தாய்லாந்து காயல் நல மன்றம் - தக்வா அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட பொதுக்குழுக் கூட்டத்தில், அம்மன்றத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்பட்டுள்ளதுடன், நகர்நலப் பணிகள் பலவற்றுக்கு செயல்திட்டங்கள் வகுத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் அதன் செயலாளர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளால் எமது தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் 12Mவது ஆண்டின் துவக்கம் மற்றும் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் 17.02.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில், பாங்காக் ஜெம் ஹவுஸ் இல்லத்தில், மன்றத் தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் தலைமையில் நடைபெற்றது.
காவாலங்கா மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஹாஜி ஒத்தமுத்து எம்.ஏ.மீரா ஸாஹிப், ஹாங்காங் ஹோலி ட்ரேடர்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் கத்தீபு கே.ஏ.ஜெ.மீரா சாஹிபு ஆகியோர் இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
கூட்ட நுழைவாயிலில் உறுப்பினர்களின் விபரங்கள் துவக்கமாக பதிவு செய்யப்பட்டது.
ஹாஃபிழ் எம்.எம்.ஷேக் சதகதுல்லாஹ் கிராஅத் ஓதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். எம்.ஏ.அபுல் ஹசன் ஷாதுலி ஆலிம் பாசி சிறப்பு விருந்தினர் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
தலைமையுரை:
பின்னர், மன்றத் தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் தலைமையுரையாற்றினார். அவரது உரைச் சுருக்கம் வருமாறு:-
21 உறுப்பினர்களுடன் 12 வருடங்களுக்கு முன்னர் “காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை” என்ற பெயரில் துவங்கப்பட்ட இம்மன்றம் இன்றைக்கு சுமார் 60 உறுப்பினர்களுடன் ஒரு சிறந்த மன்றமாக விளங்கிவருகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.
12 வருடங்களில் உறுப்பினர்கள் எண்ணிக்கையில் பெரிய ஏற்றம் ஏற்படவில்லை.
சிங்கப்பூர் மன்றம் போன்று நம்மூர் இளைஞர்களுக்கு தொழில் மற்றும் அதிக வேலை வாய்ப்பை இங்கு ஏற்படுத்தும் முயற்சியில் உறுப்பினர்கள் முயலவேண்டும்.
இங்குள்ள ஜுவல்லரி டிரேட் சென்டரில் கடைகள் பலரும் திறக்கிறார்கள். நம்மவர்களும் அதிக எண்ணிக்கையில் திறக்க வேண்டும், அதன் உரிமையாளர் என்னுடைய நெருங்கிய நண்பராக இருப்பதால் நான் பரிந்துரைச் செய்யும் நபர்களுக்கு உடன் கடை தருகிறார். நம் ஊர் சகோதரர்களும் மற்ற ஊர் காரர்களும் கடைகள் எடுத்து வியாபாரம் செய்து வருகின்றனர். நம் ஊர் மக்கள் மேலும் அதிக எண்ணிக்கையில் கடைகள் திறந்தால் அதன் மூலமும் வேலை வாய்ப்பு அதிகரிக்க வாய்ப்புண்டு. எனவே, தேவையுடையவர்கள் என்னை அணுகும் படி கேட்டுக் கொள்கிறேன்...
இவ்வாறு, ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் உரையாற்றினார்.
சிறப்பு விருந்தினர்கள் உரை:
அடுத்து சிறப்பு விருந்தினர்கள் உரையாற்றினர். துவக்கமாக ஹாஜி ஒத்தமுத்து மீரா ஸாஹிப் உரையாற்றுகையில்,
தொன்று தொட்டு நம் ஊர் மக்கள் உலகில் எங்கு சென்றாலும் வணிகத்திலும், நடத்தையிலும் நாணயம், நம்பிக்கையுடன் நடந்ததுடன் மார்க்கப் பிடிப்புடனும், அவர்கள் வாழ்ந்து வந்த இடங்களில் பள்ளி, ஜாவியா, தைக்கா, என சமுதாயக் கூடங்களும் அமைத்து மக்களுக்கு நல்லொழுக்கத்ததையும் கற்பித்து நற்பணிகளையும் சிறப்பாக ஆற்றியுள்ளனர்.
