வணிகம் செய்வதற்காகவும், வேலைவாய்ப்பு தேடியும் பெங்களூரு நகருக்குச் செல்லும் காயலர்கள் தங்குவதற்காக, விடுதி கட்ட இடம் வாங்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் கட்டிடப் பணிகள் துவங்கும் என்றும், பெங்களூரு காயல் நல மன்றத்தின் மூத்த உறுப்பினர் அப்துர்ரஹ்மான் புகாரீ தெரிவித்துள்ளார்.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, பெங்களூரு காயல் நல மன்றத்தின் செயலாளர் எம்.எம்.சுலைமான் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பெருங்கிருபையால், எமது பெங்களூரு காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சி, 17.02.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை, கொடைவள்ளல் மர்ஹூம் ஆடிட்டர் பி.எஸ்.எம்.புகாரீ ஹாஜி அவர்களின் குடும்பத்தாருக்குச் சொந்தமான - பெங்களூரு தேவனஹள்ளி பகுதியில் அமைந்துள்ள பசுமைத் தோட்டத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தார் வருகை:
மன்ற அங்கத்தினர் தம் குடும்பத்தினருடன் காலை 08.00 மணி முதல் 09.00 மணிக்குள், தம் சொந்த வாகனங்களிலும், வாடகை வாகனங்களிலும் நிகழ்விடம் வந்து சேர்ந்தனர்.
காலை உணவு:
துவக்கமாக அனைவருக்கும் காலை உணவாக இட்லி - சாம்பார் - வடை ஆகிய உணவுப் பதார்த்தங்களும், தேனீர் - குளிர்பானம் உள்ளிட்டவையும் பரிமாறப்பட்டது.
குழந்தைகளுக்கு வரவேற்பு:
கூட்டத்தில் பங்கேற்பதற்காக தம் குடும்பத்தினருடன் இணைந்து வந்திருந்த குழந்தைகள் அனைவரையும் வரவேற்குமுகமாக, காலை 09.30 மணியளவில் மன்ற நிர்வாகத்தின் சார்பில் அனைத்துக் குழந்தைகளுக்கும் - வண்ண க்ரேயான் பென்சில்கள், விளையாட்டு முகமூடி ஆகியன அடங்கிய வரவேற்புப் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
மகளிருக்கான விளையாட்டுப் போட்டிகள்:
காலை 10.00 மணியளவில், உள்ளரங்கில் மகளிருக்கான விளையாட்டுப் போட்டிகள் துவங்கியது. சமையல் வாசனைப் பொருட்களை புட்டியில் அடைத்து வைத்து, போட்டியாளரின் கண்கள் கட்டப்பட்ட நிலையில், அப்பொருட்களை நுகர்ந்து அவற்றின் பெயர்களைக் கூறச் செய்யும் ‘நுகர்ந்து பொருளறிதல்’ போட்டி, வந்திருந்த மகளிர் மனதில் நீங்கா இடம்பெற்றது. மகளிருக்கான போட்டிகளை, சகோதரி எம்.யு.ஜைனப் வழிநடத்தினார்.
பின்னர், தேனீர் இடைவேளை விடப்பட்டது. அதே நேரத்தில், பொதுக்குழுக் கூட்டத்திற்கான அரங்க ஏற்பாடுகள் நடைபெற்றது.
பொதுக்குழுக் கூட்டம்:
காலை 11.00 மணியளவில் பொதுக்குழுக் கூட்டம் முறைப்படி துவங்கியது.
