வரும் ஏப்ரல் 12ஆம் தேதியுடன் நடப்பு செயற்குழுவின் பொறுப்புக் காலம் நிறைவடைவதையொட்டி, புதிய செயற்குழுவைத் தேர்ந்தெடுப்பதற்கான வேட்பு மனு விபரம் வரும் மார்ச் மாதம் 01ஆம் தேதியன்று அறிவிக்கப்படும் என, சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செயலாளர் மொகுதூம் முஹம்மத் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
இறையருளால் எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம், 08.02.2013 வெள்ளிக்கிழமையன்று 20.00 மணிக்கு, மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
தலைமையுரை:
ஹாஃபிழ் கே.எம்.எஸ்.தைக்கா ஸாஹிப் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய - மன்றத்தின் மூத்த உறுப்பினர் எம்.அஹ்மத் ஃபுஆத் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
மன்றத்தின் பல்வேறு செயல்திட்டங்களை நிறைவேற்றுவதற்காக பொறுப்பளிக்கப்பட்டவுடன், உறுப்பினர்கள் முழு ஈடுபாட்டுடனும், உற்சாகத்துடனும் செயல்பட்டு, குறித்த காலத்தில் அவற்றைச் செய்து முடித்தமை குறித்து அவர் தனதுரையில் மகிழ்ச்சி தெரிவித்தார்.
ஒருங்கிணைப்பாளர் உரை:
தொடர்ந்து, நடப்பு கூட்ட ஒருங்கிணைப்பாளர் சோனா அபூபக்கர் ஸித்தீக் சிற்றுரையாற்றினார். கூட்டத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பு தன்னிடம் அளிக்கப்பட்டதையடுத்து, மன்றத்தின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து விரிவாக அறிந்துகொள்ள முடிந்ததாகக் கூறிய அவர், மன்றத்தின் மூலம் வழங்கப்படும் உதவிகள், இல்லா நிலையிலும், இயலா நிலையிலும் உள்ளோரின் வாழ்வை எந்தளவுக்கு மேம்படுத்தியிருக்கிறது என்பதையும், அதற்காக அவர்கள் செய்யும் துஆ - பிரார்த்தனைகள் குறித்தும் தனது அனுபவங்களை கூட்டத்தில் பகிர்ந்துகொண்டார்.
கூட்டத்தில் உறுப்பினர்கள் ஆர்வத்துடன் கலந்துகொள்வதைப் போல, கலந்துகொள்ள விடுக்கப்படும் அழைப்பிற்கும் உடனுக்குடன் கூட்ட ஒருங்கிணைப்பாளருக்கு பதிலளித்து ஒத்துழைக்குமாறு அனைத்துறுப்பினர்களையும் கேட்டுக்கொள்வதாக அவர் கூறினார்.
புதிய உறுப்பினர்கள் அறிமுகம்:
பின்னர்,
ஐ.எம்.அப்துல் ரஹீம்,
ஷாஹுல் ஹமீத்,
முஹம்மத் இர்ஃபான்,
தவ்ஹீத்
ஆகிய - மன்றத்தின் புதிய உறுப்பினர்கள் கூட்டத்தில் அனைவருக்கும் அறிமுகம் செய்யப்பட்டனர்.
செயலர் அறிக்கை:
தொடர்ந்து, கடந்த கூட்ட நடவடிக்கைகள் குறித்தும், அவை செயல்படுத்தப்பட்ட விபரங்கள் குறித்தும், மன்றச் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் விளக்கிப் பேசினார். அவரது உரையில் இடம்பெற்ற தகவல்கள் வருமாறு:-
>>> சென்னையில் வேலைவாய்ப்பு தேடுவோருக்கு உதவி:
சென்னையில் வேலைவாய்ப்பு தேடும் - தகுதியுள்ள பயனாளிகளைக் கண்டறிந்து உறுப்பினர்கள் மன்றத்திற்குத் தகவல் தெரிவிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளுக்கு, சென்னையில் உணவு, தங்குமிடத்திற்கு மன்றத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்படும்.
>>> KEPA அறிக்கை எதிர்பார்ப்பு:
காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) அண்மைச் செயல்பாடுகள் குறித்த அறிக்கை மற்றும் அது தொடர்பான ஆவணங்கள், சிங்கப்பூரிலுள்ள இந்திய தூதரகத்தில் சமர்ப்பிப்பதற்காக மன்றத்தால் எதிர்பார்க்கப்படுகிறது.
