அபூதபீ காயல் நல மன்றத்தின், இம்மாதம் 10ஆம் தேதியன்று, காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனை வளாகத்தில் - பல் மற்றும் பொது மருத்துவ இலவச முகாம் நடத்தப்பட்டது. இம்முகாம் ஏற்பாடுகளுக்கு உதவியோருக்கு நன்றி தெரிவித்து, அபூதபீ காயல் நல மன்றத்தின் அனைத்து அங்கத்தினர் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருநாமம் போற்றி.
அபூதபீ காயல் நல மன்றம் மற்றும் KMT மருத்துவமனை இணைந்து நடத்திய பல் மற்றும் பொது மருத்துவ முகாம் வல்ல இறைவனின் அருளால் 10.02.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று நனிசிறக்க நடைபெற்று முடிந்தது, அல்ஹம்துலில்லாஹ்.
இம்முகாம் பற்றிய அறிவிப்பு கடந்த வெள்ளிக்கிழமை காயல் நகரில் உள்ள அனைத்து ஜும்ஆ பள்ளிகள் மற்றும் KMT மருத்துவமனையின் வெளிநோயாளிகள் பிரிவு மூலம் மக்களுக்கு நோட்டீஸ் மூலம் வெளியிடப்பட்டது. அதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பிருந்து காயல் நகர தொலைக்காட்சி சேனல்கள் மூலமும் இவ்வறிவிப்பு விளம்பரப்படுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மன்றத் தொடர்பாளரை 09.02.2013 சனிக்கிழமையன்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு 120 பேர் வரை பதிவு செய்துகொண்டனர். அதற்கு மேல் வந்த அழைப்பாளர்களின் பெயர்கள் போதிய நேரம் இருக்காது என்று கருதியதில் பதிவு செய்யப்படவில்லை. முகாமிற்கு நேரில் வந்து நேரமிருப்பின் கலந்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டது.
10.02.2013 ஞாயிற்றுக்கிழமை காலை குறித்த நேரமான காலை 09:00 மணிக்கு ஹாஃபிழ் N.S. அலீ முஹம்மது மீரா ஸாஹிப் அவர்களின் கிராஅத்தோடு முகாம் தொடங்கியது.
ஆரம்பத்தில் முடிவு செய்திருந்தபடி இரண்டு பல் மருத்துவர்கள் இரு குழுக்களாக செயல்படுவதில் ஏற்பட்ட நடைமுறை சிக்கலின் காரணத்தினால், இருவரும் இணைந்து ஒரு குழுவாகவே நோயாளிகளை கவனிக்கவேண்டியதாகியது.
அபூதபீ காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினரும் NMC மருத்துவமனையில் பல் மருத்துவ நிபுணராக பணி புரிந்துவருபவருமான Dr. ஹமீது யாஸிர் மற்றும் KMT மருத்துவமனையின் பல் மருத்துவ நிபுணர் Dr. அர்ச்சனா ஆகிய இருவரும் இணைந்து காலை 09:05 முதல் பிற்பகல் 01:45 வரை சுமார் 75 மக்களுக்கு அவர்களின் பற்களை பரிசோதித்து ஆலோசனைகளை வழங்கினார்கள்.
பல் மருத்துவ பரிசோதனையில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு மன்றத்தால் முன்னர் வெளியிடப்பட்ட மருத்துவ கையேடும், தரமான பல் துலக்கி (Tooth brush) ஒன்றும், பற்பசையும் (Tooth paste), மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பற்களுக்கிடையில் சுத்தம் செய்யும் நூல் (Dental floss) ஆகியவையும் இலவசமாக வழங்கப்பட்டன.
மற்றொரு பிரிவில், முகாமில் பங்குகொண்ட 77 பேருக்கு இரத்த சர்க்கரை, இரத்த அழுத்தம், உடற்கூறு அளவு (Body Mass Index) ஆகிய சோதனைகளும், தமது இரத்த பிரிவினை அறியாதோருக்கு இரத்தப்பிரிவு (Blood Group) அறியும் சோதனையும் நடத்தப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டன.
எல்லா பரிசோதனை முடிவுகளும் ஒரு முடிவு அட்டையில் (Report Card) பதியப்பட்டு அவரவருக்கு வழங்கப்பட்டது. இவ்வட்டையில் வாயை பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகளும், உயர் இரத்த அழுத்தம் பற்றிய குறிப்புகளும் பதியப்பட்டிருந்தது.
ஆரம்பமாக இம்முகாமை நாங்கள் எதிர்பார்த்ததைவிட நன்முறையில் நடத்தி முடிக்க சக்தி தந்த வல்ல அல்லாஹ்விற்கு நாங்கள் எங்களின் நன்றிகளை உரித்தாக்குகிறோம்.
அடுத்து, இம்முகாமிற்கு அனைத்து உதவிகளையும் வழங்கிய KMT மருத்துவமனை நிர்வாகிகளுக்கும், முகாமில் KMT சார்பில் பங்கு கொண்ட அதன் மேலாளர் ஜனாப் அப்துல் லத்தீஃப் அவர்கள், மருத்துவர் அர்ச்சனா அவர்கள், லேப் பொறுப்பாளர், உதவியாளர்கள் மற்றும் அனுசரணை வழங்கிய தம்பி மெடிக்கல்ஸ் அனைவருக்கும் எம் மன்றத்தின் சார்பில் உள்ளார்ந்த நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறோம்.
இம்முகாமிற்கான வேலைகள் தொடங்கிய ஆரம்ப நிலை முதலே எங்களுக்கு எல்லாவிதத்திலும் அறிவுறைகளை வழங்கி, தம் உடலுழைப்பையும் பொருள்களையும் தந்துதவிய தாருத்திப்யான் நெட்வர்க் அமைப்பாளர் ஜனாப் S.K. ஸாலிஹ் அவர்களுக்கும், அவர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு முகாமில் அயராது பணியாற்றிய - எஸ்.எம்.எஸ்.மஹ்மூத் சுல்தான், பி.எம்.ஏ.அப்துல் ஹமீத், ஆர்.சுலைமான் ஃபயாஸ், ஏ.ஓ.அதாஉர் ரஹ்மான், ஹாஃபிழ் எச்.எல்.இஸ்ஸத் மக்கீ, எஸ்.எஸ்.ஜெய்னுல் ஆப்தீன் இம்ரான், விளக்கு எம்.ஏ.முஹம்மத் சுலைமான் ஆகிய இளவல்கள் 7 பேருக்கும் எமது சிறப்பு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த முகாம் குறித்த விபரங்களை தொலைக்காட்சி சேனல்கள் வழியாக விளம்பரம் செய்த அவற்றின் நிர்வாகத்தினருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வல்ல அல்லாஹ் எங்களது சிறிய முயற்சியை ஏற்றுக்கொள்ளவும், இதுபோன்று மென்மேலும் இதை விட சிறப்பான சேவைகளை காயல் நகர மக்களுக்கு நாங்கள் செய்திட அருள வேண்டுமெனவும், எங்கள் தொழில் துறைகளில் நாங்கள் வெற்றி பெறவும் நீங்கள் அனைவரும் எங்களுக்காக பிரார்த்திக்கவும்.
இவ்வாறு, அபூதபீ காயல் நல மன்றத்தின் அனைத்து அங்கத்தினர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.E.முகியதீன் அப்துல் காதிர்
செய்தித் துறை பொறுப்பாளர்
காயல் நல மன்றம்
அபூதபீ - ஐக்கிய அரபு அமீரகம் |