சிறப்பு விருந்தினர்கள்:
காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியின் நிறுவனர் வழக்குறைஞர் அஹ்மத்,
வணிகப் பெருந்தகைகளான ஹாஜி டூட்டி முஹம்மத் முஹ்யித்தீன், ஹாஜி கே.ஏ.ஆர்.அஜ்மல் புகாரீ, ஹாஜி கே.ஏ.ஆர்.முஹ்யித்தீன் அப்துல் காதிர்,
அபூதபீ காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினரும், பெங்களூரு காயல் நல மன்றத்தின் முன்னாள் உறுப்பினருமான வி.எஸ்.டி.ஷேக்னா லெப்பை,
காயல்பட்டினம் தாருத்திப்யான் நெட்வர்க் நிறுவனர் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பழைப்பாளர்களாகவும், சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர். துவக்கமாக அனைவருக்கும் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.
வரவேற்புரை:
மன்ற உறுப்பினர் ஷாஹுல் ஹமீத் பாதுஷா கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். மன்றத்தின் துணைத்தலைவர் கே.கே.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தி, கூட்ட அறிமுகவுரையாற்றியதோடு, அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
மன்றம் துவங்கிய பிறகு, முதன்முறையாக இவ்வளவு விமரிசையாக இக்குடும்ப சங்கம நிகழ்ச்சி நடத்தப்படுவதாகவும், இதற்காக இரண்டு மாதங்கள் உழைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள காயலர்களுக்கு இணையதளம் மூலம் கனிசமான மருத்துவ உதவிகளைப் பெற்று வழங்குவதற்காக துவக்கப்பட்டு, இயங்கி வரும் மைக்ரோகாயல் நிர்வாகத்தின் மூலம் - ஒத்துழைப்பு கோரி மன்றத்தால் பெறப்பட்ட வேண்டுகோள் குறித்து விளக்கிப் பேசிய அவர், இக்கூட்டத்தின் ஒப்புதலுடன் ‘மைக்ரோகாயல்’ திட்டத்திற்கான பெங்களூரு பகுதி ஒருங்கிணைப்பாளராக தான் செயல்படவுள்ளதாகவும், இத்திட்டத்தில் அங்கமாக விரும்பும் மன்ற உறுப்பினர்கள், தனிப்பட்ட முறையில் தன்னைத் தொடர்புகொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்து தனதுரையை நிறைவு செய்தார்.
பின்னர், உறுப்பினர்களின் விபரங்களையும் சேகரிப்பதற்காக, மன்றத்தின் சார்பில் அனைத்துறுப்பினர்களுக்கும் படிவம் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட வழக்குறைஞர் துளிர் அஹ்மதின் சேவைகளைப் பாராட்டி, அவருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
முன்னாள் தலைவர் உரை:
அவரைத் தொடர்ந்து, மன்றத்தின் முதல் மற்றும் முன்னாள் தலைவரும், நடப்பு ஆலோசனைக் குழு உறுப்பினருமான எம்.எம்.அப்துர்ரஹீம் உரையாற்றினார்.
கடந்த காலங்களில் பெங்களூரு காயல் நல மன்றம் - அனைத்துறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் தனது தலைமையில் செயல்பட்டபோது, மன்றத்தால் செய்து முடிக்கப்பட்ட நகர்நலப் பணிகள் மற்றும் செயல்திட்டங்களை நினைவுகூர்ந்து அவரது உரை அமைந்திருந்தது.
சிறப்பு விருந்தினர்கள் உரை-1:
பின்னர், சிறப்பு விருந்தினர்களின் வாழ்த்துரை நிகழ்ச்சி துவங்கியது. துவக்கமாக, ஹாஜி டூட்டி முஹம்மத் முஹ்யித்தீன் உரையாற்றினார்.
பெங்களூர் என்றாலே ஒரு காலத்தில் மர்ஹூம் ஆடிட்டர் புகாரீ ஹாஜி அவர்களின் பெயர்தான் நினைவுக்கு வரும்... அன்று மிக சொற்பமானவர்களே அன்று பெங்களூருவில் இருந்தனர்.