>>> ஒருநாள் ஊதிய நன்கொடை:
ஏற்கனவே திட்டமிடப்பட்டது போல, இம்மாதம் 01ஆம் தேதியன்று, மன்ற உறுப்பினர்களின் ‘ஒருநாள் ஊதிய நன்கொடை நாள்’ அனுசரிக்கப்பட்டது.
>>> இலச்சினை மற்றும் முழக்கம்:
மன்றத்திற்கான இலச்சினை (Logo), முழக்கம் (Slogan) ஆகியன - அதற்குரிய பொறுப்பாளர்களால் இறுதி செய்யப்பட்டு, சிங்கை அரசுப் பதிவாளரிடம் சமர்ப்பிக்க ஆயத்த நிலையிலுள்ளது.
இவை, செயலரின் உரையில் இடம்பெற்ற தகவல்கள்.
பொருளாளரின் வரவு-செலவு கணக்கறிக்கை:
தொடர்ந்து, மன்றத்தின் இதுநாள் வரையிலான வரவு - செலவு கணக்கறிக்கையை கூட்டத்தில் சமர்ப்பித்துப் பேசிய மன்றப் பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை, முதல் காலாண்டிற்கான உறுப்பினர் சந்தா தொகைகளை அனைத்து உறுப்பினர்களும் இயன்ற வரை விரைவாக அளித்து, ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டார். உதவிகள் கோரி மன்றத்தால் பெறப்பட்டுள்ள விண்ணப்பங்கள் குறித்து, அவற்றை இறுதி செய்யும் குழுவின் அடுத்த கூட்டத்தின்போது பரிசீலித்து முடிவெடுக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.
2012ஆம் ஆண்டிற்கான கணக்குத் தணிக்கையறிக்கை:
மன்றத்தின் 2012ஆம் ஆண்டிற்கான கணக்குகளின் முதல் நிலை தணிக்கை அறிக்கையை, மன்ற உறுப்பினர் ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல் கூட்டத்தில் சமர்ப்பித்தார். இறுதி செய்யப்பட்ட தணிக்கை அறிக்கையை, உறுப்பினர் ஜவஹர் இஸ்மாஈல் பார்வையிட்ட பின்னர், மார்ச் 2013க்கான மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில் தணிக்கைக் குழு இறுதி செய்யப்பட்ட தணிக்கை அறிக்கையை சமர்ப்பிக்குமென கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
விண்ணப்பங்கள் விசாரணைக் குழு அறிக்கை:
பல்வேறு தேவைகளுக்கு உதவிகள் கோரி மன்றத்தால் பெறப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட, உறுப்பினர் ஏ.எம்.உதுமான் தலைமையில், ஏ.எச்.காதிர் ஸாஹிப் அஸ்ஹர், எம்.எச்.முஹம்மத் உமர் ரப்பானீ, எம்.எல்.எஸ்.மொகுதூம் அப்துல் காதிர் ஆகியோரடங்கிய குழு தனது விசாரணை சுருக்க அறிக்கையை கூட்டத்தில் சமர்ப்பித்து, விசாரணையின்போது பெறப்பட்ட அனுபவங்களை கூட்டத்தில் பகிர்ந்துகொண்டது.
பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், விண்ணப்பங்கள் பரிசீலனைக் குழு இம்மாதம் 16ஆம் தேதி - வெள்ளிக்கிழமையன்று கூடி, 2013ஆம் ஆண்டிற்கான மன்றத்தின் நிதிநிலை அறிக்கை அடிப்படையில் பயனாளிகளை இறுதி செய்யும் எனவும்,
விண்ணப்பங்கள் குறித்து விசாரிக்கவும், பரிசீலிக்கவும் இனி வருங்காலங்களில் நிரந்தர செயல்முறை (Standard Operating Procedure - SOP) கையாளப்படும் என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
ஒருங்கிணைந்த மருத்துவ உதவித் திட்டம்:
கல்விக்காக இக்ராஃ மூலம் ஒருங்கிணைந்ததைப் போல, காயல் நல மன்றங்களின் மருத்துவ உதவித் திட்டங்களை ஒருங்கிணைந்த முறையில் செய்வதற்காக முன்மொழியப்பட்ட ‘Shifa Health & Welfare Association’ குறித்து, அதன் தற்காலிக குழுவிடம் தொடர்புகொண்டு, அதன் நிலை குறித்து தகவலறியுமாறு, மன்றப் பொருளாளர் கேட்டுக்கொள்ளப்பட்டார்.