ஒரு காலத்தில் இலங்கை முழுவதும் நம் ஊர் மக்கள் பரவியிருந்து பல்வேறு தொழில்கள் செய்துள்ளனர். மாணிக்கம், நகை கடைகள்,மளிகை, துணிக் கடைகள், ரப்பர், தேங்காய், தேயிலை, ஏலம், மிளகு என பல வணிகங்களும், தரை வழி மற்றும் கடல் வழி பயணிகள் போக்குவரத்து சேவை, சரக்குகள் போக்குவரத்து சேவை, இத்துடன் மார்க்கப் பணிகள் என பலதரப்பட்ட சேவைகள் செய்து பல இடங்களில் பள்ளிவாயில்கள் உருவாக உறுதுணையாக இருந்துள்ளனர்.
கொழும்பிலுள்ள சம்மாங்கோட்டை பள்ளி உருவாவதில் நம் ஊர் முன்னோர்களின் பங்களிப்பு பெரிய அளவில் இருந்துள்ளது என்பதற்கான சான்றுகள் இன்றும் அங்கு பாதுகாக்கபட்டு வருகின்றது,மேலும் அங்குள்ள நிர்வாகத்தில் நம் முன்னோர்கள் முக்கியமான பொறுப்பில் இருந்திருக்கிறார்கள், இப்போதும் இருந்து வருகிறார்கள் என்பதைப் பார்க்கும் போது பூரிப்பாக உள்ளது.
இதே போன்றே ஆந்திரா, ஒரிசா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்கள், தமிழகத்தில் பல நகரங்களில் வாழ்ந்த நம் முன்னோர்களும் தொழிலில் நேர்மை,நம்பிக்கையுடன் இருந்து, அந்தந்த ஊர்களிலும் பொதுச் சேவைகள் செய்து பள்ளிவாசல் அமைத்திருப்பது, சென்னை, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோயில் போன்ற நகரங்களில் நம் ஊர் மக்கள் தங்க முத்துச்சாவடிகள் அமைத்திருப்பது என்று நிறைய சொல்லலாம்.
அதே அடிச்சுவட்டில் வந்த நீங்களும் அடி பிசகாமல் அந்த நற்பண்புகளை தாய்லாந்து நாட்டில் நிலை நாட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
இங்கு பேங்காக்கிலும் ஒரு பிரமாண்டமான பள்ளியை உருவாக்குவதில் நமது ஊர் மக்களின் பங்களிப்பும் கணிசமாக இருந்துள்ளது. தற்போது என் அன்புத் தோழர் வாவு ஷம்சுத்தீன் ஹாஜி இங்குள்ள பள்ளிக்கும், பல மாவட்டங்களை சேர்ந்த தாய்லாந்து தமிழ் முஸ்லிம் சங்கத்திற்கும் தலைவராக இருப்பது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது.
உலக அளவில் உருவாகியிருக்கும் காயல் நல மன்றங்கள் நம் நகருக்கு நிறைய பயன் தரும் பணிகளை செய்து வருகின்றன. தக்வாவின் மூலம் நீங்கள் செய்யும் சேவைகளை ஊடகங்கள் மூலமாகவும், ஊரில் நேரிலும் காண்கிறேன். ரொம்ப அழகாகச் செய்கிறீர்கள், பாராட்டுக்கள்.
இதே கட்டுக் கோப்போடு, ஒற்றுமையோடு சென்றீர்கள் என்றால் மேலும் நிறைய செய்ய முடியும். கூட்டமைப்பு என்று வரும் போது சிற்சில கருத்து வேறுபாடுகள் வரலாம் அதில் கவனம் செலுத்தாது ஆக்கப் பணிகளில் ஆர்வமாக இருங்கள். நேர்மை,நாணயம்,நம்பிக்கையாக வாழ்ந்து நம் மார்க்கத்திற்கும், நம் ஊருக்கும், நம் பெற்றோர்களுக்கும் பெருமை சேருங்கள்.
கூட்டத்தில் பேசி பழக்கமில்லாத என்னை பேச வாய்ப்புக் கொடுத்ததற்கு தக்வாவிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்...