பிற்காலத்தில், தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்ட புரட்சி காரணமாக, இன்று ஏரானமான காயலர்கள் - அதுவும் இளைஞர்கள் பெங்களூருவில் நிறைந்து வாழ்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
துவக்க காலம் தொட்டு இன்றளவும், நமதூர் மக்களுக்கு உறுதுணையாக இருந்து வரும் மர்ஹூம் ஆடிட்டர் புகாரீ ஹாஜி குடும்பத்தாரின் அனுசரிப்பு மகத்தானது. அதற்கான நிறைவான நற்கூலிகளை வல்ல அல்லாஹ் அக்குடும்பத்தாருக்கு வழங்கியருள்வானாக...
இவ்வாறு ஹாஜி டூட்டி முஹம்மத் முஹ்யித்தீன் உரையாற்றினார்.
சிறப்பு விருந்தினர்கள் உரை-2:
அடுத்து, துளிர் அறக்கட்டளை மற்றும் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியின் நிறுவனர் வழக்குறைஞர் அஹ்மத் உரையாற்றினார்.
பெங்களூரு காயல் நல மன்றத்தின் நகர்நலப் பணிகளைப் பாராட்டிப் பேசிய அவர், துளிர் பள்ளியின் அடுமனைப் பிரிவிற்கு பதார்த்தங்கள் செய்வதற்கான மாவு பிசையும் கருவியை அன்பளிப்பு செய்தமைக்காக, பெங்களூரு காயல் நல மன்றத்தை மனதாரப் பாராட்டுவதாகவும், மன்றத்தின் பணிகள் சிறக்க துஆ செய்வதாகவும் கூறிய அவர், இணையதளம் மூலம் இக்கூட்டம் நடைபெறும் செய்தியை அறிந்துகொண்டு, நேரில் நன்றி தெரிவிப்பதற்காகவே தான் பெங்களூரு வந்துள்ளதாகக் கூறினார்.
பின்னர், தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசை தான் இதுவரை திறந்து பார்க்கவில்லை என்று கூறி, நினைவுப் பரிசையும், தனக்களிக்கப்பட்ட சால்வையையும் கூட்டத்திலேயே ஏலம் விட்டார். அதன்மூலம் பெறப்பட்ட நிதியை துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி வளர்ச்சி நிதிக்காக செலவிடப்படும் என்று அவர் கூறினார்.
சிறப்பு விருந்தினர்கள் உரை-3:
அடுத்து, அபூதபீ காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் வி.எஸ்.டி.ஷேக்னா லெப்பை உரையாற்றினார்.
இன்று இன்னொரு மன்றத்தில் அங்கமாக உள்ளபோதிலும், தான் பெங்களூரு காயல் நல மன்றத்தின் துவக்க கால உறுப்பினர் என்பதை மகிழ்வுடன் தெரிவிப்பதாகக் கூறிய அவர், பணி நிமிர்த்தம் பெங்களூரு நகருடன் தொடர்ந்து தனக்கு தொடர்பிருக்கும் என்பதால், தன்னையும் மன்ற உறுப்பினராக இணைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
சிறப்பு விருந்தினர்கள் உரை-4:
அடுத்து, காயல்பட்டினம் தாருத்திப்யான் நெட்வர்க் நிறுவனர் எஸ்.கே.ஸாலிஹ் உரையாற்றினார். அவரது உரைச்சுருக்கம் வருமாறு:-
பெங்களூரு காயல் நல மன்றம் துவக்கப்பட்ட காலகட்டம் முதல், அண்மைக் காலம் வரை மிகுந்த சிரமங்களுக்கிடையிலேயே நடத்தப்பட்டு வருகிறது... இத்தனை காலங்களில் பல கூட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளபோதிலும், இன்று இக்கூட்டத்தில்தான் பெரும்பாலான உறுப்பினர்களை நிறைவாகக் காண வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
துவங்கப்பட்ட காலம் முதல் இதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு, ஓய்வைப் பற்றிக் கவலைப்படாமல் உழைத்து வரும் ஒரு சில இளைஞர்கள் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள். தம் சொந்தப் பணிகளுக்கே நேரம் குறைவாக உள்ள இக்காலகட்டத்தில், இவர்கள் நகர்நலனுக்காக ஒரு மன்றம் தேவை என்று கருதி, இன்றளவும் இடைவெளியின்றி இயங்கி வருவது மிகுந்த சிறப்பிற்குரியது.
