நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரையை ஏற்று நாடு தழுவிய அளவில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும்...
இந்தியா முழுவதும் முழுமையான மது விலக்கை அமல்படுத்த வேண்டும்...
நீண்ட கால விசாரணை சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்...
என்ற முப்பெரும் கோரிக்கை களை வலியுறுத்தி, வரும் ஏப்ரல் மாதம் 02ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று, தமிழகத்தின் மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு பேரணிகளை நடத்துவது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுக்குழுக் கூட்டம் இம்மாதம் 16ஆம் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் மதியம் 14.30 மணி வரை திண்டுக்கல் பேகம்பூர் மதுரை ரோட்டில் உள்ள வி.வி.ஆர்.காம்ப்ளக்ஸ் மதீனா பேலஸ் திருமண மஹாலில் நடைபெற்றது.
அக்கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் மவ்லானா கே.கே.ஓ.சுலைமான் மன்பஈ இறைமறை ஓதி, நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.
பின்னர் இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மவ்லவீ ஏ.எஸ்.எம்.முஹம்மது ஹாரூன் தாவூதி துஆ ஓதினார்.
வரவு - செலவு, ஆண்டறிக்கை சமர்ப்பித்தல்:
10-9-2009 முதல் 11-2-2013 வரையிலான இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில செயல்பாடுகள் குறித்த அறிக்கையை, மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கரும், 11.09.2010 முதல் 31.12.2012 வரையிலான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில வரவு - செலவு அறிக்கையை பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜஹான் ஆகியோர் சமர்ப்பிக்க, கூட்டம் அவற்றை ஒருமனதாக அங்கீகரித்தது.
சட்டதிட்ட துணைவிதி குழு:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்ட திட்டங்களை தமிழில் மொழிபெயர்க்க மாநில செயலாளர் வழக்குரைஞர் வெ.ஜீவகிரிதனை அமைப்பாளராகக் கொண்டு, மாநில துணைத் தலைவர் வடக்குகோட்டையார் வ.மு.செய்யது அஹமது, தி டைம்ஸ் ஆஃப் லீக் துணை ஆசிரியர் பேராசிரியர் கே.டி.கிஸர் முஹம்மது ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. ஒரு மாத காலத்திற்குள் இப்பணியை நிறைவு செய்யுமாறு அவர்களிடம் கூட்டம் வேண்டுகோள் விடுத்தது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில கிளைக்கு சட்ட திட்ட துணை விதிகள் தயாரிப்பதற்கு மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜஹானை அமைப்பாளராகக் கொண்டு, அக்கட்சியின் மூத்த தலைவர் எழுத்தரசு ஏ.எம்.ஹனீப், மாநிலச் செயலாளர்கள் நெல்லை அப்துல் மஜீத், காயல் மகபூப், நெல்லை மாவட்டத் தலைவர் எம்.எஸ்.துராப்ஷா, நாகை வடக்கு மாவட்டத் தலைவர் கிளியனூர் அபுல்ஹசன், சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் கம்பம் சாகுல் ஹமீது ஆகியோரடங்கிய குழு அமைக்கப்பட்டது.
முஸ்லிம் யூத் லீக் - முஸ்லிம் மாணவர் பேரவை:
மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் மார்ச் 02, 03 தேதிகளில் நடைபெறவுள்ள முஸ்லிம் யூத் லீக் தேசிய பிரதிநிதிகள் மாநாட்டிற்கு தமிழ்நாட்டிலிருந்து பிரதிநிதிகளை அனுப்பி வைப்பது என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பிப்ரவரி 9, 10 தேதிகளில் நடைபெற்ற முஸ்லிம் மாணவர் பேரவை சென்னை மண்டல பயிலரங்கில் நிறைவேற்றப்பட்ட, `கல்விக் கடனை எளிமைப் படுத்த வேண்டும், மாணவர் கல்விக் கடனுக்கான வட்டியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், மாவட்ட தலைநகரங்களில் சிறுபான்மை மாணவர்களுக்கு விடுதிகள் அமைக்கப்பட வேண்டும், பயங்கரவாதம், மது, பாலியல் வன்கொடுமை, திரைப்பட தீவிரவாதம் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டுவிடாமல் இளைய சமுதாயத்தைக் காப்பதற்கு எம்.எஸ்.எஃப். விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளுதல் - ஆகிய தீர்மானங்களை இக்கூட்டம் அங்கீகரித்தது.
