வங்கிகள் தனியார் மயம், விலைவாசி உயர்வு, புதிய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்டவற்றை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக புதன், வியாழன் (பிப்ரவரி 20, 21) ஆகிய இரு நாட்கள் (48 மணி நேரம்) நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
இந்தப் போராட்டத்தில் 25 கோடி பேர் பங்கேற்பார்கள் என்று தொழிற்சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நாடு தழுவிய 2 நாள் வேலைநிறுத்தம் போராட்டத்தை 11 தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று தொடங்கின. இநதப் போராட்டத்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இயல்பு வாழ்க்கையில் எந்தவித பாதிப்பும் இல்லை. பஸ்கள் வழக்கம் போல ஓடுகின்றன.
விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும், அனைத்து வேலைகளிலும் தொழிலாளர் நலச் சட்டங்களை தீவிரமாக அமல்படுத்த வேண்டும், முறைப்படுத்தப்படாத பிரிவு தொழிலாளர்களுக்கு பணிப் பாதுகாப்பும், சமூகப் பாதுகாப்பும் கிடைக்க வகை செய்ய வேண்டும், அரசுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பதை நிறுத்த வேண்டும், குறைந்தபட்ச கூலியை மாதம் ரூ. 10,000 என்று உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. வங்கி ஊழியர்கள் 90 சதவீதம் பேர் பணிக்கு வரவில்லை. இதனால் காசோலை பரிமாற்றம் உள்ளிட்ட வங்கி பணிகள் பாதிக்க்பட்டுள்ளன. இதுபோல் தபால் நிலையத்திலும் 100சதவீதம் பேர் பணிக்கு செல்லவில்லை. இதனால் தபால் நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
மாவட்ட ஆட்சியர் அலுவலம், தாலுகா அலுவலகங்களிடில் 30 சதவீதம் பேர் பணிக்கு செல்லவில்லை. பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள் 60 சதவீதம் பேரும், சத்துணவு ஊழியர்கள் 15 சதவீதம் பேரும் பணிக்கு செல்லவில்லை. தூத்துக்குடி துறைமுகத்தில் 5 சதவீதம் ஊழியர் ஸ்டரக்கில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பணிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை.
கோவில்பட்டியில் சிபிஎம் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் கேபி பெருமாள் தலைமையில் ரயில் மறியல் பேராட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட 37 பேரை போலீசார் கைது செய்தனர். ஆட்டோக்கள் 10 சதவீதம் இயங்க வில்லை. காயல்பட்டினத்தில், அரசு வங்கிகள் இயங்கவில்லை.
தகவல் உதவி:
தூத்துக்குடி ஆன்லைன் |