தமிழகம் முழுவதும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இளம்பிள்ளை வாத (போலியோ) தடுப்பு சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில், முகாம் துவக்க நிகழ்ச்சி - முள்ளக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், இன்று காலை 07.00 மணியளவில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் கலந்துகொண்டு, குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டி, முகாமைத் துவக்கி வைத்தார்.
பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இன்று போலியோ தடுப்பு சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில், 5 வயதுக்குட்பட்ட 1,50,000 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டுவதற்கு, மாவட்டம் முழுவதும் 1104 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சுகாதாரத் துறை, மருத்துவத்துறை, சமூக நலத்துறை, சத்துணவு, வருவாய்த் துறை, கல்வித்துறை ஆகியவற்றின் பணியாளர்கள், ரோட்டரி, லயன்ஸ் க்ளப் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் ஊழியர்கள், சுய உதவிக் குழுக்களின் அங்கத்தினர் ஆகியோரை ஒருங்கிணைத்து, மாவட்டத்திலுள்ள துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், சத்துணவு மையங்கள், சமுதாய நலக்கூடங்கள் உள்ளிட்ட இடங்களில் முகாம் அமைத்து போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டப்படுகிறது.
பேருந்து நிலையங்கள், தொடர்வண்டி நிலையங்கள், திருச்செந்தூர் கோவில் உள்ளிட்ட பொதுமக்கள் கூடுமிடங்களில் சிறப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு இதற்கு முன் எத்தனை முறை போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டப்பட்டிருந்தாலும், இன்று நடைபெறும் முகாமிலும் சொட்டு மருந்து புகட்டப்பட வேண்டும்.
சிறு வியாதிகளான காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு, இருமல் இருந்தாலும் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டலாம். எக்காரணம் கொண்டும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டாமல் இருக்கக் கூடாது என்றும், அவ்வாறு புகட்டுவதன் மூலம், போலியோ கிருமிகள் பரவுவதைத் தடுத்து, போலியோ நோயே இல்லை என்ற நிலையை உருவாக்க முன் வருமாறு பொதுமக்களை அரசு கேட்டுக்கொண்டுள்ளது. |