நிர்ணயிக்கப்பட்ட கேபிள் டிவி கட்டணத்தை விட கூடுதல் தொகை கேட்டால் அது குறித்த புகாரினை தெரிவிக்கலாம் என்றும், மாத கட்டணத்தை நேரடியாக அரசுக்கு செலுத்தும் புது வழிமுறையும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அரசு செய்திக்குறிப்பு தெரிவிப்பதாவது:
குறைந்த கட்டணத்தில் நிறைவான கேபிள் டிவி சேவையை பொது மக்களுக்கு வழங்கும் உயரிய நோக்கத்துடன் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு புத்துயிரூட்டி கடந்த 02.09.2011 அன்று ஒளிபரப்பு சேவையை துவக்கி வைத்து, தமிழகம் முழுவதும் கேபிள் டிவி சேவையினை மாதம் ரூ.70/- என்ற கட்டணத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வழங்கும் என அறிவித்தார்கள்.
அதன்படி, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், கேபிள் டிவி சேவையை அளித்து வருகிறது. சில கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் பொதுமக்களிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட சந்தா தொகையை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வரப்பெற்றுள்ளன.
எனவே, பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கேபிள் டிவி சேவைக்கான மாதச் சந்தாத்தொகை ரூ.70/-ஐ 01.03.2013 முதல் பின்வரும் முறைகளில், ஏதேனும் ஒரு முறையில் செலுத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
• தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு நேரடியாக ஆன்லைன் முறையில் www.arasucable.com என்ற இணையதளத்தின் வழியாக செலுத்துதல்.
• அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாக செலுத்துதல்
இது தவிர, தற்போதுள்ள நடைமுறைப்படி கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மூலமாகவும் செலுத்தலாம். இதன் மூலம் பொது மக்கள் மாதக் கட்டணமான ரூ.70/-ஐ மட்டும் செலுத்தி கேபிள் டிவி சேவையினைப் பெற்று பயனடையலாம்.
கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் ரூ.70/-க்கும் கூடுதலாக மாதச் சந்தாத்தொகை வசூலித்தால், பொது மக்கள் இது குறித்து மாவட்டத்தில் உள்ள கேபிள் டிவி துணை மேலாளரிடம் புகார் அளிக்கலாம் என தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. து. விவேகானந்தன், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி - மக்கள் தொடர்புத் துறை,
சென்னை - 9. |