆஷிஷ்குமார் தலைமையில் நடந்தது. பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற ஆட்சியர் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:
வருகிற 15ம் தேதி கூடங்குளம் அனுமின் நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள், பள்ளி மாணவ, மாணவியர்களை ஈடுபடுத்தப்போவதாக தகவல் கிடைத்துள்ளது. இது சட்டத்திற்கு விரோதமானது. மாணவ, மாணவியர்களை பள்ளிக்கு அனுப்பாமல் எந்தவித பேராட்டத்திற்கு ஈடுபடுத்தக்கூடாது என அரசு உத்தரவு உள்ளது.
எனவே, 15ம் தேதி பள்ளிக்கு வராத குழந்தைகளின் பெற்றோர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி மாவட்டம் வறட்சி மாவட்டமாக முதல்வர் அறிவித்துள்ளார். வறட்சி பகுதிகளை பார்வையிட இந்த வாரத்தில் முதல்வரால் அறிவிக்கப்பட்ட குழுவினர் தூத்துக்குடி வரஉள்ளனர். இவர்கள் 4 தாலூகா பகுதிகளில் ஆய்வு செய்து வறட்சி பகுதிகளை கணக்கெடுத்து அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.
இதன் பின்னர், தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டிய வறட்சி நிவாரணம் குறித்து முடிவு செய்யப்படும்.
டிசிடபிள்யூ தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவு நீர், கடலில் கலப்பது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. 20 நாட்களுக்குள் அவர்கள் பதில் தெரிவிக்க வேண்டும். அதன் பின்னர், அந்த தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நிலத்தடி நீர் எடுப்பதற்கு தடைவிதித்து கோட்டாட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதனையும் மீறி நிலத்தடிநீரை எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், லாரிகள் பறிமுதல் செய்யப்படும். நிலத்தடி நீர் எடுக்க உரிமம் பெற வேண்டும். இது குடிநீருக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுக்க அனுமதி கிடையாது என்றார்.
மேலும், தூத்துக்குடி, பாளை ரோட்டில் விவிடி சிக்னல் முடக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் மருத்துவமனைகள், பள்ளிகள் உள்ளதால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும், சிக்னலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என செய்தியாளர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு பதிலளித்த ஆட்சியர், இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, அதன் பின் முடிவு செய்ய்பபடும் என்று கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் அமிர்தஜோதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தமிழினியன், உதவி அலுவலர் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
தகவல்:
www.tutyonline.net
[செய்தி திருத்தப்பட்டது @ 9:00am/12.02.2013] |