சமூக சேவைக்கு வயது ஒரு பொருட்டல்ல. இன்னும் சொல்வதானால், பெரியவர்களால் பக்குவமிக்க ஆலோசனைகளை - அவர்களது அனுபவத்தினடிப்படையில் வழங்க முடியுமெனில், இளைஞர்கள் அவற்றை மிகக் குறுகிய காலத்தில் திறம்பட செய்து முடிக்க இயலும். எனவே, ஓரமைப்பு முழு வலிமையுடன் வெற்றிகரமாக செயல்பட மாணவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரின் அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாடு இன்றியமையாதது.
நல்ல வேலைவாய்ப்பு, நல்ல ஊதியம், நல்ல சுதந்திரம் என்ற அடிப்படையில் வாழும் இங்குள்ள நமதூர் இளைஞர்கள் நினைக்கும்போது, இளரத்தம் நிறைந்த இம்மன்றத்தை பல விஷயங்களில் உலக காயல் நல மன்றங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழச் செய்ய இவர்களால் முடியும் என்று உறுதியாகக் கூறலாம்.
இங்கு குறிப்பிடப்பட்டது போல, பெங்களூரு என்றாலே மர்ஹூம் ஆடிட்டர் புகாரீ ஹாஜிதான் ஒரு காலத்தில் நினைவுக்கு வருவார்கள். அவர்களின் மகத்தான சமூகச் சேவையை தொடர்ந்து செய்யுமுகமாக இன்று மன்றம் துவங்கிய பிறகும், அக்குடும்பத்தினர் தொடர்ந்து சிறந்த ஒத்துழைப்புகளை வழங்கி வருவதைப் பார்க்கும்போது, இம்மன்றத்தின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கொடுத்து வைத்தவர்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது... அன்றைய தனிச் சேவை முதல் இன்றைய மன்றச் சேவைகள் வரை அனைத்து சேவைகளுக்கான நன்மைகளையும், மர்ஹூம் ஆடிட்டர் புகாரீ ஹாஜி அவர்களுக்கும் அல்லாஹ் நிறைவாக வழங்கியருள்வானாக...
கல்வி - வேலைவாய்ப்பு துறைகளில் விழிப்புணர்வு, வழிகாட்டல்களை நம் நகர மக்களுக்கு வழங்குவதற்காக ஒவ்வொரு காயல் நல மன்றமும் பெரும்பாலும் தனித்தனியே நிகழ்ச்சிகளை நடத்துவது வழமையாக உள்ளது... இதனால், ஒரே மாதிரியான நிகழ்ச்சியை நடத்துவதற்கு நிறைய நேரம், பொருள், உழைப்பு விரயமாவதுடன், அடிக்கடி நிகழ்ச்சிகளை நடத்துவதன் காரணமாக பள்ளிக்கூட நிர்வாகங்களின் ஒத்துழைப்பைப் பெறும் விஷயத்தில் தர்மசங்கடம் நிலவுகிறது.
இக்குறையைக் களைந்திட, நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடும்போதே உள்ளூர் ஒருங்கிணைப்பாளர்களிடமும், உலக காயல் நல மன்றங்களுடனும் நன்கு கலந்தாலோசித்து திட்டமிட்டால், குறைந்த அளவிலான நிகழ்ச்சிகளை சிறப்பாகவும், முழுப் பயனளிக்கத்தக்கதாகவும் ஆக்கிக்கொள்ள இயலும்.
