காயல்பட்டினம் சித்தன் தெருவிலுள்ள நியாய விலைக் கடையில் 09.02.2013 சனிக்கிழமை (நேற்று) மாலை 04.30 மணியளவில் மாவட்ட வழங்கல் அதிகாரி அ.பஷீர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அக்கடையில் பணிபுரியும் அலுவலர் வாடிக்கையாளர்களை ஒருமையில் பேசுவதாகவும், கடைக்கு பொருட்கள் வந்து ஒரு நாளிலேயே அனைத்தும் தீர்ந்துவிட்டதாகக் கூறுவதாகவும், இன்னும் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தும், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக்கிடம் அக்கடையின் பெண் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து முறையிட்டு வந்தனர். பின்னர் அவர் தெரிவித்ததன் அடிப்படையில், மாவட்ட வழங்கல் அதிகாரியை தொலைபேசி வழியே தொடர்புகொண்டு அவர்கள் முறையிட்டதன் பேரில் அவர் இந்த ஆய்வை மேற்கொண்டார்.
கடையிலுள்ள சரக்கு இருப்பு, விற்பனை கணக்கு உள்ளிட்ட பதிவுப் புத்தகங்களை ஆய்வு செய்த அவர், கடையில் ஒரே நேரத்தில் அனைவருக்கும் பொருட்களை வழங்குவதாலேயே இப்பிரச்சினை ஏற்படுவதாகவும், வாரந்தோறும் திங்கட்கிழமையன்று 001 முதல் 150 வரை எண்ணுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும், செவ்வாயன்று 151 முதல் 300 வரையுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும் என இந்த அடிப்படையில் வாரத்தின் முதல் ஐந்து நாட்களில் தினமும் 150 பேருக்கு பொருட்களை வழங்குவதை வழமையாக்கிக் கொள்ளுமாறும், இந்நாட்களைத் தவற விடுவோருக்கு, வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பொருட்கள் வழங்குமாறும் அவர் அலுவலருக்கு உத்தரவிட்டார்.
மண்ணெண்ணெய் வினியோகத்திற்கு மாதந்தோறும் கடைசி சனிக்கிழமை அல்லது சரக்கு வரும் காலத்தின் ஏதேனும் ஒரு சனிக்கிழமையைப் பயன்படுத்திக்கொள்ளுமாறும் அவர் கூறினார்.
பின்னர் வாடிக்கையாளர்களிடம் பேசிய அவர், பெரும்பாலும் அரசு அலுவலர்கள் ஈடுபாட்டுடன் தங்கள் பணியைச் செய்யாமல், கடமைக்காகவே செய்வதாகவும், பொதுமக்கள் அவரோடு எப்போதும் வாக்குவாதம் செய்துகொண்டிராமல், அவர்களின் சிரமங்களையும் புரிந்துகொண்டு செயல்பட்டால் இதுபோன்ற பிரச்சினைகள் பெரும்பாலும் இல்லாமலாகிவிடும் என்றும் கூறிச் சென்றார்.
இந்நிகழ்வின்போது, திருச்செந்தூர் வருவாய் ஆய்வாளர் (பொது வினியோகம்) சுப்பையா உடனிருந்தார். |