பின்னர், அனைத்து மாவட்டங்களின் சார்பிலும், அவற்றின் நிர்வாகிகள் தமது கருத்துக்களைப் பதிவு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அக்கட்சியின் மாநில செயலாளர் காயல் மகபூப் தீர்மானங்களை முன்மொழிய, தக்பீர் முழக்கத்துடன் அனைவரும் தீர்மானங்களை அங்கீகரித்தனர்.
நிறைவேற்றப்பட்ட இயக்கத் தீர்மானங்கள் வருமாறு:-
கட்சியை வலிமைப்படுத்தல்:
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவராக மத்திய அமைச்சர் இ. அஹமது சாகிப், பொதுச்செயலாளராக பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், பொருளாளராக பி. குஞ்ஞாலிகுட்டி ஆகியோரும் தேசிய நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டதற்கு இப்பொதுக்குழு மனமார்ந்த பாராட்டு தலையையும், வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
இந்த சிறப்பான தேசிய தலைமையின் வழிகாட்டுதலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகை வலிமைப்படுத்தும் வகையில் அதன் துணை அமைப்புகளான முஸ்லிம் யூத் லீக், முஸ்லிம் மாணவர் பேரவை, சுதந்திர தொழிலாளர் யூனியன், முஸ்லிம் மகளிர் அணி அமைப்புக்களை தமிழகத்தின் அனைத்து ஊர் களிலும் இந்த ஆண்டு இறுதிக்குள் அமைத்திட வேண்டுமென அனைத்து மாவட்ட, பிரைமரி நிர்வாகிகளையும் இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
ஏப்ரல் 02-ல் மாவட்டத் தலைநகரங்களில் கவன ஈர்ப்பு பேரணி:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில், நீதி அரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, கல்வி - வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத தனி இடஒதுக்கீடு நாடு தழுவிய அளவில் வழங்க வேண்டும் என்றும், இந்தியா முழுவதும் முழுமையான மது விலக்கை அமல்படுத்த கோரியும், நீண்ட கால விசாரணை சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரியும் அனைத்து மாவட்ட, மாநில தலைநகர்களிலும் கவன ஈர்ப்பு பேரணிகளை வரும் ஏப்ரல் 02ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடத்துவது என்றும், இப்பேரணியின் முடிவில் மாநிலத் தலைமையால் தயாரித்து அனுப்பப்படும் மனுவை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவரிடம் சமர்ப்பிப்பது எனவும் இக்கூட்டம் முடிவு செய்தது.
மார்ச் 10 இ.யூ.முஸ்லிம் லீக் நிறுவன தின விழா:
மார்ச் 10 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன தின மாகும், அன்றைய தினம் தமிழ கத்தின் அனைத்து ஊர் களிலும் பச்சிளம் பிறைக் கொடிகளை ஏற்றி விழா நடத்துமாறு அனைத்து பிரைமரிகளையும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு, இயக்கத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதர தீர்மானங்கள்:
அதன் தொடர்ச்சியாக, பருவ மழை பொய்த்ததால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்கல்,
வேகமாக உயர்ந்து வரும் அரிசி விலையைக் கட்டுப்படுத்தல்,
வன்முறை, பாலியல் வன்முறை, திருட்டு போன்ற பல்வேறு வகையான குற்றச் செயல்களுக்கும் அடிப்படையான மது ஒழிக்கும் வகையில், இந்தியா முழுக்கவும் - அதற்கு முன்மாதிரியாக துவக்கமாக தமிழகத்திலும் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தல்,
திண்டுக்கல் - சபரிமலை வழித்தடத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள அகல ரயில் பாதையை விரைவாக நிறைவேற்றல்,
தமிழக மீனவர்கள் நலன் காத்தல், தண்டனை வழங்கப்பட்டால் இருக்க வேண்டிய கால அளவை விட நீண்ட காலமாக விசாரணைக் கைதிகளாக உள்ள முஸ்லிம்களை விடுதலை செய்தல்,
முஸ்லிம்களாக மதம் மாறியோரை பிற்பட்ட வகுப்பினர் பட்டியலில் இணைத்தல்
ஆகியவற்றைக் கோரியும்,
பாசிச சக்திகளை வீழ்த்த ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்ட மதச்சார்பற்ற சக்திகளுக்கு வேண்டுகோள் விடுத்தும் இக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும், கட்சியின் மாநில - மாவட்ட - நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
பொதுக்குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து, செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும், www.muslimleaguetn.com என்ற அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது. |