பெங்களூரு காயல் நல மன்றத்தின் பயணக்காலத்தில், இக்கூட்டம் ஒரு மைல் கல். இனி வருங்காலங்களில், இவ்வமைப்பு சக்திமிக்கதாக உருவாகும் என்பதில் சந்தேகமில்லை. அதற்கு வல்ல அல்லாஹ் துணை புரிவானாக...
இவ்வாறு தாருத்திப்யான் நெட்வர்க் நிறுவனர் எஸ்.கே.ஸாலிஹ் பேசினார்.
மூத்த உறுப்பினர்கள் உரை:
அடுத்து, மன்றத்தின் மூத்த உறுப்பினர் ஜாஹிர் ஹுஸைன் உரையாற்றினார். குடும்ப அட்டை, கடவுச்சீட்டு, வாக்காளர் அடையாள அட்டை, பள்ளிப்பதிவு, பிறப்பு – இறப்பு உள்ளிட்ட அரசுப் பதிவுகளில், நன்கு கவனித்து ஒரே மாதிரியாக பதிவு செய்வது இக்காலத்தில் இன்றியமையாதது என்றும், சில இளைஞர்கள் - தம் படிப்புக்கேற்ற நல்ல வேலைவாய்ப்புகளைப் பெற்ற நிலையில், அதற்கான சான்றிதழ்களை வழங்கும்போது அவற்றில் முரண்பாடுகள் காணப்படுவதால் மிகுந்த மன உளைச்சல் ஏற்படுவதாகவும், சில நேரங்களில், நெருங்கி வந்த வேலைவாய்ப்புகளும் நழுவிப்போவதாகவும் கூறியதோடு, இது விஷயத்தில் பெங்களூரு காயல் நல மன்றம் சிறப்புக் கவனம் செலுத்தி செயல்திட்டம் வகுக்க வேண்டும் என்று கூறினார்.
அடுத்து, ஹனீவெல் நிறுவனத்தில் பணிபுரியும் - மன்றத்தின் துணைத்தலைவரும், விஞ்ஞானியுமான இப்றாஹீம், மன்றத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஷேக்னா லெப்பை ஆகியோர் உரையாற்றினர்.
அடுத்து, மர்ஹூம் ஆடிட்டர் புகாரீ ஹாஜியின் மகனும், மன்ற உறுப்பினருமான அப்துர்ரஹ்மான் புகாரீ உரையாற்றினார்.
வணிகம் செய்வதற்காகவும், வேலைவாய்ப்புக்காகவும் பெங்களூரு நகருக்கு வருகை தரும் காயலர்கள் சிரமமின்றி தங்குவதற்காக, துவக்க காலத்தில் தனதில்லத்தை - தன் தந்தையவர்கள் தந்துதவியதாகவும், இவர்களுக்காக தங்கும் விடுதியொன்றை அமைக்க வேண்டும் என்பது அவர்களின் நீண்டநாள் கனவாகவே இருந்ததாகவும் கூறிய அவர், அதற்காக நிலம் வாங்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் கட்டிடப் பணிகள் துவக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.
தலைமையுரை:
பின்னர், மன்றத் தலைவரும் - நடப்பு கூட்டத் தலைவருமான பி.எஸ்.ஏ.எஸ்.ஜெய்த் நூருத்தீன் உரையாற்றினார்.
இன்று இவ்வளவு சிறப்பாக கூட்டம் நடத்தப்படுவதற்கு முழுமூச்சாய் உழைத்த அனைத்து இளைஞர்களையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன்...
இத்தனை காலமாக, மிகுந்த சிரமங்களுக்கிடையில் இந்த மன்றத்தை நிர்வகித்து, வழிநடத்தி இன்று பல சிரமங்கள் குறைக்கப்பட்ட நிலையில் புதிய நிர்வாகத்திடம் கையளித்துள்ள இம்மன்றத்தின் முதல் - மூத்த நிர்வாகிகளுக்கு எனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்...
