ஆங்கில வழிக் கல்வியின் மீது பொதுமக்களுக்குள்ள தொடர் மோகத்தின் காரணமாக, அரசு பள்ளிகளில் - குறிப்பாக அரசு துவக்கப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து காணப்படுகிறது.
காயல்பட்டினத்தில் எல்.கே.எஸ். ஜுவல்லர்ஸ் எஜுகேஷனல் ட்ரஸ்ட் சார்பில் எல்.கே.துவக்கப் பள்ளிகள் - காயல்பட்டினம் விசாலாட்சியம்மன் கோயில் தெருவிலும், ஸீ-கஸ்டம்ஸ் சாலை - தீவுத்தெரு சந்திப்பிலும் என இரண்டு இடங்களில் நடைபெற்று வந்தது.
மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்ததையடுத்து, ஸீ-கஸ்டம்ஸ் சாலை - தீவுத்தெரு சந்திப்பில் அமைந்திருந்த பள்ளியின் இயக்கம் நின்று போனது. அங்கு எஞ்சியிருந்த மாணவர்கள், அருகிலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
விசாலாட்சியம்மன் கோயில் தெருவில் அமைந்திருந்த எல்.கே.துவக்கப்பள்ளி (தாமரை ஸ்கூல்) எதிரில், எல்.கே.மேனிலைப்பள்ளியின் மேல்நிலை - அறிவியல் பிரிவு வகுப்பறைகளும், ஆய்வுக் கூடமும் செயல்பட்டு வருகிறது. எல்.கே.மேனிலைப்பள்ளியின் இரண்டு கட்டிடங்களும் ஒரே இடத்தில் அமைந்தால் நிர்வகிப்பதற்கு வசதியாக இருக்கும் என்று கருதிய பள்ளி நிர்வாகம், விசாலாட்சியம்மன் கோயில் தெருவில் அமைந்திருந்த எல்கே.துவக்கப்பள்ளியை எல்.கே.லெப்பைத்தம்பி சாலைக்கும், ஏற்கனவே எல்.கே.லெப்பைத்தம்பி சாலையில் இயங்கி வந்த எல்.கே.மேனிலைப்பள்ளியை விசாலாட்சியம்மன் கோயில் தெருவிற்கும் (தாமரை ஸ்கூல்) மாற்றியது.
காயல்பட்டினம் எல்.கே.லெப்பைத்தம்பி சாலையில் அமைந்துள்ள எல்.கே. துவக்கப் பள்ளியின் ஆண்டு விழா 19.02.2013 செவ்வாய்க்கிழமையன்று (நேற்று) காலை முதல் மாலை வரை, பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளி ஆட்சிக்குழு துணைத்தலைவர் ஹாஜி எஸ்.எம்.உஸைர் விழாவிற்குத் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ், நிர்வாகக் குழு உறுப்பினர்களான ஹாஜி எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா, எல்.கே.லெப்பைத்தம்பி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி மாணவர் நவ்ஃபல் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, பள்ளி தலைமையாசிரியர் என்.பீர் முஹம்மத் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பின்னர், பள்ளி நிறுவனர் - காலஞ்சென்ற ஹாஜி எல்.கே.லெப்பைத்தம்பி அவர்களை நினைவுகூரும் பாடல் பாடப்பட்டது.
பின்னர், பள்ளி மாணவ-மாணவியரின் பங்கேற்பில் - நாட்டுப்புற மற்றும் திரைப்படப் பாடல்களுக்கு நடனம், பாடல், பாலர் பாடல் (ரைம்ஸ்), அறிவியல் வினாடி-வினா, மாறுவேடம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், போட்டிகளும் நடைபெற்றன.
பின்னர், விழாத் தலைவரும், பள்ளியின் துணைத்தலைவருமான ஹாஜி எஸ்.எம்.உஸைர் தலைமையுரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, அண்மையில் நடத்தப்பட்ட போட்டிகளிலும், ஆண்டு விழா நாளன்று நடத்தப்பட்ட நடனம், மாறுவேடப் போட்டிகளிலும் வென்ற, பங்கேற்ற அனைத்து மாணவ-மாணவியருக்கும், மர்ஹூம் எஸ்.ஓ.ஹபீப் ஹாஜியின் பேரன் ஹாரூன் ரஷீத் அனுசரணையில் பரிசுகள் வழங்கப்பட்டன. மேடையில் முன்னிலை வகித்தோர் பரிசுகளை வழங்கினர்.
பள்ளி ஆசிரியர் எம்.ஊமைத்துரை சாமுவேல் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. இவ்விழாவில், பள்ளியின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவியர் மற்றும் பெற்றோர் திரளாகக் கலந்துகொண்டனர்.
நேற்று நடைபெற்ற ஆண்டு விழா, பல ஆண்டுகளுக்குப் பின் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன் |