காயல்பட்டினம் நகர அதிமுகவினர் சார்பில் நடத்தப்பட்ட - முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில், நகர்மன்றத் தலைவர் கலந்துகொண்டு மரங்களை நட்டினார். விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் நகர அதிமுகவினர் சார்பில், அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் 65ஆவது பிறந்த நாள் விழா, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில், காயல்பட்டினம் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி முனையில் நடைபெற்றது.
நகர அதிமுக நிர்வாகிகளுள் ஒருவரும், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் உள்ளிட்ட - கட்சியின் அங்கத்தினர் முன்னிலை வகித்தனர்.
ஹாஜி எஸ்.ஏ.மெய்தீன் விழாவிற்குத் தலைமை தாங்கி, தலைமையுரையாற்றினார். பாலப்பா முஹம்மத் அப்துல் காதிர், அதிமுகவின் சாதனைகளை விளக்கிப் பேசினார்.
இவ்விழாவில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மக்கள் நலத் திட்டங்களைப் புகழ்ந்து பேசிய அவர், ஒரு பெண்ணாக இருந்துகொண்டு - பல்வேறு இடைஞ்சல்களுக்கிடையிலும், நீதி - நேர்மைக்காக துணிவுடன் செயலாற்றி, மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் நிர்வகித்து வரும் முதல்வரின் கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில், மனதளவில் தான் ஏற்கனவே உறுப்பினராகவே உள்ளதாகவும், இறைவன் நாடினால் விரைவில் முறைப்படி உறுப்பினராகப் போவதாகவும் அவர் தனதுரையில் தெரிவித்தார்.
இறை சக்தி, மக்கள் சக்தி ஆகிய மாபெரும் சக்திகளைத் தாண்டி வேறெந்த சக்தியும் நியாயத்திற்கெதிராக எதையும் சாதிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
பின்னர், ஜெயலலிதா பேரவை தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் ஏரல் எஸ்.ரமேஷ் வாழ்த்துரை வழங்கினார்.
எஸ்.புரட்சி சங்கர் நன்றியுரையுடன் விழா நிறைவுற்றது. பின்னர், முதல்வர் ஜெயலலிதாவின் 65ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, 65 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி துவங்கியது. நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் - விழா நிகழ்விடம் அருகில் மரக்கன்று நட்டு திட்டத்தைத் துவக்கி வைத்தார். பின்னர், முன்பதிவு செய்த பொதுமக்களுக்கு 64 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏரல் எஸ்.ரமேஷ் வினியோகத்தைத் துவக்கி வைத்தார்.
இவ்விழாவில், நகர அதிமுகவினர், மாவட்ட - ஒன்றிய - நகர நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
கள உதவி:
O.A.K.ஷஃபீயுல்லாஹ் |