பட்டப்படிப்பு முடித்து, வேலைவாய்ப்பு பெறுவதற்கு வழி தெரியாமல் நான் திக்கித் திணறிய நேரத்தில், என் மேல் அக்கறை கொண்ட நமதூரைச் சேர்ந்த ஒரு நல்லவர் இன்று நான் நல்ல வேலைவாய்ப்புடன் இந்தளவுக்கு நல்ல நிலைக்கு வருவதற்குக் காரணமாக இருந்துள்ளார்... அன்று நான் சந்தித்த சிரமங்களை, இனி நமதூர் இளைஞர்கள் சந்திக்கக் கூடாது என்று கருதி, எனது சிறிய முயற்சியில் பத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இதுபோலவும், இன்னும் சிறப்பாகவும் நம் மன்ற உறுப்பினர்கள் - குறிப்பாக, நல்ல வேலைவாய்ப்பில் உள்ளவர்கள் எண்ணம் கொண்டு, நமதூரின் தகுதிமிக்க இளைஞர்களுக்கு தகுந்த வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்... இதையே மன்றத்தின் முக்கிய செயல்திட்டமாகவும் கொண்டு செயல்பட வேண்டும்...
இவ்வாறு மன்றத் தலைவர் ஜெய்த் நூருத்தீன் பேசினார்.
உழைத்தோருக்கு ஊக்கப்பரிசுகள்:
பின்னர், நடப்பு கூட்டம் மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சி சிறப்புற நடைபெறுவதற்கு முழு உழைப்பு செய்தவர்களில் கூடுதல் உழைப்பு செய்த இப்றாஹீம் நவ்ஷாத், கே.கே.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் ஆகியோருக்கு மன்றத்தின் சார்பில் ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது. மன்றத் தலைவர் அவற்றை வழங்கினார்.
செயலர் உரை:
பின்னர், கடந்த கூட்ட நிகழ்வறிக்கை மற்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செயல்படுத்தப்பட்ட விதம் குறித்து, மன்றச் செயலாளர் எம்.எம்.சுலைமான் விளக்கிப் பேசினார்.
மன்ற உறுப்பினர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாடுகளைப் புகழ்ந்து பேசிய அவர், பெங்களூரு நகரிலிருந்தும், இதுவரை மன்றத்தில் இணையாத காயலர்களை, மன்றத்தின் சார்பில் சிறப்புக் குழு அமைத்து நேரில் சந்தித்து, மன்றத்தில் இணைய கேட்டுக்கொள்ளும் திட்டம் உள்ளதாகவும், விரைவில் அது செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்.
உறுப்பினர் கருத்துப் பரிமாற்றம்:
பின்னர், கூட்டத்தில் பங்கேற்றோர் கருத்துப் பரிமாற்றத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டது. நகர்நலன் குறித்த பல்வேறு அம்சங்கள் இந்நேரத்தில் விவாதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - மறைந்தோருக்கு இரங்கல்:
அண்மையில் காலமான
காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ,
அபூதபீ காயல் நல மன்ற பொருளாளரின் தந்தை ஹாஜி கத்தீப் எம்.எம்.செய்யித் முஹம்மத் புகாரீ,
எழுத்தாளர் சாளை பஷீரின் சகோதரியும், பெங்களூரு காயல் நல மன்ற உறுப்பினர் ஷேக் அப்துல் காதிரின் மாமியுமான ஹாஜ்ஜா சாளை ரஹ்மத் ரஃபீக்கா,
இக்ராஃ கல்விச் சங்க பொருளாளரும், ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை செயலாளரும், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் துணைச் செயலாளருமான கே.எம்.டி.சுலைமான் தாயார் கோ.முஹம்மத் மீரா நாச்சி,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - தமிழ்நாடு மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப் தாயார் அஹ்மத் முஹ்யித்தீன் ஃபாத்திமா (லெப்பை)
ஆகியோரின் மறைவுக்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், அவர்களின் மறுமை நல்வாழ்விற்காக மனதார பிரார்த்திக்கிறது.