‘முதியோர் நலத்திட்டம்’ குறித்த அறிக்கை:
மன்றத்தின் சார்பில் முன்மொழியப்பட்ட “முதியோர் நலத் திட்டம்” குறித்த நடைமுறை சாத்தியங்கள் குறித்து, மன்றத்தின் மூத்த உறுப்பினர் எம்.அஹ்மத் ஃபுஆத் தலைமையில், ஹாஃபிழ் எம்.எம்.அஹ்மத் முஹ்யித்தீன், சோனா அபூபக்கர் ஸித்தீக், ஏ.எச்.காதிர் ஸாஹிப் அஸ்ஹர் ஆகியோரடங்கிய குழு, தனதறிக்கையை கூட்டத்தில் சமர்ப்பித்தது.
மிகக் குறுகிய காலத்தில், விரிவான அறிக்கையை தயாரித்து அளித்தமைக்காக இக்குழுவை கூட்டம் பாராட்டியது. இவ்வறிக்கையின் இறுதி வடிவம், அடுத்த செய்குழுவில் கிடைக்கப்பெறும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
திட்ட பொறுப்பாளருடன் தொலைபேசி உரையாடல்:
மன்றத்தின் முக்கிய திட்டங்களுள் ஒன்றான - அத்தியாவசிய சமையல் பொருளுதவி (GNK) திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு பொருட்கள் வழங்கப்பட்ட அனுபவங்களை, அதன் பொறுப்பாளர்களுள் ஒருவரான - பொதுநல ஆர்வலர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை, கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் தொலைபேசி வழியே அனைவருடனும் பகிர்ந்துகொண்டார்.
வருங்காலங்களில், காயல்பட்டினம் மக்கள் நலனுக்காக இன்னும் பல உதவித் திட்டங்களைச் செய்யுமாறும், இறைவனின் நற்கூலி நிறைவாகக் கிடைக்குமென்றும் அவர் அப்போது கூறினார்.
அனுபவ அறிக்கையை அளிக்க வேண்டுகோள்:
மன்றத்துடனான ஈடுபாடு தங்களுக்கு எந்த வகையில் பயனளித்துள்ளது என்பது குறித்தும், தங்கள் வாழ்க்கையில் அது ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் குறித்தும் அனைத்து உறுப்பினர்களும் தமது அனுபவங்களை அறிக்கையாக அளித்துதவுமாறு கூட்டத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
அடுத்து வரும் தலைமுறை, மன்றம் குறித்து முழுமையாக அறிந்துகொள்ள இவ்வறிக்கைகள் உதவும் என்ற அடிப்படையில், அவற்றை மன்றத்தின் தகவல் சேகரிப்புப் பெட்டகத்தில் சேகரித்து வைக்கவுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
புதிய செயற்குழு தேர்தல்:
மன்றத்தின் நடப்பு செயற்குழுவின் பொறுப்புக் காலம் வரும் ஏப்ரல் மாதம் 12ஆம் தேதியுடன் நிறைவடைவதையொட்டி, புதிய செயற்குழுவைத் தேர்ந்தெடுப்பதற்கான வேட்பு மனு குறித்த அறிவிப்பு, வரும் மார்ச் மாதம் 01ஆம் தேதியன்று மன்றத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும், மார்ச் 30ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் எனவும் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டதோடு, மன்ற நிர்வாகத்தில் அனைத்து உறுப்பினர்களும் ஆவலுடன் பங்கேற்க வருமாறு கூட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்டது.
2012ஆம் வருடத்திற்கான ஆண்டறிக்கை:
2012ஆம் வருடத்திற்கான - மன்றத்தின் ஆண்டறிக்கை, அடுத்த செயற்குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
மார்ச் கூட்ட ஒருங்கிணைப்பாளர் நியமனம்:
அடுத்த (மார்ச் மாத) செயற்குழுக் கூட்டத்திற்கான ஒருங்கிணைப்பாளராக ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல் நியமிக்கப்பட்டார்.
விவாதிக்க வேறம்சங்களில்லா நிலையில், துஆவுடன் - 21.45 மணிக்கு கூட்டம் நிறைவுற்றது. அதனைத் தொடர்ந்து, அனைவருக்கும் இரவுணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்ற செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
[செய்தியில் சிறு திருத்தம் செய்யப்பட்டுள்ளது @ 10:07 / 13.02.2013] |