இரண்டாம் சுற்று பல்ஸ் போலியோ முகாம் இன்று நடைபெறுகிறது. முதல் முகாம் கடந்த மாதம் 20 ம் தேதி அன்று நடைபெற்றது. இன்று நடைபெறும் முகாம் குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்தி குறிப்பு வருமாறு:
கடந்த ஜனவரி மாதம் 20-1-2013 அன்று, முதல் சுற்று பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அதில் 70.3 இலட்சம் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பயனடைந்தனர். வருகின்ற 24-2-2013 அன்று, இரண்டாம் சுற்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்துவதற்கு பொது சுகாதாரத்துறை அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளது. முதல் சுற்று முகாமில், போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட
அனைத்து குழந்தைகளுக்கும் மற்றும் கடந்த ஒரு மாதத்தில் பிறந்துள்ள குழந்தைகளுக்கும் 24-2-2013 ஞாயிறு அன்று சொட்டு மருந்து கொடுக்கப்படும்.
சிறப்பு சொட்டு மருந்து மையங்கள்
முதல் சுற்றின் போது, 40,000-க்கும் மேற்பட்ட சொட்டு மருந்து மையங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் ஏற்படுத்தப்பட்டு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இரண்டாம் சுற்றிலும், அதே மையங்களில் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பயணத்தில் இருக்கும் குழந்தைகளுக்கான சிறப்பு ஏற்பாடுகள்:
பயணத்தில் இருக்கும் குழந்தைகளுக்காக கூடுதலாக 1013 சிறப்பு மையங்கள், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இரவு, பகலாக மூன்று நாட்களுக்கு இம்மையங்கள் செயல்படும்.
தொலை தூர பகுதி வாழ் குழந்தைகளுக்கு நடமாடும் குழுக்கள்:
தொலை தூரம் உள்ள கிராமங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு 771-க்கும் மேற்பட்ட நடமாடும் குழுக்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பொது மக்களுக்கான முக்கிய செய்தி:
1) 24-2-2013 அன்று 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும்.
2) தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி, ஓரிரு நாட்களுக்கு முன் சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாட்களில் மீண்டும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும்.
3) சொட்டு மருந்து வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கு குழந்தைகளின் விரலில் மை வைக்கப்படுகிறது.
4) சொட்டு மருந்து வழங்கும் மையம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.
பிற துறைகளின் பங்கீடு:
இந்த முகாமில் சமூக நலத்துறை, ICDS, கல்வித்துறை, வருவாய் துறை , ஊரக வளர்ச்சி துறை, நகராட்சி நிர்வாக துறை ஆகிய அரசு துறைகள் மற்றும் அரசு சாராத்துறைகளான ரோட்டரி, இந்திய மருத்துவ கழகம் (IMA), இந்திய குழந்தைகள் கழகம் (IAP), லைன்ஸ் கிளப் ஆகியவைகளும் ஈடுபடுகின்றன. மேலும் 2 இலட்சம் பணியாளர்கள் இம் முகாமில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
போலியோ இல்லாத தமிழகம்:
இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக போலியோ நோய் பாதிப்பு இல்லை. தமிழ்நாட்டில் கடந்த 9 ஆண்டுகளாக போலியோவினால் எந்தக் குழந்தையும் பாதிக்கப்படவில்லை. ஆனாலும் நாட்டின் வேறு பகுதிகள் மற்றும் வேற்று நாடுகளிலிருந்து போலியோ வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பிருப்பதால், இங்குள்ள அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ முகாம் நாளன்று சொட்டு மருந்து கொடுப்பது மிகவும் அவசியம்.
அனைத்து பெற்றோர்களும் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஊனமற்ற சமுதாயத்தை உருவாக்க உறுதி எடுப்போம்
(ஜெ. ராதாகிருஷ்ணன்)
அரசு செயலாளர்.
இவ்வாறு அச்செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி – மக்கள் தொடர்புத் துறை,
சென்னை-9. |