தீர்மானம் 2 - உலக கா.ந.மன்றங்களின் விபரங்கள் சேகரிப்பு:
உலகின் அனைத்து காயல் நல மன்றங்கள், அவற்றின் நடப்பு நிர்வாகக் குழுவினர், அவற்றின் உள்ளூர் பிரதிநிதிகள் ஆகியோரின் விபரப்பட்டியல் மற்றும் அவர்கள் அனைவரது தொடர்பு விபரங்களை அனைத்து மன்றங்களிடமும் முறைப்படி கேட்டுப் பெற இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 3 – சிங்கை கா.ந.மன்றத்திற்கு கோரிக்கை:
வேலைவாய்ப்பு தேடி சென்னைக்கு வரும் காயல்பட்டினத்தைச் சேர்ந்த தகுதியுள்ள இளைஞர்களுக்கு உணவு, தங்குமிடம் அளித்து உதவும் சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் இந்த நல்ல திட்டத்தை விரிவாக்கி, சென்னையைப் போல பெங்களூரு நகருக்கு வேலைவாய்ப்புத் தேடி வரும் இளைர்களுக்கும் உதவுமாறு அம்மன்றத்திற்கு முறைப்படி கோரிக்கை வைப்பதென்றும், அதற்கான முழு ஒத்துழைப்பை மன்றத்தின் சார்பில் அளிப்பதென்றும், இதே திட்டத்தை மன்றத்தின் சார்பிலேயே நிறைவேற்ற விரைந்து செயல்திட்டங்கள் வகுத்து செயல்படுத்துவதென்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 4 – அடுத்த கூட்ட ஒருங்கிணைப்பாளர்கள்:
மன்றத்தின் அடுத்த கூட்டத்தை ஒருங்கிணைக்க,
கே.எஸ்.எம்.எல்.முஹம்மத் உமர்
ஷேக்னா லெப்பை
வாவு முஹம்மத்
ஷிஹாபுத்தீன்
ஹாஃபிழ் மன்னர் செய்யித் அப்துர்ரஹ்மான்
ஆகியோரிடம் இக்கூட்டம் பொறுப்பளிக்கவும், அவர்களுக்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் மன்ற நிர்வாகக் குழு முறைப்படி செய்யவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
பொறுப்பளிக்கப்பட்ட இக்குழுவினர் சிறப்புக் கூட்டம் நடத்தி, அனைத்து உறுப்பினர்களுடனும் கலந்தாலோசித்த பின்னர், கூட்ட தேதி, நிகழ்விடம் குறித்து இறுதுி முடிவு எடுப்பர்.
தீர்மானம் 5 – காயல்பட்டினம்-பெங்களூரு போக்குவரத்து குறைபாடுகளை சரிசெய்ய கோரிக்கை:
காயல்பட்டினத்தில் குறைந்த உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பிவடங்களால், அங்கிருந்து பெங்களூரு நகருக்கு இயக்கப்பட்டு வரும் தனியார் சொகுசுப் பேருந்துகளின் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது குறித்து இக்கூட்டம் வருத்தம் தெரிவிக்கிறது.