இவ்வாறு, ஹாஜி ஒத்தமுத்து மீரா ஸாஹிப் பேசினார்.
அவரைத் தொடர்ந்து, மற்றொரு சிறப்பு விருந்தினரான கத்தீபு கே.ஏ.ஜெ.மீரா ஸாஹிப் உரையாற்றுகையில்,
என் தந்தை மர்ஹூம் ஹாஜி கத்தீபு அப்துல் ஜலீல் அவர்கள் சொல்வார்கள் ‘யாம் பெற்ற செல்வம் எம் உற்றார் உறவினர்,பெற வேண்டும் என்ற சிந்தனை நம் ஊர் மக்களிடம் தொன்று தொட்டே உள்ள நற்குணம் ஆகும்.
அன்றைய காலத்தில் வருமானம் மிகக் குறைவு. அவர்கள் ஈட்டும் சொற்ப தொகையையும் முழுவதுமாக தம் வீட்டிற்கு மட்டும் அனுப்பி விடாது ஒவ்வொரு மாதமும் தம் உறவினர்கள், நெருக்கமானவர்கள் என்று பலருக்கும் அனுப்புவார்கள் என்று சொல்வார்கள். அந்த வழியில் வந்த நாம் இன்றும் அதே வழிமுறையைப் பின்பற்றி நம் மக்களுக்காக பல நன்மையான பணிகளைச் செய்து வருவதைப் பார்க்கையில், உலகத்தில் எவ்வளவோ மாற்றம் வந்துவிட்டபோதிலும் நம் ஊர் மக்களிடத்தில் உறவினர்க்கு உதவுதல் என்ற பண்பாடு உதிரத்தில் உறைந்து விட்ட ஒன்று என்றே தெரிகிறது. இந்தப் பண்பாடு மிகவும் அருமையானது.
பல நாடுகளிலும், பல ஊர்களிலும் உள்ள காயல் மன்றத்தினர்கள் நம் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும், ஏது செய்ய வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சென்ற சில தினங்களுக்கு முன் நான் ஊர் போய் இருந்த நேரத்தில், பெண்களுக்கான புற்று நோய் கண்டறிதல் முகாமை மிக குறைந்த கட்டணத்தில் அமெரிக்காவிலிருந்து வந்த ஒரு மருத்துவக் குழுவினர் கே.எம்.டி.மருத்துவமனையில் டாக்டர் அஷ்ரஃப் அவர்களின் பரிந்துரையில் நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தேன்.
ஆக, பிறருக்கு உதவுதல் என்ற பண்பு உலகத்தில் சுருங்கிவிட்டாலும் நம் காயல் நகர மக்களிடத்தில் பெருகி உள்ளது என்பதுதான் உண்மை. அது நம் முன்னோர்கள் இட்ட வித்து. வாழையடி வாழையாக தொடர்ந்துக் கொண்டே இருக்கும். அந்த வாழையின் ஒரு கிளையாகத்தான் தக்வாவை நான் காண்கிறேன். பாராட்டுக்கள்,
இம்மன்றம் மேலும் வளர வாழ்த்துகிறேன்...
இவ்வாறு, கத்தீபு கே.ஏ.ஜெ.மீரா ஸாஹிப் பேசினார்.
வரவு-செலவு கணக்கறிக்கை:
பின்னர், மன்றத்தின் வரவு - செலவு மற்றும் நிதிநிலை அறிக்கைப் பிரதிகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. மன்றப் பொருளாளர் என்.எஸ்.ஹனீபா, 2012ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு மற்றும் நிதி நிலை அறிக்கையை வாசிக்க, குறுக்கு விசாரணைகளுக்குப் பின், கூட்டம் அவற்றை ஒருமனதாக அங்கீகரித்தது.
ஆண்டறிக்கை:
அடுத்து, மன்றத்தின் 2012ஆம் வருடத்திற்கான ஆண்டறிக்கைப் பிரதிகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. மன்றச் செயலாளர் எம்.எஸ்.செய்யித் முஹம்மத் ஆண்டறிக்கையை கூட்டத்தில் வாசித்தார்.