காயல்பட்டினம் - பெங்களூரு, பெங்களூரு - காயல்பட்டினம் வழித்தடத்தில் இயங்கி வரும் அரசுப் பேருந்துகள், தனியார் சொகுசுப் பேருந்துகளின் நடப்பு சேவைக் குறைபாடுகளைக் களைந்து, தொடர்ந்து சீரான சேவையளிக்கக் கோரி, அந்நிர்வாகங்களுக்கு மன்றத்தின் சார்பில் முறைப்படி கடிதம் எழுதுவதென இக்கூட்டம் தீர்மானிப்பதுடன்,
குறைவான உயரத்தில் அமையப் பெற்றுள்ள மின் கம்பிவடங்களை பேருந்து போக்குவரத்திற்குத் தோதுவாக உயர்த்தியமைக்கக் கோரி, காயல்பட்டினம் மின்வாரிய அலுவலகத்திற்குக் கடிதம் எழுதவும், அனைத்து கடிதங்களின் நகல்களையும், நகர்மன்றத் தலைவர் உள்ளிட்ட நகராட்சி நிர்வாகத்திற்கு அனுப்பவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 6 – மைக்ரோகாயல் குழுமத்திற்கு ஒத்துழைப்பு:
காயல்பட்டினத்திலுள்ள - பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள மக்களின் மருத்துவத் தேவைகளுக்காக இணையதளம் மூலமாக நிதி சேகரித்து உதவி வரும் மைக்ரோ காயல் நிர்வாகத்திற்கு, மன்றம் தன்னாலியன்ற அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கும் என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 7 – முஸ்லிம் லீக் துணைச் செயலாளரான காயலருக்கு வாழ்த்து:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காட்சியின் தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர்களுள் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள - காயல்பட்டினத்தைச் சேர்ந்த எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ அவர்களை இக்கூட்டம் பாராட்டுவதோடு, அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிறது.
தீர்மானம் 8 – எல்.கே.மேனிலைப்பள்ளி கால்பந்து அணிக்கு பாராட்டு:
அண்மையில், குடியரசு நாளையொட்டி நடத்தப்பட்ட - பள்ளி மாணவர்களுக்கான சீனியர் பிரிவு கால்பந்துப் போட்டியில், மாநில அளவில் முதலிடம் வென்று, வரலாற்றுச் சாதனை புரிந்துள்ள காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் கால்பந்து அணி வீரர்களையும், அதற்காக உழைத்த பள்ளி தலைமையாசிரியர், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியளித்தோரையும் இக்கூட்டம் மனதார பாராட்டுகிறது.
தீர்மானம் 9 – அரசுத் தேர்வெழுதும் மாணவ-மாணவியருக்கு வாழ்த்து:
வரும் மார்ச் மாதம் முதல், எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் ப்ளஸ் 2 அரசு பொதுத்தேர்வு எழுதவுள்ள காயல்பட்டினத்தின் அனைத்துப் பள்ளி மாணவ-மாணவியரும் 100 சதவிகித தேர்ச்சி பெறவும், மாநில - மாவட்ட அளவில் சாதனைகள் பல புரிந்திடவும் இக்கூட்டம் மனதார வாழ்த்துக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்ட நிறைவு:
நன்றியுரையைத் தொடர்ந்து, ஹாஃபிழ் என்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்தில், மன்ற உறுப்பினர்கள், அவர்கள்தம் குடும்பத்தினர் என சுமார் 75 பேர் கலந்துகொண்டனர்.
கூட்ட நிறைவுக்குப் பின், லுஹர் தொழுகை ஜமாஅத்துடன் (கூட்டாக) நிறைவேற்றப்பட்டது.
மதிய உணவு விருந்துபசரிப்பு:
தொழுகையைத் தொடர்ந்து, கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் காயல்பட்டினம் பாரம்பரிய முறைப்படி சுவையான களறி சாப்பாட்டுடன் விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
கூட்டத்தில் கலந்துகொண்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு குறித்த விபரங்கள் அடுத்த செய்தியில் தரப்படும்.
இவ்வாறு, பெங்களூரு காயல் நல மன்றத்தின் செயலாளர் எம்.எம்.சுலைமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
செய்தியாக்கம்:
K.K.S.முஹம்மத் ஸாலிஹ் (துணைத்தலைவர்)
M.M.சுலைமான் (செயலாளர்)
ஹாஃபிழ் மன்னர் B.A.செய்யித் அப்துர்ரஹ்மான் (ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்)
இப்றாஹீம் நவ்ஷாத் (ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்)
வடிவமைப்பு & படங்கள்:
S.K.ஸாலிஹ் |