புதிய நிர்வாகிகள் தெரிவு:
பின்னர் புதிய நிர்வாகிகள் மற்றும் செயற்குழுவினர் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டனர். புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள மன்ற நிர்வாகிகள் வருமாறு:-
தலைவர்:
ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன்
துணைத்தலைவர்கள்:
(1) ஹாஜி டபிள்யு.எம்.ஏ.எஸ்.ஷாஹுல் ஹமீத்
(2) மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.அபுல் ஹசன் ஷாதுலீ ஃபாஸீ
செயலாளர்:
ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத்
துணைச் செயலாளர்கள்:
(1) எம்.ஐ.அப்துல் வஹ்ஹாப்
(2) எம்.எச்.அபுல் மஆலி
பொருளாளர்:
என்.எஸ்.ஹனீபா
துணைப் பொருளாளர்கள்:
(1) எஸ்.ஏ.ஆர்.முஹம்மத் யூனுஸ்
(2) எம்.ஐ.முஹம்மத் நூஹ்
செயற்குழு உறுப்பினர்கள்:
(01) ஹாஜி வாவு எம்.எம்.உவைஸ்
(02) எம்.ஏ.சி.செய்யித் இப்ராஹீம்
(03) ஹாஜி டபிள்யு.ஏ.எஸ்.முஹம்மது அலீ
(04) ஹாஜி எம்.ஏ.மீரா ஸாஹிப்
(05) ஹாஜி ஆர்.காஜா நவாஸ்
(06) ஹாஜி W.M.S. ஜபருல்லாஹ்
(07) பஜ்லுள் கரீம்
(08) என்.எஸ்.ஷேக்
(09) எம்.பி.ஷேக்
(10) எஸ்.ஏ.கே.லெப்பை தம்பி
(11) டபிள்யு.எம்.என்.காதிர் ஸாஹிப்
(12) கம்பல்பக்ஷ் ஏ.எஸ்.அஹ்மத் இர்ஃபான்
இவ்வாறு நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர்.
பின்னர் நடந்த கலந்துரையாடலின்போது கீழ்கண்டவாறு, நகர்நலப் பணிகள் பலவற்றுக்கு நிதியொதுக்கீடு செய்தும், செயல்திட்டங்கள் வகுத்தும், பின்வருமாறு ஏக மனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - தீவுத்தெரு துவக்கப்பள்ளியில் பராமரிப்புப் பணி:
காயல்பட்டினம் தீவுத்தெருவில் அமைந்துள்ள திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலுள்ள சில வகுப்பறைகளின் தரை மிகவும் சேதமுற்றுள்ளதைக் கருத்திற்கொண்டு, முறையான அனுமதி பெற்று, அவற்றை சரிசெய்துகொடுக்க இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 2 - கடற்கரை முஹ்யித்தீன் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்:
காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் - கடற்கரை முஹ்யித்தீன் பள்ளிக்கு, அப்பகுதி மக்கள் பொருளாதாரத்தில் மிகவும் நலிவுற்றுள்ளதைக் கருத்திற்கொண்டு, சிறப்புத் திட்டமாக, குடிநீர் சுத்திகரிப்பு (RO Process) கருவி ஒன்றை மன்றத்தின் சார்பில் அன்பளிப்பாக வழங்க இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 3 - வாகன விபத்துகளைத் தவிர்க்க குவி விழி கண்ணாடி:
பெரிய வாகனங்கள் அதிகம் செல்லும் காயல்பட்டினம் பிரதான வீதியின் திருப்பங்களில் விபத்துக்களைத் தவிர்க்கும் பொருட்டு, அந்தந்த வார்டு உறுப்பினர்கள் மூலம் நகராட்சியின் அனுமதி பெற்று, தேவையான குவிவிழிக் கண்ணாடி (Convex Mirror) அமைத்துக் கொடுக்க இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 4 - நூலகங்களுக்கு பயனுள்ள நூல்கள் அன்பளிப்பு:
காயல்பட்டினம் நகரிலுள்ள ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களின் ஆலோசனைகளைப் பெற்று, நகர மாணவ சமுதாயம் பயனடையும் பொருட்டு, அரிய தகவல்களைக் கொண்ட பயனுள்ள நூற்களை ஆண்டுச் சந்தா அடிப்படையில் நகர நூலகங்களுக்கு வழங்கி அனுசரணையளிக்க இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 5 - KEPAவுக்கு ஆதரவு:
KEPA தன் அறவழி மற்றும் சட்டப் போராட்டங்களை மேலும் வீரியமாகச் செய்யுமாறு மன்றத்தின் சார்பில் வேண்டுகோள் விடுப்பதுடன், உதவி ஒத்தாசைகள் தேவைப்படின் எம் மன்றத்தை அணுகுமாறு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 6 - விளையாட்டில் மாநில அளவில் முதலிடம் பெற்ற எல்.கே.மேனிலைப்பள்ளிக்கு பாராட்டு:
மாநில அளவில் நடந்த ஜூனியர் கால்பந்துப் போட்டியில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப் பள்ளி அணி வெற்றி பெற்று, தமிழகத்திலேயே முதன்மையாக வந்ததற்கு மன்றத்தின் சார்பிலும், மன்றத்திலுள்ள - எல்.கே.மேனிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சார்பிலும், வெற்றி பெற்ற அணியினருக்கும், பள்ளிக்கும், வெற்றி பெற பெரிதும் உறுதுணையாக இருந்த தலையாசிரியர் ஜனாப் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா, உடற்கல்வி ஆசிரியர்களான திரு. வேலாயுதம், ஜனாப் ஜமால், ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர் திரு. ஜெபராஜ், அயராது பயிற்சியளித்த ஜனாப் ஹிட்லர் சதக்கத்துல்லாஹ் ஆகியோருக்கு இக்கூட்டம் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறது.
இந்த வெற்றிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு, எம் மன்றத்தின் துணைத்தலைவர் எம்.ஏ.சி.செய்யித் இப்றாஹீம் அவர்கள், தனது தந்தை ஹாஜி தங்ஙள் அப்துல் காதிர் அவர்கள் மூலம் ஊக்கப்பரிசு அளித்ததையும் இக்கூட்டம் மகிழ்வுடன் நினைவுகூர்கிறது.
விளையாட்டில் தமிழகத்தில் முதல் அணியாக வந்ததைப் போன்று, வரவிருக்கின்ற தேர்விலும் தமிழகத்திலேயே முதன்மை மாணவராக காயல் மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்திட, நகரின் அனைத்துப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவியரையும் எம் மன்றம் மனதார வாழ்த்துகிறது.
தீர்மானம் 7 - சந்தா நிலுவையில்லாதோர் மட்டுமே செயற்குழுவிற்குத் தேர்வு:
இந்த ஆண்டிலிருந்து சந்தா நிலுவை இல்லாத உறுப்பினர்களை மட்டுமே செயற்குழுவுக்குத் தேர்வு செய்யவும், பாங்காங் தமிழ் முஸ்லிம் சங்கத்திற்கும், நிர்வாகத்திற்கும் நமதூர் - காயல்பட்டினம் ஒதுக்கீட்டில் பரிந்துரை செய்யவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இறுதியாக எம்.எச்.புகாரீ நன்றி நவில, ஹாஃபிழ் அமீர் சுல்தான் துஆவுக்குப் பின், கஃப்பாராவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில், மன்றத்தின் 60க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
எம் மன்றத்தின் மூத்த உறுப்பினர் சகோதரர் எல்.எஸ்.ஹாமித் அவர்கள், மகன் வழிப் பேரன் கிடைத்த மகிழ்வில், கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் சுவையான பிரியாணி, சிக்கன் 65, ரோஸ் மில்க் உணவுப் பதார்த்தங்களுடன் விருந்துபசரிப்பு செய்தார்.
அனைத்து நிகழ்வுகளும் நிறைவுற்ற பின்னர், புதிய உத்வேகத்துடன் உறுப்பினர்கள் வசிப்பிடம் திரும்பினர்.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்து லில்லாஹ்!!!
இவ்வாறு, தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் சார்பில், அதன் செயலாளர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
படங்கள் & பதிவேற்றத்தில் உதவி:
W.M.N. காதர் சாஹிப்
S.A.R. யூனுஸ்
S.M. மிஸ்கீன் சாஹிப் ஜஹீர் |